தரகம்பட்டி ஸ்ரீபகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் தரிசனம்

கடவூர்: தரகம்பட்டி ஸ்ரீபகவதியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியின் முதல் நாளன்று காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் யானையின் மீது வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் அன்று முதல் இரண்டு தினங்கள் சிவாச்சாரியார்கள் தேவ மந்திரம் முழங்க 3 யாககால பூஜை செய்தனர்.

பின்னர் 12ம் தேதி காலை 10.30குள் விநாயகர், மாணிக்கமலையான், மாரியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன், பாம்பலம்மன், பசுபதியம்மன், முனியப்பசுவாமி, கருப்பண்ணசுவாமி, காமன்சுவாமி ஆகிய தெய்வங்களின் ஆலயங்களுக்கு ஸ்ரீரெத்தினகிரீஸ்வரர் கோவில் பரம்பரை பூஜா ஸ்தானீகர் சிவசுவாமிநாதர் சிவாச்சாரியார் மற்றும் சிவாச்சாரியார்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க 84 ஊர் மூன்று சபை சோழிய வெள்ளாளர் சங்க தலைவர் பாலகிருஷ்ணபிள்ளை, மாவட்ட தலைவர் மலைக்கொழுந்தாபிள்ளை ஆகியோர் தலைமையிலும், ஊர்கவுண்டர் மாரியப்பன், 24 மந்தை பெரியதனம், ஊர் நாட்டாமை பெரியசாமி ஆகியோர் முன்னிலையிலும் கோபுர கலசத்தின் மீது புனித தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.

ஆலய வடிவமைப்பை புதுக்கோட்டை குமரி ஆனந்தன், ஸ்ரீரெங்கம் சபாபதி, குமார் ஆகியோர் செய்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ.கீதா, முன்னாள் சேர்மன் செல்வராஜ் ஆகியோருக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. விழாவில் முன்னாள் ஊராட்சி தலைவர் மாணிக்கம், பா.ஜ.மாவட்ட பொதுச்செயலாளர் கைலாசம், ஊர்கவுண்டர் கிருஷ்ணன், ஊர் முக்கியஸ்தர்கள் சாமியப்பபிள்ளை, ஒன்றியச் செயலாளர் கண்ணன், முன்னாள் கவுன்சிலர் ராஜூ உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: