களக்காடு ஐயப்பன் கோயிலில் வருஷாபிஷேகம்

களக்காடு: களக்காடு ஐயப்பன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். களக்காடு ஐயப்பன் கோயிலில் 9ம் ஆண்டு வருஷாபிஷேக விழா, நேற்று நடந்தது. காலையில் மகா கணபதி ஹோமம், மூலமந்திர ஹோமங்கள் உள்பட சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து யாகசலையில் இருந்து கடம் புறப்பாடு நடந்தது. வேத விற்பன்னர்கள் புனிதநீர் அடங்கிய குடங்களுடன் கோயில் பிரகாரங்களில் வலம் வந்தனர்.

பின்னர் கோயில் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் சரண கோஷங்கள் எழுப்பினர். ஆதி விநாயகர், ஐயப்பன், மாளிகைபுரத்து அம்மன், சுப்பிரமணியர், எண்கோடி சாஸ்தா மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், 18ம் படிக்கும் மகா அபிஷேகம் நடந்தது. மதியம் மும்பை தொழிலதிபர் கார்த்திக் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் கற்பூர ஆழி பூஜை, 18ம் படி பூஜை நடைபெற்றது. சிறப்பு நிகழ்ச்சியாக ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி இடம்பெற்றது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

வருகிற 15ம் தேதி கன்னிபூஜையும், 27ம் தேதி மண்டல பூஜையும் நடைபெறுகிறது. இதையொட்டி 26ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சிறுவர், சிறுமிகளுக்கு ஐயப்ப மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி, மாலை 6 மணிக்கு இருமுடி கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. 27ம் தேதி அதிகாலையில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்களின் ஊர்வலம், மதியம் நெய் அபிஷேகம், மாலையில் திருவிளக்கு பூஜை, படிபூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை களந்தை சபரிமலை ஐயப்பன் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: