×

காலமெல்லாம் காத்தருள்வார் கற்குவேல் அய்யனார்

நம்ம ஊர் சாமிகள் தேரிக்குடியிருப்பு, தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது தேரிக்குடியிருப்பு. இங்குள்ள குதிரைமொழித்தேரி பகுதியில் எழுந்தருளியிருக்கும் கற்குவேல் அய்யனார், கைதொழும் அடியவர்க்கு கஷ்டங்களை போக்கி, நல்வாழ்வு அருள்கிறார். பொதிகை மலை அடிவாரத்திலிருக்கும் காக்காச்சி மலையில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு கொடிமரம் வெட்டி வரும்போது சுடலைமாடன், பேச்சி, பிரம்மசக்தி முதலான 21 தேவாதைகள் இடையூறு செய்தன. கொடிமரம் வெட்டச்சென்றவர்கள் சொரிமுத்து அய்யனாரிடம் முறையிட, சொரிமுத்து அய்யனாரின் கட்டளைப்படி 21 தேவாதைகள் துணையுடன் கொடிமரம் திருச்செந்தூர் கொண்டு சேர்க்கப்பட்டது.

கொடிமரத்தை தொடர்ந்து பின்னால் வந்த சொரிமுத்து அய்யனார், தேரிகுடியிருப்பு பகுதியிலுள்ள செம்மண் தேரி இடம் பிடித்துக்கொண்டதால் அப்பகுதியில் நின்ற கற்குவா மரத்தின் மீது வந்தமர்ந்தார். பின்னர், தான் வந்ததை இங்குள்ளவர்கள் அறிய வேண்டும் என்பதை உணர்த்த முடிவு செய்தார். அப்பகுதியைச்சேர்ந்த ஒரு நிலக்கிழாரின் கனவில் தோன்றி நான் அய்யனார், நீ வசிக்கும் பகுதியிலுள்ள கற்குவா மரத்தில் அமர்ந்திருக்கிறேன். எனக்கு இவ்விடம் பிடித்து விட்டது. இங்கே எனக்கு கோயில் எழுப்பி பூஜித்து வா, உன்னை மேம்படுத்துவேன். என்னை நம்பி வணங்கும் யாவருக்கும் எல்லா வளமும், நலமும் அளித்து காத்தருள்வேன் என்றுரைத்தார்.

அதன்படி அந்த நிலக்கிழார், அப்பகுதியை ஆண்ட சிற்றரசன் உதவியுடன் கோயில் எழுப்பினார். கற்குவா மரத்தின் மேல் அமர்ந்த அய்யன் என்றழைத்தனர். அதுவே மருவி கற்குவேல் அய்யன் என்றானது. பின்னர் கற்குவேல் அய்யனார் என அழைக்கப்படலானார். அய்யன் உரைத்ததன்படி 21 தேவாதைகளுக்கும் கோயிலில் நிலையம் கொடுக்கப்பட்டது. அந்த நிலக்கிழார். தனது மகனுக்கு கற்குவா அய்யனார் என்று பெயரிட்டார். அதை எல்லோரும் சுருக்கி கற்கைய்யனார் என்று அழைத்தனர். அவர் வம்சா வழியில் வந்த கைய்யனார், இதே பகுதியை ஆட்சி செய்த அதிவீர ரண சூரபாண்டியன் என்ற மன்னனிடம் அமைச்சராக இருந்தார். மன்னனின் கோட்டைக்கு அருகே அழகான சுனை இருந்தது. அந்த சுனையின் மேற்பரப்பில் ஒரு மாமரம் இருந்தது.

ஒரு நாள் சுனையில் நீர் அருந்திய முனிவர் ஒருவர், மரத்திலிருந்து விழுந்த மாங்கனியை எடுத்தார். அது நல்ல மணம் வீசியது. உடனே அக்கனியுடன் கோட்டைக்கு சென்றார். மன்னனைக்கண்டு, கனி கிடைத்த விபரத்தையும், இந்தக்கனியை நீங்கள் அன்றாடம் வழிபடும் இறைவனுக்கு நாளொரு கனி, படைத்து பின்னர் நீங்கள் அதை உண்டால் பிணியும், மூப்பும் அண்டாது மன்னா என்றுரைத்தார். மிக்க மகிழ்ச்சி என்று கூறி முனிவரிடமிருந்து கனியை பெற்றான் மன்னன். அந்த மரத்தில் தினமும் ஒரு காய், அதுவும் கனிந்த நிலையில் தானே கீழே விழும். எனவே மக்கள் யாரும் அதை எடுத்து சென்று விடக்கூடாது என்பதற்காக, மரத்தை காக்கும் பொருட்டு 4 வீரர்களை காவலுக்கு வைத்தான் மன்னன்.

அதே பகுதியில் கணவனை இழந்த கைம்பெண் பேச்சித்தாய் என்பவள் வாழ்ந்து வந்தார். இளம் வயதிலேயே கற்குவேல் ஐயனார் மீதும், அவ்வாலயத்தில் அருள்புரியும் அம்பாள் பேச்சியம்மன் மீதும் அளவற்ற பக்தி கொண்டிருந்தாள். அவள் தாய், பிள்ளை இல்லை என்று தவித்தபோது, அய்யனார் கோயில் விழாவில், சாமியாடி அருள்வாக்கு கூறி திருநீறு கொடுத்ததன் காரணமாக பிறந்ததால் மகளுக்கு பேச்சித்தாய் என்று அம்மனின் பெயரையே அவரது பெற்றோர்கள் சூட்டியிருந்தனர். பேச்சித்தாய், தன் தாய்மாமன் மகனுடன் மணமுடிந்து 3 ஆண்டு இல்லற வாழ்க்கையில் தனது கணவனை இழந்தாள். கற்பு நெறி தவறாது வாழ்ந்த அவள் பகலில் நடமாடுவதே இல்லை. அதிகாலை பொழுதில் சுனையில் நீரெடுத்து வந்து வீட்டுத்தேவைக்கு பயன் படுத்திக்கொள்வாள். அதிகாலை நேரம் என்பதால் மரத்தை காக்கும் காவலர்களும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பார்கள்.

ஒரு நாள் அதிகாலை பொழுதில் பேச்சித்தாய் சுனையிலிருந்து ஒரு குடத்தில் நீரை எடுத்து மேற்பரப்பில் வைத்தாள். மற்றொரு குடத்தில் நீரை எடுத்துக்கொண்டிருந்தாள். அந்நேரம் மரத்திலிருந்த கனி நீர் நிரம்பிய குடத்திற்குள் விழுந்தது. இதை பேச்சித்தாய் கவனிக்கவில்லை. தலையில் ஒன்றும், இடுப்பில் ஒன்றுமாய் இரண்டு குடங்களில் நீரை எடுத்துக்கொண்டு இல்லம் சென்றாள். காலையில் பூஜைக்கு தயாரான மன்னன், கனி வராதது கண்டு காவலர்களை அழைத்து காரணம் கேட்டான். கனி மரத்திலிருந்து விழவில்லை என்ற காவலர்களிடம் எப்படி விழாமலிருக்கும். யாராவது எடுத்து சென்றிருப்பார்கள். பொறுப்பில்லாமல் பணியில் தூங்கிய காவலர்களுக்கு சிறைதண்டனை வழங்கிய மன்னன், வீரர்களை கொண்டு தேரிக்குடியிருப்பு ஊரிலிலுள்ள அனைத்து வீடுகளிலும் அடுப்பறை முதல் அனைத்து இடங்களிலிலும் விடாமல் தேடுங்கள் என்று உத்தரவிட்டான்.

மன்னனின் உத்தரவிற்கிணங்க வீரர்கள் ஊரில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேடினர். பேச்சித்தாய் வீட்டில் தேடியபோது. பேச்சித்தாய், கதவின் பின்னால் ஆடவர் முகம் பார்த்திராத வண்ணம் ஒளிந்து நின்றிருந்தார். நிறை குடத்து தண்ணீரையெல்லாம் கொட்டி கவிழ்த்த போது, ஒரு குடத்தில் மாங்கனி இருந்தது. உடனே அந்த கனியை எடுத்துக்கொண்டு மன்னனிடம் சென்றார்கள். உடனே மன்னன் தெய்வத்திற்கும், அரசனுக்கும் உரித்தான கனியை களவாடி சென்றிருக்கிறாள். அவளை விட்டு வந்தீர்களா. ம் அவளை இழுத்து வாருங்கள் என்று உத்தரவிட்டார். வீரர்கள், பேச்சித்தாயிடம் மன்னனின் ஆணை குறித்து கூற, அவள், வீரர்கள் பின்னால் கோட்டையை நோக்கி நடந்தாள்.‘‘இவளுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக இருக்கட்டும். ம். இவளுக்கு மொட்டையடித்து, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதைமேல் ஏற்றி, ஊரை வலம் வரச்செய்து, சுண்ணாம்பு காளவாயில் தள்ளுங்கள் என்று ஆத்திரத்துடன் ஆணையிட்டான் மன்னன்.”

அப்பொழுது அமைச்சர் கையனார், அரசே, ‘‘அபலைப்பெண் அவள். இருட்டுக்குள் வாழ்ந்து பகலில் தூங்குகிறாள். பாவை மேல் சுமத்தும் பழி பாவங்கள் நம் பரம்பரையையே பாழ்படுத்தும்’’ என்றபோது, நிறுத்தும் உன் உபதேசத்தை என்று சினந்தான் மன்னன். மன்னனின் ஆணைப்படி பேச்சித்தாயை மொட்டையடித்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதை மேல் ஏற்றி வலம் வந்தனர். சுண்ணாம்பு காளவாயிலில் தள்ளப்பட்டு உயிர் போகும் நிலையில் பேச்சித்தாய் சுற்றி நின்றோர் மத்தியில் மன்னனுக்கு சாபம் இட்டாள்.

நன்று நடுக் கேளாதவன் சீமையில்
தீக் காற்றும் தீ மழையும்பெய்யக் கடவது
கண்டு நீதிநெறி சொல்லும்
கற்குவேல் ஐயனாரே நீரே சாட்சி
மன்னவன் பூமியெங்கும்
மண்மாரி பொழியட்டும்
நீதிநெறி சொல்லும்
கற்குவேல் ஐயனாருக்கு
சுளவு வடிவம் பூங்காவாகட்டும்.

என்று சாபம் இட்டாள். நெருப்பு அவளை நெருங்கும் முன்பு பேச்சியம்மன் வந்து பேச்சித்தாயை ஆட்கொண்டாள். கற்குவேல் கோயிலில் பேச்சியம்மனாக இருப்பதும் அந்த பேச்சித்தாயிதான் என்று பக்தர்கள் சிலர் கூறுகின்றனர். பேச்சித்தாயின் சாபத்தில் அப்பகுதி அழிந்து பின்னர் ஊரானது என்றும் கூறுகின்றனர். சுளவு என்பது முறம் ஆகும். சாபத்தின் படி கோயில் பின்பக்கம் விரிந்தும், முன் புறம் சுருங்கியும் சுளவு போலவே உள்ளது. கற்குவேல் அய்யனார் கோயில் நடைபெறும் விழாக்களில் முக்கிய விழா கள்ளர் வெட்டு திருவிழா ஆகும். எதற்காக இந்த திருவிழா? கற்குவேல் அய்யனாரை வேண்டி பலன் பெற்ற சிற்றரசர்களும், நிலச்சுவந்தார்களும் கோயிலுக்கு தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் முதலானவைகளை தானமாக கொடுத்தனர். இதனால் கோயில் கருவூல பெட்டகத்தில் ஆபரணங்கள் அதிகமாக இருந்தது. இதையறிந்த நெல்லை சீமையைச்சேர்ந்த வாலிபன் ஒருவன் கோயிலில் திருடுவதற்காக நுழைகிறான்.

அங்கிருந்த சாமி நகைகளை திருடிவிட்டு கோவிலின் பின்புறம் சிறிது தூரம் வந்தபோது அவன் கண்பார்வை பறிபோகிறது. கற்குவேல் அய்யனார் சினம் கொண்டு உத்தரவிட, வன்னியராஜா வீச்சரிவாளுடன் சென்று அவனை சிரச்சேதம் செய்கிறார். காலையில் மகனைத் தேடி வந்த திருடனின் தாய் கண்ணீர் விட்டு அழுகிறாள். “தெரியாமல் செய்த குற்றத்தை மன்னித்து, தன் மகனுக்கு உயிர் பிச்சை தாரும் சாமிஞ் அவன் கட்டிய மனைவியும், பெற்ற நல் பிள்ளைகளும் கஞ்சிக்கு வழியின்றி கதறுகிறார்கள். பிழைப்புக்கு வழியுமில்லை, பேரரசனும் உதவவில்லை. கருணை காட்ட யாருமில்லை, களவாட உம் இருப்பிடம் வந்தான். பிச்சாடனார் மைந்தனே உயிர் பிச்சை தாரும்” என்று அய்யனாரை வேண்டி புலம்புகிறாள்.

வேண்டும் வரம் தந்து நல்வழிப்படுத்தும் தெய்வம் அல்லவா? அய்யன் மனம் இரங்குகிறார். அசிரீரியாக பேசுகிறார். ‘‘பூசாரி வந்து புனித நீரை தெளித்து, பிரம்பால் அடிக்க.. உன் மகன் உயிர் பெற்று எழுவான்’’ என்று கூறுகிறார். உடனே அருகில் உள்ள தேரிக்குடியிருப்பில் தூங்கிக்கொண்டிருந்த கோயில் பூசாரியின் கனவில் காட்சித் தருகிறார். “பூசாரியிடம் நடந்ததை கூறி, நீ போய், நீரை தெளித்து, பிரம்பால் அடிக்க.. திருட வந்து வன்னியனால் சிரசேதம் செய்யப்பட்டவன் உயிர் பிழைப்பான்” என்று சொல்கிறார். அதிர்ச்சியில் வியந்த பூசாரி, தான் கண்ட கனவு பற்றி மற்றவர்களுக்கு கூற, ஊர் முழுவதும் தகவல் பரவி, எல்லோரும் அங்கே செல்கிறார்கள். அய்யனார் கனவில் சொன்னபடியே பூசாரி அருள் வந்து ஆடுகிறார். அவர் துண்டாக கிடந்த திருடனின் உடல் மீது அய்யன் அபிஷேக தண்ணீரை தெளித்து பிரம்பால் மூன்று அடி அடிக்க, என்ன ஒரு அதிசயம்ஞ் உடலுடன் தலை சேர்ந்தது.

உயிர்த்தெழுந்தான் கள்ளன். அந்த தாயின் வேண்டுகோள் நிறைவேறுகிறது. ஆனந்தக் கண்ணீர் வடித்த அந்த தாய், “அய்யனாரின் இந்த அற்புதத்தை அனைவருக்கும் உணர்த்தும் வண்ணம், ஆண்டுதோறும் எனது வழிவழியாக இங்கு ‘கள்ளன் சாமி’யாடி நன்றிக் கடன் செலுத்துவோம்“ என்று உறுதி கூறுகிறார்.
கள்ளனாக வந்தவர் அவர் காலம் முடிந்த பின்பு அவருக்கு உறவினர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் நிலையம் கொடுத்து சிலையிட்டனர். இந்த பீடம், அய்யனாரின் சந்நதியில் அவருக்கு எதிர்புறம் உள்ள சிறிய கோவிலில் உள்ளது. ‘கள்ளர் சாமி‘ கோவில் என்று அழைக்கப்படுகிறது. கள்ளர் வெட்டு திருவிழா
கார்த்திகை ஒன்றாம் நாள் கொடிஏற்றம். அன்றிலிருந்து முப்பதாம் நாள் கள்ளர் வெட்டு. இந்த வருடம் கார்த்திகை 29ல் முடிவதால் கள்ளர் வெட்டு மார்கழி 1 (161218) அன்று நடக்கிறது.

இந்த 30 நாளும் அய்யனாரின் கதை வில்லுப்பாட்டாக தினமும் இரண்டு வேளை பாடப்படும். விழாவின் போது காலையில் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெறும். அப்போது காவல் தெய்வங்களின் அருள் வந்து கோமரத்தாடிகள் ஆடுவர். கள்ளர்சாமிக்கு குமரேசன் என்பவர் சாமியாடுகிறார். இடுப்பில் கச்சைகட்டி, கழுத்தில் மாலையும், கையில் வல்லயமும் கொண்டு, கள்ளர் சாமியின் அருள் வந்து ஆடுவார். அப்போது பூசாரி, அவருக்கு பரிவட்டம் கட்டி, ஐவர் ராஜா சாமி சந்நதியிலிருந்து எடுத்து வந்து சுருள் பணம் கொடுப்பார். பின்னர் பேச்சியம்மன் சந்நதி முன்பு நின்று, தாயே நான் போகிறேன். உத்தரவு கொடு அம்மா என்று கள்ளர்சாமிக்கு ஆடுபவர் கேட்பார். உடனே பேச்சியம்மன் ஆடுபவர் அல்லது பூசாரி திருநீறு கொடுப்பர்.

கள்ளர் சாமியை தச்சநல்லூரிலிருந்து ஒரு குலத்தவர் கொண்டு வரும் புதிய கயிற்றால் கட்டி, அவரை இழுத்து வருவார்கள். திருவிழா அன்று கள்ளன் சாமியாடுபவர் கோவிலை சுற்றி உள்ள கடைகளில் பொருட்களை திருடுவது போன்றும், அவரை கயிற்றால் கட்டி இழுத்து செல்வது போன்றும் நடத்திக்காட்டப்படுகிறது. அவரின் பின்னால் மற்ற சாமியாடிகள் கைகளில் ஆயுதம் ஏந்தி அருளோடு வருவார்கள். ஊரை வலம் வந்து செம்மண் தேரி பகுதிக்கு அழைத்து வருவார்கள். பூசாரி தாம்பளத்தில் செவ்வவிநீர், பூ மாலை ஆகியவற்றை எடுத்து வருவார். மேல் புறம் லேசாக சீவப்பட்ட இளநீர்ஞ் அதன் மீது ரத்தச் சிவப்பில் பூசப்பட்ட குங்குமம்ஞ் அதனைச் சுற்றி பளிச் நிறத்தில் ரோஜா மாலைஞ் சாமியின் காலடியில் தாம்பாளத்தில் வைக்கப்பட்டிருந்த இவற்றை பயபக்தியுடன் கைகளில் ஏந்தியபடி பூசாரிகள் கோவிலுக்கு வெளியே கொண்டு வருகின்றனர்ஞ்கோயிலுக்கு பின்புறம் பரந்து விரிந்து கிடக்கும் மண்மேடு நோக்கி, நூற்றுக்கணக்கான பேர்கள் புடை சூழ செல்கின்றனர்.

செம்மண் வந்தவுடன் அங்கே இளநீர் தரையில் வைக்கப்படுகிறது. கைகளில் பெரிய அரிவாளுடன் வந்த சாமியாடிகளில் ஒருவர் ஓங்கி அதனை வெட்டி இரண்டு துண்டுகளாக்குகிறார். இத்திருவிழாவிற்கு பெயர்தான் ‘கள்ளர்வெட்டு.’இளநீரை வெட்ட, உதயத்தூர் கிராமத்திலிருந்து ஒரு குலத்தவர் அரிவாள் கொண்டு வருவார். ஆண்டு தோறும் புதிய கயிறு, புதிய அரிவாள் பயன்படுத்தப்படுகிறது. அறநிலையத்துறை வசம் உள்ள இக்கோவிலுக்கு திருவிழா நடக்கும் மூன்று நாட்களும் திருச்செந்தூரில் இருந்து சிறப்பு பேருந்து வசதிகள் உண்டு. மற்ற நாட்களில் மினி பேருந்து வசதி உள்ளது. கள்ளர் வெட்டு நடக்கும் பகுதியிலுள்ள புனித மண்ணை எடுத்து வயல்வெளியில் வீசினால் வயல் செழிக்கும், சிறிய துணியில் முடிந்து பூஜை அறையில் வைத்தால், செல்வம் கொழிக்கும் என்பது பக்தர்களின் அனுபவப்பூர்வ உண்மை. இங்கு அய்யனார் பூரணம், பொற்கலை ஆகிய இரு தேவியருடன் அமர்ந்த கோலத்தில் அருளாட்சி செய்கிறார். இந்தக் கோயில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள தேரிக்குடியிருப்பில் அமைந்துள்ளது. கோயில் இருக்கும் இடம் குதிரைமொழித்தேரி என்றழைக்கப்படுகிறது.

சு.இளம் கலைமாறன்

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?