குலம் தழைக்க வைக்கும் குடிபேரம்பாக்கம் ருத்ரேஸ்வரர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்த குடிபேரம்பாக்கம் என்ற கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதுமான ஸ்ரீருத்ரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.  தெலுங்கு மொழியில் கோயிலை குடி என்று அழைப்பர். தமிழ் மொழியில் கோயிலுக்கு தளி என்ற வார்த்தை வழக்கத்தில் உண்டு. கோயில்கள் நிறைந்த இந்த கிராமம் முன்னர் தளிபெரும்பாக்கம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது.   இந்த தகவல்  இந்த கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள வீராபுரம் சிவன் கோயில் கல்வெட்டுக்களின் மூலம் அறியப்படுகிறது. இக்கிராமம் பின்னர் குடிபெரும்பாக்கம் என்று அழைக்கப்பட்டது.   கோயிலுக்குள் நுழைந்ததும் இடது புறத்தில் ஸ்ரீ ஆனந்த விநாயகர் அமர்ந்திருக்கிறார்.   

Advertising
Advertising

அவரை வணங்கி கோசாலையினைக் கடந்து சென்றால் அம்பாள் ஸ்ரீ ருத்ராம்பிகை தெற்கு திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அருகில் கிழக்கு திசை நோக்கி ஸ்ரீருத்ரேஸ்வரர் காட்சி தருகிறார். கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம் என்ற அமைப்புடன் கோயில் திகழ்கிறது.  ஸ்ரீருத்ரேஸ்வரர் கருவறைக்கு வெளிப்புறத்தில் விநாயகரும் முருகப் பெருமானும் உள்ளனர். ஸ்ரீருத்ரேஸ்வர்ருக்கு எதிரே ஒரு மண்டபத்தில் சற்றே பெரிய நந்தியம்பெருமான்

ஸ்ரீருத்ரேஸ்வரரை தரிசித்தபடி அமர்ந்துள்ளார்.  ஸ்ரீருத்ரேஸ்வரரை வணங்கி வெளிப்பிரகாரத்தைச் சுற்றி வரும் போது  கருவறை கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் காட்சி தருகிறார்கள்.

பிரம்மனை நோக்கியபடி ஒரு சிறிய சந்நதியில் சண்டிகேஸ்வரர் அருளாசி வழங்குகிறார். அடுத்ததாக ஸ்ரீருத்ராம்பிகையை வணங்கி சுற்றி வரும் போது கோஷ்டத்தில் மாஸேஸ்வரி, தாட்சாயினி, வைஷ்ணவி, பிராமி, கௌமாரி ஆகிய தெய்வங்கள் காட்சி தருகிறார்கள். சுற்றுப்பாதையில் தெற்கு திசை நோக்க காலபைரவர் சந்நதியும் மேற்கு திசை நோக்கி சந்திரன், நால்வர், சூரியன் ஆகியோர் சந்நதியும் அமைந்துள்ளது. கோயிலுக்கு அருகில் திருக்குளம் அமைந்துள்ளது.

திருக்குளத்திற்கு அருகில் பிரமாண்டமாக சிவபெருமானின் சுதைச் சிற்பம் அமைக்கப்பட்டு பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக திகழ்கிறது. இந்த சுதைச் சிற்பத்தில் கிழக்கு திசை நோக்கி விரிசடையுடன் அமர்ந்த நிலையில் நான்கு கரங்களுடன் சிவபெருமான் காட்சி தருகிறார்.   

ஒரு கரத்தில் சூலாயுதத்தையும் மற்றொரு கரத்தில் உடுக்கையினையும் ஏந்தியுள்ளார்.  வலது கரம் அபய முத்திரையினையும் இடது கரம் வரத முத்திரையிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஜடா முடியோடு கழுத்தில் பாம்புடன் காட்சி தருகிறார்.  கழுத்தில் ருத்திராட்ச மாலைகளை அணிந்து வலது காலை தாமரை மலர் மீதும் இடது காலை மடக்கி அமர்ந்த நிலையிலும் காட்சி தருகிறார். கீழ்ப்புறத்தில் பாம்பு படமெடுத்தபடி காட்சி தருகிறது. பீடத்தில் நந்திகேஸ்வரர் அமர்ந்துள்ளார்.   பீடத்தின் அருகில்  விநாயகர் சிற்பமும் அவருக்கு எதிரே அவருடைய வாகனமும் அமைந்துள்ளது.  நடுவில் லிங்கமும் எதிரே நந்திதேவரும் காட்சி தருகிறார்கள். அருகில் நாகர் சிற்பம் காணப்படுகிறது.

சிவபெருமான் சுதைச் சிற்பத்திற்கு அருகில் வடக்கு திசை நோக்கி ஒரு சிறிய மண்டபத்தில் அகத்திய முனிவர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.   

இக்கோயிலில் ஒரு கோசாலையும் அமைத்துச் சிறப்பாகப்  பராமரிக்கிறார்கள். விளா மரம் இக்கோயிலின் தலமாமாகும். இக்கோயிலின் கிழக்கே மற்றொரு பழமையான சிவன் கோயில் இடிந்த நிலையில் காணப்படுகிறது. லிங்கத்திருமேனி முன்மண்டபத்தில் வைத்து வழிபடப்படுகிறது. இக்கோயிலில் தினமும் காலை மாலை என இரு வேளை பூஜைகள் நடைபெறுகின்றன.  ஸ்ரீருத்ரேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷ பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சிவபெருமானுக்கு மிகவும் முக்கியமான தினமான மஹாசிவராத்திரியும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.  ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேக பூஜை நடத்தப்படுகிறது. இக்கோயில் காலை ஆறு மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும் மாலை மூன்று மணி முதல் இரவு ஒன்பது மணி வரையிலும் பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும். இத்திருக்கோயில் திருக்கழுக்குன்றம் கல்பாக்கம் சாலையில் அமைந்துள்ள  நரசங்குப்பம் என்ற கிராமத்தில் இருந்து சரியாக மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கல்பாக்கம் அணுபுரம் என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோ மூலம் இக்கோயிலை சென்றடையலாம்.

ஆர்.வி.பதி

Related Stories: