கோவை தண்டு மாரியம்மன்

ஒருசமயம் திப்பு சுல்தானின் படை வீரர்கள் கோவை கோட்டை மதிலுக்குள் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். அப்படை வீரர்களில் ஒருவனின் கனவில் அன்னை காட்சி அளித்தாள். நீர்ச்சுனையும், வேப்ப மரங்களும், செடி கொடிகளும் நிறைந்திருந்த ஒரு வனப் பகுதியின் நடுவே காட்சியளித்த அன்னையின் உருவம் வீரனின் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. பொழுது விடிந்ததும், கனவில் வந்த அம்மனை தேடி அலைந்தான். அவர்களின் அலைச்சல் வீண் போகவில்லை. ஒரு வேப்ப மரத்தின் அடியில் அன்னையைக் கண்டான். உவகை மிகுதியால் ஆனந்தக் கூத்தாடினான். அங்கேயே ஒரு மேடை அமைத்து அன்னையை எழுந்தருளச் செய்தான்.

தான் கூடாரத்தில் உறங்கியபோது கனவில் தோன்றிய அன்னை என்பதால் தண்டு மாரியம்மன் என்றழைத்தான். ‘தண்டு’ என்றால் படைவீரர்கள் தங்கும் கூடாரம் என்று பொருள். அங்கேயே ஆலயமும் அமைந்தது. கருவறையில் அன்னை தண்டு மாரியம்மன் வடக்கு திசை நோக்கி அமர்ந்த நிலையில் புன்னகை தவழும் இன்முகத்துடன் அருள்பாலிக்கிறாள். மேல் இரண்டு கரங்களில் கதையையும் கத்தியையும் தாங்கி, கீழ் கரங்களில் சங்குடனும், அபய முத்திரையுடன் திகழ்கிறாள். இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்ட நிலையில் காட்சி தருகிறாள். கோவை காந்திபுரம் பஸ் நிலையத்திலிருந்து அவினாசி சாலையில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.

Related Stories: