திருச்சானூரில் 6 டன் மலர்களை கொண்டு பத்மாவதி தாயாருக்கு புஷ்ப யாகம் : பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு 6 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி அடுத்த திருச்சானூர் அலமேலுமங்காபுரம் பத்மாவதி தாயாருக்கு ஆண்டுதோறும் நடைபெறும் நித்திய பூஜைகளிலும், பிரமோற்சவத்தின் போது  அர்ச்சகர்கள், பணியாளர்கள், பக்தர்கள் மூலமாக நடத்திய பூஜைகளில் தெரிந்தோ தெரியாமலோ  ஏற்பட்ட தோஷங்களுக்கு  பரிகாரமாக புஷ்ப யாகம்  நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை மாத பிரமோற்சவம் கடந்த 4ம் தேதி தொடங்கி நேற்றுமுன்தினம் பஞ்சமி தீர்த்தத்துடன் நிறைவு பெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனிதநீராடினர். இதையடுத்து பத்மாவதி தாயாருக்கு நேற்று புஷ்ப யாகம் நடைபெற்றது. இதையொட்டி, தாயாருக்கு பால், இளநீர், மஞ்சள் உட்பட மூலிகை திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க புஷ்ப யாகம் விமரிசையாக நடைபெற்றது.

அதில், ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி, சாமந்தி, தாமரை, அல்லி, தாழம்பூஉள்ளிட்ட மலர்களும் மரிக்கொழுந்து, தவனம், வில்வம், துளசி உட்பட இலைகளும் பயன்படுத்தப்பட்டது. இதற்காக தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் உட்பட மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் 6 டன் மலர்களை நன்கொடையாக வழங்கினர். இதில் தேவஸ்தான தலைமை செயல் அலுவலர்  அனில்குமார் சிங்கால், அறங்காவலர் குழு தலைவர் சுதாகர் யாதவ், இணை செயல் அலுவலர்  பாஸ்கர், துணை செயல் அலுவலர் ஜான்சிராணி  உட்பட பலர் கலந்து கொண்டனர். புஷ்ப யாகத்தையொட்டி கல்யாண உற்சவம், ஊஞ்சல்  சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது.

Related Stories: