திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி உற்சவம் நிறைவு

திருப்புத்தூர்: திருப்புத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர், யோகபைரவர் கோயிலில் கடந்த ஆறு நாட்களாக நடந்து வந்த சம்பக சஷ்டி உற்சவ விழா நேற்றுடன் நிறைவடைந்தது. திருப்புத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர், யோகபைரவர் கோயிலில் சம்பக சஷ்டி உற்சவத்தை முன்னிட்டு கடந்த டிச.8ம் தேதி காலை 9 மணிக்கு ஸ்ரீயோகபைரவர் சன்னதி முன்பு கும்பங்கள் வைத்து சிவாச்சாரியார்களால் அஷ்ட பைரவர் யாகம் துவங்கியது. காலை 11.30 மணியளவில் பூர்ணாகுதியும், மதியம் 12.00 மணிக்கு யோகபைரவருக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களாலும், யாகம் செய்யப்பட்ட புதிய நீராலும் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அர்ச்சனையும் நடந்தது.

பிற்பகல் 1.00 மணியளவில் தீபாராதனையும் நடந்தது. யோகபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோன்று மாலை 4.30 மணிக்கு அஷ்ட பைரவர் யாகமும், 7.00 மணிக்கு பூர்ணாகுதியும், 7.15 மணிக்கு யோகபைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அர்ச்சனையும், 7.45 மணியளவில் தீபாராதனையும் நடந்தது. இந்த யாகம் கடந்த டிச.8ம் தேதி முதல் நேற்று வரை ஆறுநாட்கள் தொடர்ந்து இருவேளைகளிலும் நடந்தது. நேற்று கடைசி நாள் வழிபாடு என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சம்பக சஷ்டி விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: