திருச்சானூர் பிரமோற்சவம் 7வது நாள் : சூரிய பிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா

திருமலை: திருப்பதி அடுத்த திருச்சானூர் அலமேலு மங்காபுரம் பத்மாவதி தாயார் கோயிலில் கடந்த 4ம் தேதி கார்த்திகை மாத பிரமோற்சவம் யானை உருவம் வரையப்பட்ட கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அன்று இரவு சின்ன சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு  அருள்பாலித்தார். தொடர்ந்து தினந்தோறும் பெரிய சேஷம்,  முத்துப் பந்தல், சிம்மம்,  கற்பக விருட்சம், அனுமந்த வாகனத்திலும், மோகினி அலங்காரத்தில் பல்லக்கிலும், கஜ வாகனம், சர்வ பூபாளம், தங்க ரதம், கருட வாகனத்தில் எழுந்தருளி பத்மாவதி தாயார் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்நிலையில், பிரமோற்சவத்தின் 7வது நாளான நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட சூரிய பிரபை வாகனத்தில் உலகளந்த பெருமாள் அலங்காரத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி நான்குமாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருபுறமும் காத்திருந்து  கற்பூர ஆரத்தி எடுத்து தாயாரை வழிபட்டனர். வீதி உலாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களின் கோலாட்டம், பஜனைகள், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்றவை நடந்தது. மேலும், சுவாமியின் பல்வேறு அவதாரங்களைக் குறிக்கும் விதமாக பக்தர்கள் வேடமணிந்து வீதி உலாவில் பங்கேற்றனர்.

தொடர்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட சந்திர பிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி நான்கு மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரமோற்சவத்தின் 8வது நாளான இன்று காலை விருட்சக லக்னத்தில் மகா ரதத்திலும் (தேரில்) இரவு அஷ்வ  வாகனம்  (குதிரை வாகனத்திலும்) பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். நாளை மதியம் 11.45 மணிக்கு பஞ்சமி தீர்த்தம் என்னும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. இதையொட்டி ஏழுமலையான் கோயிலில் இருந்து மஞ்சள், குங்குமம், பட்டுப்புடவைகள், தங்க, வைர நகைகள் உட்பட சீர்வரிசை பொருட்கள்  யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தாயாருக்கு அணிவிக்கப்பட உள்ளது. அன்று மாலை கொடி இறக்கத்துடன் பிரமோற்சவம் நிறைவு பெறுகிறது.

Related Stories: