×

கார்த்திகை கடைசி சோமவாரம் : குற்றால அருவியில் நீராடி பெண்கள் சுமங்கலி பூஜை

தென்காசி: குற்றாலத்தில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி ஏராளமான பெண்கள் அருவியில் நீராடி சுமங்கலி பூஜை நடத்தினர். கார்த்திகை மாதத்தின் கடைசி சோமவாரமான நேற்று கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டி அதிகாலையிலேயே சுமங்கலி பெண்கள் குற்றாலம் மெயினருவியில் நீராடி அருகில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் திருமாங்கல்யத்தில் குங்குமமிட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொண்டனர். தொடர்ந்து குற்றாலநாதர் கோயில் அருகேயுள்ள கன்னிவிநாயகர் கோயில், செண்பக விநாயகர் கோயிலில் 11 முறை சுற்றி வந்து பிரகாரத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பழம், மஞ்சள் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர். இதில் பெண்கள் திரளாகப் பங்கேற்றனர்.  

இதனிடையே கடைசி சோமவாரத்தை முன்னிட்டு பூக்கள், பழங்கள் விற்பனையும் ஜோராக நடந்தது. இதே போல் ஆயிரக்கணக்கான பெண்கள் குவிந்ததால் குற்றாலம் மெயினருவியில் அதிகாலை 2 மணி முதல் 7 மணி வரையிலும் மீண்டும் 10 முதல் 12.30 மணி வரை ஆண்கள் பகுதியில் பெண்களையே  குளிக்க போலீசார் அனுமதித்தனர்.  இதன்காரணமாக ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பழைய குற்றாலம் அருவி, புலியருவி, ஐந்தருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

Tags : Seemangali Puja ,
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி