வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து 9ம்திருநாள் : நம்பெருமாள் முத்துக்குறி அலங்காரத்தில் அருள் பாலித்தார்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து 9ம்நாள் நிகழ்ச்சியில் நம்பெருமாள் முத்துக்குறி அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 8ம் தேதி பகல்பத்து உற்சவத்துடன் துவங்கியது. இதன் நிறைவு நாளான இன்று (17ம் தேதி) நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பகல்பத்து 9ம் நாளான நேற்று நம்பெருமாள்  முத்துகுறி அலங்காரத்தில் முத்து அபயகஸ்தம், முத்து சட்டை, முத்து மாலை, முத்துத்திருவடி, உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்திருந்தார். காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுடன் புறப்பட்டு பகல்பத்து ஆஸ்தான மண்டபமான அர்ச்சுன மண்டபத்தில் காலை 7 மணிக்கு எழுந்தருளினார்.

பின்பு அரையர் சேவை, பொதுஜன சேவையுடன் காலை 7.45மணி முதல் மதியம் 12 மணிவரை பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின் அரையர் இரண்டாம் சேவையில் முத்துக்குறி நிகழ்ச்சியில் மதியம் 1 மணிமுதல் மாலை 3.30 மணிவரை பொதுஜன சேவையுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து மாலை 5 மணிமுதல் 6 மணிவரை உபயக்காரர்கள் மரியாதையுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் நம்பெருமாள் இரவு 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். மூலவர் பெரிய பெருமாள் காலை 7 மணிமுதல் மாலை 5.30 மணிவரையிலும் 6.45 மணிமுதல் இரவு 9 மணிவரை முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Related Stories: