திருச்சானூர் பிரமோற்சவத்தின் மகா ரதத்தில் பத்மாவதி தாயார் பவனி

திருமலை: திருச்சானூர் பிரமோற்சவத்தின் 8வது நாளில் அலங்கரிக்கப்பட்ட மகா ரதத்தில் பத்மாவதி தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனர். திருப்பதி அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை மாத பிரமோற்சவம் கடந்த 4ம் தேதி யானை உருவம் வரையப்பட்ட கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அன்று முதல் காலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

பிரமோற்சவத்தின் 7வது நாளான நேற்றுமுன்தினம் இரவு சந்திரபிரபை வாகனத்தில்  பத்மாவதி தாயார் நான்கு மாடவீதியில் வலம் வந்து  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், பிரமோற்சவத்தின் 8வது நாளான நேற்று காலை மகா ரத உற்சவம் நடந்தது. மகா ரதத்தில் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நான்குமாட வீதியில் தாயார் பவனி வந்தார். இதில் பக்தர்கள் கோலாட்டம், பஜனை உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தியபடியும், சுவாமியின் பல்வேறு அவதாரங்கள் போல் வேடமணிந்தும் பங்கேற்றனர்.

தொடர்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட அஷ்வ வாகனம் (குதிரை வாகனத்தில்) பத்மாவதி தாயார் எழுந்தருளி நான்குமாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து இன்று தாயார் பிறந்த நட்சத்திரத்தின்போது 11.45 மணியளவில்  மகர லக்னத்தில் பஞ்சமி தீர்த்தத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது. தீர்த்தவாரியையொட்டி பாதுகாப்பு பணியில் ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பக்தர்களுக்காக கோயிலைச்சுற்றி 66 இடங்களில் அன்னப்பிரசாத கவுன்டர்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளது.

பக்தர்கள் குளத்தில் இறங்குவதற்கும், ஏறுவதற்கும் தனித்தனி வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்த பின் 3 நாட்களுக்கு அந்த புனிதம் இருக்கும் என்பதால் பக்தர்கள் தள்ளுமுள்ளு இல்லாமல் பொறுமையாக காத்திருந்து புனித நீராடும்படி தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories: