×

ஆனந்தனுக்கு 1000 நாமங்கள்

106. வஸுமநஸே நமஹ (Vasumanase namaha)

பதினாறாயிரத்து  எட்டுப் பெண்களை மணம் புரிந்த கண்ணன் துவாரகையில் அரசாட்சி புரிந்து  வந்தான். “ஒரு மன்னனுக்குத் தன் ராஜ்ஜியத்தின் நிர்வாக ரீதியிலான  அலுவல்களைப் பார்க்கவே நேரம் இருக்காதே. இதில் கண்ணன் எப்படி  ராஜ்ஜியத்தையும் கவனித்துக் கொண்டு, பதினாறாயிரத்து எட்டு மனைவிகளையும்  திருப்திப் படுத்த முடியும்?” என்ற ஐயம் நாரதருக்கு எழுந்தது. அதனால்  கண்ணனின் தினசரி நடவடிக்கைகள் என்ன என அறியும் ஆவலுடன் துவாரகையை அடைந்தார்  நாரதர்.

விடியற்காலையில் துவாரகையை நாரதர் அடைய, எதிர்பாராத விதமாகக் கண்ணனும் எதிரே வந்தான். “என்ன நாரதா! விடியற்காலையிலேயே இந்தப்  பக்கம்?” என்று கேட்டான். “உன்னுடைய அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணிக்க வந்தேன்!” என்றார் நாரதர். “இதென்ன புதுக்கதை! என்னை நீ கண்காணிக்கப்  போகிறாயா?” என்று கேட்டான் கண்ணன். “ஆம்! நீ எப்படி இத்தனை மனைவிகளைச் சமாளிக்கிறாய் என அறிந்து கொள்ள விரும்பி வந்தேன்!” என்றார் நாரதர்.

“அவ்வளவுதானே!” என்று சொன்ன கண்ணன், தன் அரண்மனை இருக்கும் இடத்துக்கு அவரை அழைத்துச் சென்றான். அங்கே வரிசையாக ஒரே மாதிரி அமைப்பு கொண்ட  பதினாறாயிரத்து எட்டு மாளிகைகள் இருந்தன. “நாரதா! நீ இந்த மாளிகை களுக்குள்ளே சென்று பார்த்தால் நான் எப்படி அனைத்தையும்  நிர்வகிக்கிறேன் என்று புரியும்!” என்றான் கண்ணன்.

“ஒரு  மாளிகையில் ஒரு நிமிடம் செலவிட்டால் கூட, ஒரு நாளில் 1440 மாளிகைகளுக்குத் தான் செல்ல முடியும். அதனால் சௌபரி ரிஷியைச் சந்தித்து ஒரே நேரத்தில்  ஐம்பது உருவங்கள் எடுத்துக் கொள்ளும் சக்தியை அவரிடமிருந்து வரமாகப் பெற்று வந்துள்ளேன்!” என்றார் நாரதர். “மிக்க மகிழ்ச்சி! உள்ளே சென்று பார்!”  என்றான் கண்ணன். ஐம்பது வடிவங்களுடன் ஐம்பது மாளிகைகளுக்குள்ளே நுழைந்தார் நாரதர்.

ஐம்பது மாளிகைகளுள் ஒவ்வொரு மாளிகையிலும் ஒரு கண்ணன்  இருப்பதைக் கண்டார். ஐம்பது மட்டுமல்ல, பதினாறாயிரத்து எட்டு வடிவம் எடுத்துக்கொண்டு பதினாறாயிரத்து எட்டு மாளிகைகளிலும் கண்ணன் இருந்து  கொண்டு, அத்தனை மனைவிகளையும் திருப்திப் படுத்துகிறான் என்பதை உடனேயே  புரிந்து கொண்டார். தனது ஐயத்துக்கு விடை கிடைத்த போதும், கண்ணன் அங்கே  அன்றாடம் என்ன செய்கிறான் என அறியும் ஆவல் நாரதருக்கு ஏற்பட்டது.

ஒவ்வொரு மாளிகையில் உள்ள கண்ணனின் அன்றாட நடவடிக்கைகளைக் கவனிக்கத் தொடங்கினார் நாரதர். கண்ணன் காலை நீராடியபின் ஒரு அர்ச்சகரைக் கொண்டு தனது  சாளக்கிராமப் பெருமாளுக்குப் பூஜை செய்யச் சொல்வதைக் கண்டார் நாரதர். அந்தப் பூஜை முடிந்தபின் கண்ணன் தனியாகச் சென்று ஒரு தங்கப் பேழையை எடுத்து  அதற்குள் உள்ள ஏதோ விக்கிரகத்துக்கு ரகசியமாகப் பூஜை செய்வதைக் கண்டார்.

“கண்ணா! அதென்ன தங்கப் பேழைக்குள் ரகசியமான தெய்வம்? அந்தத் தெய்வத்தை  நான் காணலாமா?” என்று கேட்டார் நாரதர். “நான் இந்தத் தெய்வத்தை யாரிடமும்  காட்டுவதில்லை. அதனால் தான் இன்னொரு அர்ச்சகரை நியமிக்காமல் நானே  பூஜிக்கிறேன்!” என்றான் கண்ணன். ஆனாலும், அதைப் பார்த்தே தீர  வேண்டுமென நாரதர் சொன்னதால், தங்கப் பேழையைத் திறந்து காட்டினான் கண்ணன்.  அதற்குள் நாரதரின் படமும் கொஞ்சம் மணலும் இருந்தது. “என்ன இது?” என்று  கேட்டார் நாரதர். “என் பக்தர்கள் தான் எனது செல்வம், என் பக்தர்களைத்  தங்கத்தை விட மதிப்பு வாய்ந்தவர்களாக நான் கருதுகிறேன்.

அதனால் தான் பக்தர்களுள் முதன்மையானவனான உனது படத்தையும் உன் காலடி மண்ணையும் இந்தத்  தங்கப் பேழைக்குள் வைத்துப் பராமரிக்கிறேன்!” என்றான் கண்ணன். கண்ணன் அடியார்கள் மேல் வைத்திருக்கும் அன்பை எண்ணி நாரதர் உருகினார். வடமொழியில் வஸு என்றால் செல்வம் என்று பொருள். தன் பக்தர்களைத் தங்கத்தை விட உயர்ந்த செல்வமாக மதிப்பதால் திருமால் ‘வஸுமனா:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 106-வது திருநாமம். “வஸுமனஸே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அடியார்களைப் பொன்போலக் கருதி எம்பெருமான் காத்தருள்வான்.

107. ஸத்யாய நமஹ (Sathyaaya namaha)

நாராயண ரிஷி திருமாலை நேரில் காணவேண்டும் என்ற ஆசையுடன் திருமலையில் தவம் புரிந்தார். அவரது தவத்துக்குத் திருவுள்ளம் உகந்த திருமால்  அவருக்குக் காட்சி தந்ததோடு மட்டுமின்றி, திருமலையிலுள்ள ஏழு மலைகளுள் ஒரு மலைக்கு அந்த ரிஷியின் பெயரைச் சூட்டினார். அதனால் தான் ஏழு மலைகளுள் ஒரு  மலை ‘நாராயணாத்ரி’ என்று அழைக்கப்படுகிறது. தொண்டைமான் என்ற மன்னன் நாட்டு நன்மைக்காக ஒரு யாகம் செய்ய ஆசைப்பட்டான். தனது  விருப்பத்தைத் தன் புரோகிதரான ஜடாதாரியிடம் சொன்னான். அவரும் சம்மதித்தார். ஜடாதாரியோ தீய எண்ணத்துடன் ஒரு துர்தேவதையைக் குறித்து யாகம் செய்து  நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கத் திட்டமிட்டார்.

அந்த யாகத்துக்கு அனைத்து ரிஷிகளையும் வரவேற்கும்படி ஜடாதாரியிடம் மன்னன்  கூறினான். அவரும் நாராயண ரிஷி உட்பட அனைத்து ரிஷிகளையும் நேரில் சென்று  வரவேற்றார். ஆனால் நாராயண ரிஷி மட்டும் திருமலையப்பன் அருளால் இவர் ஏதோ தீய  எண்ணத்தில் யாகம் செய்கிறார் என உணர்ந்து கொண்டார். அதனால் யாகத்துக்கு வர  மறுத்துவிட்டார். மேலும், இந்த யாகத்தால் நாட்டுக்குத் தீங்கு ஏற்படாமல்  காக்குமாறு மலையப்பனை வேண்டினார். நாராயண ரிஷியால் தனது  திட்டத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என உணர்ந்த ஜடாதாரி அவரைப் பற்றி அவதூறாக  மன்னனிடம் பலவாறு கூறினார்.

“தொண்டைமான் பெரிய மன்னனா? அவன் செய்யும்  யாகத்துக்கு நான் வர வேண்டுமா? மன்னன் என் காலில் வந்து விழுந்து  வரவேற்றால் தான் வருவேன்!” என்றெல்லாம் கர்வத்துடன் நாராயண ரிஷி பேசுவதாகக்  கூறிய ஜடாதாரி, “மன்னா! அவருக்கு நீங்கள் தான் சரியான தண்டனை அளித்துத் தாங்கள் யாரென்று காட்டவேண்டும்!” என்றார். கோபம் கொண்ட மன்னன்,  தனது வீரர்களை அனுப்பி நாராயண ரிஷியை இழுத்து வரச் சொன்னான். அவர்களும் ரிஷியை மன்னன் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். “இந்த நாட்டை ஆளும்  மன்னன் நான்!

எனக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? மரியாதையாக இந்த யாகத்தில் நீங்களும் பங்கு கொள்ளுங்கள்!”  என்றான் மன்னன். “இந்த யாகம் செய்வது நாட்டுக்கு நல்லதல்ல. ஏதோ  துர்தேவதையைக் குறித்து ஜடாதாரி யாகம் செய்கிறார். நான் இதில் பங்கேற்க  மாட்டேன்!” என்றார் ரிஷி. அவரது விளக்கத்தை ஏற்காத தொண்டைமான்,  “இறுதியாகச் சொல்கிறேன். மன்னனின் ஆணைக்கு அடிபணிவீரா? மாட்டீரா?” என்றான்.  “நீ இந்த ஒரு தேசத்துக்குத் தான் மன்னன். என் ஏழுமலையானோ அகிலாண்டங்கோடி  பிரம்மாண்ட நாயகன். அந்த மன்னாதி மன்னனைத் தவிர வேறு எந்த மன்னனையும் நான்  கணிசிக்க மாட்டேன்!” என்றார் ரிஷி.

அவரைச் சிறையிலடைத்தான் தொண்டைமான்.சிரித்துக் கொண்டே, “திருவேங்கடமுடையானின் அடியார்களுக்குச் சிறைச்சாலை கூட தங்க மாளிகை போல மின்னும். மூங்கில் கழிகள் கூட அவர்களுக்குக் கரும்பு  போல் இனிக்கும்!” என்றார் நாராயண ரிஷி. “அப்படியா? அப்படியானால் உங்கள் அகிலாண்டங்கோடி பிரம்மாண்ட நாயகனிடம் சொல்லி இந்தச் சிறையைத் தங்கமாக மாற்றச் சொல்லுங்கள். மூங்கில் கழிகளைத் தருகிறேன், நீங்கள் அதைக் கரும்பாய்க் கருதிச் சாப்பிடுங்கள். இவை இரண்டும் நாளை காலைக்குள் நடக்காவிட்டால், உங்கள் தெய்வத்தை இனி அகிலாண்டங்கோடி பிரம்மாண்ட நாயகன் என்று அழைக்கக் கூடாது!” என்றான்.

மூங்கில் கழிகளை அவரது சிறைக்குள் கொண்டு வந்து போடச் சொல்லி உத்தரவிட்டு விட்டுத் தன் அந்தப்புரத்துக்குச் சென்றான் அன்றிரவு திருமலையப்பன் தனது பக்தனான கஜேந்திரனைச் சிறைச்சாலைக்கு அனுப்பினார். கஜேந்திரன் வந்து அனைத்து மூங்கில்களையும் எளிதில் தின்று தீர்த்தார். தன் திருமார்பில் உள்ள மகாலட்சுமியிடம் அந்தச் சிறைச்சாலையைக் கடாட்சிக்கும்படி கூறினார் மலையப்பன். மகாலட்சுமியின் பார்வை பட்டதும் சிறைச்சாலை பொன்மயமானது.
அடுத்தநாள் காலை வந்து பார்த்த மன்னன், மூங்கில் கழிகள் அனைத்தும் காணாமல் போனதையும், சிறைச்சாலை முழுவதும் தங்கமயமாக இருப்பதையும் கண்டு வியந்து திருமலையப்பனின் மேன்மையையும், நாராயண ரிஷியின் பக்தியின் பெருமையையும் உணர்ந்தான்.

ஜடாதாரி செய்ய நினைத்த யாகத்தை நிறுத்தினான். அன்று முதல் தொண்டைமான் திருமலையப்பனின் பக்தனாக மாறினான். நாராயண ரிஷி போன்ற உண்மையான பக்தர்களுக்கு ‘ஸத்’ என்று பெயர். ஸத் ஆன  பக்தர்களுக்கு எப்போதும் உதவுபவனாகத் திகழ்வதால் திருமால் ‘ஸத்ய:’  என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 107-வது திருநாமம். “ஸத்யாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அடியார்களை அனைத்து ஆபத்துகளிலிருந்தும் திருமால் காத்தருள்வார்.

108. ஸமாத்மநே நமஹ (Samaathmane namaha)

ஏகாதசி  விரதம் அநுஷ்டிப்பதன் பலன்களைப் பற்றி வியாசர் விளக்க அதைப் பாண்டவர்களும் குந்தியும் கேட்டார்கள். எப்போதும் உணவருந்திக் கொண்டே இருப்பவனான பீமனுக்கு விரதம் இருப்பது என்பது கற்பனையிலும் முடியாத காரியம். அவனை ஏகாதசி விரதம் அநுஷ்டிக்க வைப்பது எப்படி என்று வியாசரிடம் குந்தி வினவ, வியாசர், “ஏகாதசியன்று தண்ணீர் கூட குடிக்காமல் நோன்பிருப்பது மிகவும்  உயர்ந்தது.

அது முடியாதவர்கள் தண்ணீர், பால், மோர் முதலிய நீர் ஆகாரங்களை  உட்கொள்ளலாம். அதுவும் முடியாதவர்கள், பழங்களை உட்கொள்ளலாம். அதுவும்  முடியாதவர்கள், அரிசியால் ஆன பொருட்களை முழுவதுமாக ஒதுக்கி விட்டு மற்ற பொருள்களை உப்பில்லாமல் சாப்பிடலாம். அதுவும் முடியாதவர்கள், அரிசியை  உடைத்துச் செய்யும் கேசரி உள்ளிட்ட உணவுகளை உட்கொள்ளலாம். ஆனால் முழு அரிசியைச் சேர்த்துக் கொள்ளவே கூடாது. நீங்கள் பீமனை இந்த ரீதியில்  படிப்படியாக விரதம் இருக்கச் சொல்லுங்கள். நாளடைவில் தண்ணீர் கூட அருந்தாமல் நோன்பிருக்கப் பழகிக் கொள்வான்!” என்றார்.

அவ்வாறே  படிப்படியாக பீமனுக்கு, உடைத்த அரிசியில் தயாரித்த உணவு, பின் அரிசியல்லாத உணவுகள், பின் பழங்கள், பின் திரவங்கள் என ஏகாதசி தினங்களில் கொடுத்துப்  பழக்கிய குந்தி, இறுதியாகத் தண்ணீர் கூட அருந்தாமல் நோன்பிருக்கும்படி அவனைப் பழக்கினாள். அவ்வாறு ஒருநாள் ஏகாதசி நோன்பு நோற்ற பீமன்,  அடுத்த நாள் காலை 7 மணிக்குள் துவாதசி திதி முடிவதால், அதற்குள் பாரணை  செய்து விரதத்தை நிறைவுசெய்ய வேண்டுமென எண்ணி, விடியற்காலையிலேயே எழுந்து  நீராடத் தயாரானான். அப்போது அங்கே வந்த கண்ணன், “பீமா! நானும் பாரணை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்யப் போகிறேன். எனக்குக் கொஞ்சம்  வெந்நீர் போட்டுக் கொடு. நீராடிவிட்டு எனது அநுஷ்டானங்களை முடித்து விட்டுப் பாரணைக்குத் தயாராகிறேன்!” என்றான்.

பீமனும் அடுப்பை  மூட்டி வெந்நீர் போடத் தொடங்கினான். அரைமணி நேரம் ஆனது. தண்ணீரைத் தொட்டுப்  பார்த்தான் பீமன். பனிக்கட்டி போல சில் என்றிருந்தது. “என்ன இது! அரை மணி  நேரம் அடுப்பில் வைத்தும் வெந்நீர் சுடவில்லையே!” என்று யோசித்தான் பீமன்.  “என்ன பீமா? வெந்நீர் தயாரா?” என்று கேட்டான் கண்ணன். “கொஞ்சம் பொறு  கண்ணா!” என்றான் பீமன். மேலும் அரைமணி நேரம் கழித்து, “வெந்நீர்  தயாரா?” என்று கேட்டான் கண்ணன். பீமன் தொட்டுப் பார்த்தால் அப்போதும்  தண்ணீர் சுடவில்லை. மேலும் அரைமணி நேரம் கழித்துப் பார்த்தான். சுடவில்லை.

முந்தையநாள் முழுவதும் ஊன்வாட உயிர்வாட நோன்பிருந்த பீமனுக்கோ பசி  வயிற்றைக் கிள்ளுகிறது. கண்ணனோ “வெந்நீர் தயாரா?” என மீண்டும் மீண்டும் 
கேட்டுக் கொண்டே இருக்கிறான். “தண்ணீர் சுடாமலேயே இருக்கிறதென்றால்,  ஒருவேளை வெந்நீர்ப் பானைக்குள் பிரகலாதன் ஒளிந்திருக்கிறானோ?” என ஐயம்  கொண்டான் பீமன். ஏனெனில் பிரகலாதனைத் தீயிலிட்ட போதும் அந்தத் தீ  அவனுக்குக் குளிர்ச்சாதனம் போல இருந்ததல்லவா?

பிரகலாதன் உள்ளே  அமர்ந்து கொண்டு தண்ணீர் சுடாமல் தடுக்கிறானோ எனச் சந்தேகப்பட்ட பீமன்,  உள்ளே எட்டிப் பார்க்க, பானைக்குள் ஒரு தவளை இருப்பதைக் கண்டான். “கண்ணா!  உள்ளே ஒரு தவளை இருக்கிறது. இவ்வளவு நேரம் நான் அதைக் கவனிக்கவே இல்லை!”  என்றான் பீமன். கண்ணன், “எனக்கு முன்னமே தெரியும். நீ அடுப்பு  மூட்டியவுடனேயே அந்தத் தவளை வெப்பம் தாங்க முடியாமல் “கண்ணா! காப்பாற்று!”  என்று என்னை அழைத்து விட்டது. அதனால் நான் வெந்நீர் சுடாத படி அந்தத்  தவளையைக் காப்பாற்றினேன். பீமா! நீயும் என் பக்தன்.

தவளையும் என் பக்தன்.  இருவருக்கும் அருள் புரிய வேண்டியது என் கடமையல்லவா?” என்று சொல்லிக் கொண்டே  பானைக்குள் கையை விட்டு அந்தத் தவளையைத் தீண்டினான். அடுத்த நொடி அந்தத்  தவளை பானையை விட்டு வெளியே குதித்துக் காட்டுக்குள் சென்றுவிட்டது. அடுத்த நொடியே வெந்நீர் கொதித்து விட்டது. கண்ணன் நீராடினான். பீமன் தன்  அநுஷ்டானங்களை விரைந்து முடித்து விரதத்தைப் பூர்த்தி செய்தான். தன் அத்தைமகன் பீமனாக இருந்தாலும் சரி, ஒரு சாதாரண தவளையாக இருந்தாலும் சரி, தன் பக்தர்கள் அனைவரையும் திருமால் சமமாகவே கருதுகிறார் என்பதை  உலகுக்கு உணர்த்துவதற்காகவே கண்ணன் இந்த லீலையைப் புரிந்தான். இவ்வாறு  பக்தர்களுள் வேறுபாடு பாராமல் அவர்களைச் சமமாகக் கருதுவதால் ‘ஸமாத்மா’  என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 108-வது திருநாமம். “ஸமாத்மநே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அனைவரையும் சமமாகப் பார்க்கும் தன்மையைத் திருமால் அருள்வார்.

109. ஸம்மிதாய நமஹ (Sammithaaya namaha)

ஆதி  சங்கர பகவத் பாதருக்குப் பத்மபாதர் என்றொரு சீடர் இருந்தார். அவர் சிறந்த  நரசிம்ம பக்தர். நரசிம்மப் பெருமாளை நேரில் காணும் ஆவலுடன் தவம்  புரிவதற்காக ஓர் அடர்ந்த காட்டை அடைந்தார். எதிரே வந்த ஒரு வேடன்  பத்மபாதரைப் பார்த்து, “ஐயா! உங்களைப் பார்த்தால் பெரிய யோகியைப் போலத்  தெரிகிறதே! இந்த ஆபத்தான காட்டில் உங்களுக்கு என்ன வேலை? இங்கே கொடிய  மிருகங்கள் பல உள்ளன. அவற்றால் உங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.  தயவுசெய்து இந்தக் காட்டுக்குள் செல்லாதீர்கள்!” என்றான்.

நரசிம்மரை நேரில் காணத் தவம் செய்யப் போவதாகச் சொன்னால் அந்த வேடனால் அதைப்  புரிந்து கொள்ள முடியாது என்று கருதிய பத்மபாதர், “அப்பா! நானும் ஒரு  மிருகத்தைத் தேடித் தான் இக்காட்டுக்கு வந்துள்ளேன்!” என்று அவனது  மொழியிலேயே மறுமொழி கூறினார். ஆனால் வேடன் விடவில்லை. “என்ன மிருகம் அது?” என்று கேட்டான்.“அது உனக்குத் தெரியாதப்பா! கழுத்துக்கு மேல் சிங்கம் போலவும்,  கழுத்துக்குக் கீழே மனிதன் போலவும் அந்த மிருகம் இருக்கும்!” என்றார்  பத்மபாதர்.

“ஐயா! நான் சிறுவயது முதல் இக்காட்டில் தான்  இருக்கிறேன். இதன் மூலை முடுக்குகள் அனைத்தும் எனக்குத் தெரியும்.  இக்காட்டில் அப்படி ஒரு மிருகம் இல்லவே இல்லை. நீங்கள் தயவு செய்து  திரும்பிச் செல்லுங்கள்!” என்றான் வேடன். “இல்லை அப்பா! உனக்குத் தெரியாது. ஆனால் அப்படி ஒரு மிருகம் உள்ளது என்று எனக்கு நன்றாகத்  தெரியும். நீ உன் வேலையைப் பார்!” என்றார் பத்மபாதர்.

“இல்லை!  இல்லை! உங்களைப் போன்ற யோகி இந்தக் காட்டுக்குள் நுழைந்து மிருகங்களுக்கு  இரையாவதை நான் அனுமதிக்கவே மாட்டேன். அத்தகைய மிருகம் இருப்பது  உண்மையானால், உங்களுக்காக நான் அந்த மிருகத்தைத் தேடிப் பிடித்துக் கொண்டு வருகிறேன்!” என்றான் வேடன். “இன்று சூரியன் அஸ்தமிப்பதற்குள் அந்த  மிருகத்தோடு உங்கள் முன் வந்து நிற்காவிட்டால், என் உயிரை மாய்த்துக் கொள்வேன்.

நீங்கள் காட்டுக்கு வெளியே காத்திருங்கள்!” என்று சொல்லிவிட்டுக்  காட்டுக்குள் சென்றான். காடு முழுவதும் தேடியும் அம்மிருகத்தைக்  கண்டுபிடிக்கமுடியவில்லை. சூரியன் அஸ்தமிக்கும் நேரம் வந்தது. சொன்னபடி  உயிரை மாய்த்துக் கொள்ள எண்ணி, ஒரு பாறையின் உச்சிக்குச் சென்றான் வேடன்.  “நில்!” என்றொரு ஒலி. திரும்பிப் பார்த்தான். அவன் தேடிய மிருகம் அவன்  எதிரே நின்று கொண்டிருந்தது.

உடனே அதைக் கயிற்றால் கட்டினான்.  பத்மபாதரின் இருப்பிடத்துக்கு அழைத்து வந்தான். “ஐயா! சொன்னபடி மிருகத்துடன் வந்து விட்டேன் பாருங்கள். கழுத்துக்கு மேல் சிங்கம்,  கழுத்துக்குக் கீழே மனிதன்!” என்றான் வேடன். பத்மபாதரின் கண்களுக்கு  எதுவுமே தெரியவில்லை. “எங்கே அப்பா மிருகம்?” என்று கேட்டார். “இதோ என்  கண்களுக்குத் தெரிகிறதே! உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?” என்றான் வேடன்.

அப்போது நரசிம்மர் அசரீரியாகப் பத்மபாதரிடம், “பத்மபாதா!  நீ வேத சாஸ்திரங்கள் அனைத்தும் கற்றவன். ஆனால் என் மீது முழுமையான  நம்பிக்கை உனக்கு இல்லை. இந்த வேடன் எந்த வேதமும் பயிலாதவனாயினும் என் மீது  அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து என்னைத் தேடினான். அத்தகைய நம்பிக்கை  உள்ளவர்களுக்கே நான் காட்சி தருவேன்!” என்று கூறினார்.

ஒரு வேடனுக்கு இருக்கும் நம்பிக்கை வேதம் கற்ற தனக்கு இல்லையே என எண்ணி வருந்தினார் பத்மபாதர். இந்தச் சரித்திரத்தின் மூலமாகத், திருமால், தன் மேல் திடமான நம்பிக்கை கொண்ட பக்தர்கள், மேதா விலாசமில்லாத பாமரர்களாக இருந்தாலும் கூட,  அவர்களுக்கும் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் காட்டுகிறார், அவர்களின் பக்திக்குக் கட்டுப்படுகிறார் என்பது புரிகிறது. அதனால் அவர் ‘ஸம்மித:’என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 109-வது திருநாமம்.“ஸம்மிதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் பக்திக்குக் கட்டுப்பட்டு எம்பெருமான் தன்னை முழுமையாகக் காட்டியருளுவான்.

110. ஸமாய நமஹ (Samaaya namaha)

பராசர  பட்டர் என்னும் ஆச்சாரியர், மார்கழி மாதம் திருவரங்கத்தில் திருப்பாவையைப்  பற்றித் தொடர்ச்சொற்பொழிவு ஆற்றி வந்தார். தொடர்ச்சொற்பொழிவின் நிறைவு  நாளில் திருப்பாவையின் முப்பது பாசுரங்களைக் கேட்பவர்கள் பெறும் பலன் என்ன  என்பதை விவரிக்கையில், “அன்று ஆண்டாளுக்குத் திருமால் எவ்வாறு  அருள்புரிந்தாரோ, அதைப் போலவே ஆண்டாள் அருளிய இந்த முப்பது பாசுரங்களையும்  தினமும் சொல்லும் அனைத்து பக்தர்களுக்கும் அருள்புரிவார்!” என்று கூறினார்.

அந்தக் கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து, “சுவாமி! மன்னிக்க வேண்டும்.  தாங்கள் சொல்வதை அடியேனால் ஏற்கமுடியவில்லை. ஆண்டாள் நாச்சியார் சாட்சாத்  பூமாதேவியின் அவதாரம். அவளுடைய பக்தி என்பது பெரிய சிகரம் போல. எங்களுடைய  பக்தியெல்லாம் வெறும் கூழாங்கல் போலத்தான். அவ்வாறிருக்க, மிகவுயர்ந்தவளான  ஆண்டாளுக்கு அருள்புரிந்ததைப் போலவே, மிகத்தாழ்ந்தவர்களான எங்களுக்கும்  திருமால் அருள்புரிவார் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?” என்று  கேட்டார்.

அதற்கு விடையளித்த பராசர பட்டர், “கிராமங்களில்  பசுக்கன்றுகளை விலைக்கு விற்றுவிட்டு, கன்றின் தோலுக்குள் வைக்கோலை வைத்து  அடைத்து, தோல்போர்த்திய பொம்மைக் கன்றைப் பசுவின் முன்னே நிறுத்துவார்கள். அதைத் தன்னுடைய கன்று என நினைத்துப் பசுவும் பால் சுரக்குமல்லவா? அதுபோலத்  தான் நாமும் திருப்பாவை என்னும் தோலைப் போர்த்திக் கொண்டு கன்றுகளாகத் திருமால் முன்னே சென்று நின்றோமானால், திருப்பாவை எனும் தோலைப்  பார்த்தவுடன் திருமாலுக்கு ஆண்டாளின் ஞாபகம் வந்துவிடும். அதனால் அவளுக்கு எவ்வாறு அருள்புரிந்தாரோ அதே அருளை நம்மீதும் பொழிவார்! உண்மையான  கன்றாயினும், தோல்போர்த்திய கன்றாயினும், ஒரே அளவில் தானே பசு பால்  சுரக்கிறது? அதுபோலத் தான் இதுவும்!” என்றார்.

மற்றொருவர்  கூட்டத்திலிருந்து எழுந்து, “அடியேனுடைய பல்வேறு அலுவல்களுக்கு மத்தியில்  முப்பது பாசுரங்களையும் தினமும் சொல்வது மிகவும் கடினமாயிற்றே! அதற்கு  ஏதாவது மாற்று ஏற்பாடு உண்டா?” என்று கேட்டார். “அப்படியானால்,  ‘மார்கழித்திங்கள்’, ‘வையத்து வாழ்வீர்காள்’, ‘ஓங்கி உலகளந்த’ ஆகிய முதல்  மூன்று பாசுரங்களையும், ‘கூடாரை வெல்லும்’, ‘கறவைகள் பின்சென்று’, ‘சிற்றஞ்  சிறுகாலே’, ‘வங்கக் கடல்கடைந்த’ ஆகிய இறுதி நான்கு பாசுரங்களையும்  ஆக  மொத்தம் ஏழு பாசுரங்களைச் சொன்னால் கூட முழுமையா கத் திருமாலின்  அருள்கிட்டும்!” என்றார்.

“அதுவும் முடியாவிட்டால் என்ன செய்வது?” என்று ஒருவர் கேட்டார். “சாற்றுமறைப் பாசுரங்கள் எனப்படும் ‘சிற்றஞ் சிறுகாலே’, ‘வங்கக்  கடல்கடைந்த’  இந்த இரண்டு நிறைவுப் பாசுரங்களையாவது சொல்லுங்கள்.  பெருமாளின் அருள் பூரணமாகக் கிட்டும்!” என்றார். “அதுவும் முடியாவிட்டால்?” என்று கேட்டார் மற்றொருவர். “சிற்றஞ் சிறுகாலே’ பாசுரத்தை
மட்டுமாவது சொல்லுங்கள். எம்பெருமான் உங்களைக் கடாட்சிப்பான்!” என்றார்.

“அதுவும் முடியாவிட்டால்?” என்று தயக்கத்துடன் மற்றொருவர் கேட்க,  “பராசர பட்டர் தினமும் திருப்பாவை சொல்வார் என்று என்னை நினைத்துக்  கொள்ளுங்கள்! திருமால் அருள்புரிவார்!” என்றார். “அதெப்படி ஒரு  பாசுரம் சொல்பவர்க்கும் முப்பது பாசுரம் சொல்பவர்க்கும் ஒரே மாதிரியான  அருள் கிட்டும் நீங்கள் சந்தேகப்பட வாய்ப்புண்டு!” என்ற பராசர பட்டர்  மேலும் கூறினார், “இரண்டு விஷயங்கள் சொல்கிறேன், கவனமாகக் கேளுங்கள்: தன்னுடைய  பக்தர்கள் தன்னிடம் காட்டும் அன்பும் பக்தியும் சிறிதாகவோ பெரிதாகவோ  எப்படி இருந்தாலும், அதைக் கணிசியாமல், பக்தர்கள் அனைவரையுமே திருமால்  சமமாகத் தான் கருதுகிறார். “ஸமோஹம் ஸர்வபூதேஷு” என்று கீதையில் கண்ணனே  தெரிவித்துள்ளான்.

எனவே ஒரு பாசுரம் சொன்னவர்கள், முப்பதும் சொன்னவர்கள்  என்று எண்ணிக்கையால் திருமால் அவர்களைப் பிரித்துப் பார்ப்பதில்லை. அத்தகைய  தாராள குணம் திருமாலுக்கு இருக்கிறது என்பதற்காக, அதை அவனுடைய பலவீனமாக  நினைத்து, முப்பது பாசுரம் சொல்ல முடிந்தவர்களும், சோம்பேறித்தனத்தால் ஒரு  பாசுரம் மட்டும் சொல்கிறேன் என்று கூறுவது மிகத்தவறு. ஒரு பாசுரமும்  சொல்லாதவர்களுக்குக் கூட அருள்புரியும் அளவுக்கு அவனிடம் கருணை இருப்பது  உண்மைதான்.

அதற்காக இறைவனின் கருணையை நாம் திருடலாமா? நம்மால் இயன்ற அளவு  அவனக்குத் தொண்டு செய்யவேண்டுமல்லவா? எனவே ஒரு பாசுரம் சொன்னாலும்  முழுமையாக அருள்புரியும் அளவுக்குக் கருணைக் கடலாக அவன் இருக்கிறான் என்று  அவனது கருணையை நினைத்துக் கொண்டே முப்பது பாசுரங்களும் தினமும் சொல்ல  முயலுங்கள்!”
இவ்வாறு பக்தர்கள் தன்னிடம் செலுத்தும் அன்பு,  ஆர்வம், ஈடுபாடு  இவற்றைக் கொண்டு அவர்களுக்குள் வேறுபாடு பாராமல் அனைத்து  பக்தர்களிடமும் சமமாக அன்பு காட்டுவதால் திருமால் ‘ஸம:’  என்றழைக்கப்படுகிறார் என்று விளக்கினார்.

“ஸமாய நம:” என்று  விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 110-வது திருநாமத்தைத் தினமும் சொல்லி வரும்  அன்பர்கள் என்றும் திருமாலின் மனத்துக்கு இனியவர்களாக இருக்கும்  பாக்கியத்தைப் பெறுவார்கள். குறிப்பு: 108-வது திருநாமமான ‘ஸமாத்மா’,  திருமால் தன் அடியார்களுக்குள் குலம், கல்வி, ஞானம், செல்வம், செல்வாக்கு  போன்றவற்றைக் கொண்டு வேறுபாடு பார்ப்பதில்லை என்பதைக் காட்டுகிறது. 110-வது திருநாமமான ‘ஸம:’, பக்தியின் அளவு அதிகமாகவோ குறைவாகவோ  இருப்பதைக் கொண்டு கூடத் திருமால் பக்தர்களை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை  என்பதைக் காட்டுகிறது.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

Tags : Anandan ,
× RELATED (₹4.62 லட்சம் நிதிநிறுவன ஊழியரிடம்...