பேரறிவை அருளும் அருணாசலேஸ்வரர்

அருணா என்கிற பார்வதி தேவி அசலமான மலையை அறுபடாத வியப்புணர்வோடு பார்த்தபடி இருந்தாள். கௌதம மகரிஷியும் அவளின் ஆச்சரியத்தையும், புத்தியால் வெல்லப்படாத மலையின் இருப்புணர்வு குறித்த விஷயத்தையும் புரிந்து கொண்டார். பார்வதி அம்மை மெல்லிய குரலில் ரிஷியை நோக்கி பேசத் தொடங்கினாள். ‘‘அருணாசலம் அக்னி ஸ்தம்பமாக அல்லவா இருந்தது.’’ பார்வதி தேவி கௌதமரை நோக்கிக் வினவினாள். அவளின் குரல் வருடக் கணக்கில் தியானத்தில் இருந்து விட்டு முதல் பேச்சைப் பேசும் குழந்தைபோல பேசினாள். சொற்களைத் தேடாது எளிமையான கேள்வியாக கேட்டாள். அதுவே கௌதம மகரிஷி பல்வேறு விஷயங்களை விவரித்தலுக்குண்டான உள் உந்துதலை அளித்தது.  தேவி அறியாத ஈசனின் மான்மியமா. ஆனாலும், கேட்கக் கேட்க களிப்பூட்டும் ஞானத் திரளான அருணையின் சரிதமல்லவா இது.

கௌதமரும் சொல்லிச் சொல்லி சிலிர்த்தபடி இருந்தார். அருணையின் அளப்பரிய கருணை பேசித் தீராது. அவரும் இன்னும் கேட்க மாட்டீர்களா என்றபடி அங்குலம் அங்குலமாக பதிலுரைத்தபடி இருந்தார். ‘‘அம்மா... உண்மையில் அருணாசலன் அக்னியே ஆவான். ஆனால், கல்லையும் கனி தரும் மரங்களையும் தன்மேல் போர்த்திக் கொண்டிருப்பது என்பது கருணையினால் உலகை ரட்சிப்பதற்கே ஆகும். அக்னியா... என்று பதைத்து ஓடாது அருணாசலா... என்று அன்பாய் அருகே வரவழைக்கவே மலையுருவக் கோலம் பூண்டிருக்கிறான். ஈசனின் ஞானாக்னி சொரூபத்தை உலகம் தாங்காது. ஆகையால் உலகம் என்னைத் தாங்க வேண்டுமாயின் நான் குளிர்ந்து மலைவடிவாக மாறியிருக்கிறேன் என்று ஈசனே உறுதி கூறியிருக்கிறார்.

அதையும் தவிர அருணகிரி சித்தன் என்ற வடிவில் இந்த கிரியின் வடபாகத்தில் உச்சியில் எக்காலத்திலும் ஈசன் வசிக்கிறார். இந்த மலை வடிவத்தின் கண் இகபர ஐஸ்வர்யங்களுடன் குகைகளும் விளங்குகின்றன. எனவே, இதை வலம் வருவோர் நிச்சயம் ஆத்ம விழிப்புணர்வை அடைவர். தன்னை அறிதலில் மிகத் தீவிரமாக ஈடுபடும் தீவிரத்துவத்தை இம்மலை அளிக்கும். மோட்சத்திற்கான பாதைகள் திறந்து விடும்போது போக விஷயங்கள் எம்மாத்திரம்.’’ ‘‘அப்போது கிரியுருவில் விளங்கும் அருணாசலத்தை பிரதட்சணமாக வலம் வந்தாலே போதுமா’’அங்கிருக்கும் சீடர் குழாத்திலுள்ள ஒருவர் சந்தேகத்தோடு வினவினார்.  ‘‘அதிலென்ன சந்தேகம். தாராளமாக வலம் வாருங்கள். வந்த பிறகு பாருங்கள்.’’‘‘என்ன செய்யும்? எப்படிச் செயலாற்றும்? இதன் ரகசியம் என்ன. சற்றே விளக்கிச் சொல்லுங்கள் மகரிஷி. ஏனெனில், நாங்கள் இதை மலை வடிவிலேயே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.’’ சீடர் புத்திப் பூர்வமாக அறிந்து கொள்ளும் பொருட்டு கேட்டார்.

‘‘சரி, சொல்கிறேன். ஏனெனில், அருணாசலத்தை வலம் வருகிறோமே. இந்த மலை நம்முடைய ஸ்தூலமான கண்களுக்கு கல்லும் மலையுமாகத்தானே தெரிகிறது. ஒரு கட்டத்தில் ஈசனே இந்த மலையுருவில் இருக்கிறார் என்று சொல்லியும் கூட ஒருபுறம் சந்தேகமும், மனதின் மறுபக்கத்தில் ஈசனே இதுதான் என்கிற நிச்சய உணர்வும் மாறிமாறி அல்லவா அலைகழிக்கிறது. பரவாயில்லை இவையாவும் மானிடர்களின் இயல்பே. அதில் தவறுமில்லை. ஆனால், அருணாசலத்தை அறிவது என்பது என்ன? ஈசனை அறிவது என்பது என்ன? வெளியே இருக்கும் பொருளை அறிந்து கொள்வதுபோலா? அருணாசலத்தை அறிவது என்பது நம்முடைய ஆத்மாவை அறிவதேயாகும். இங்கிருப்போர் அனைவரும் வெளிப்புறமான பூஜைகளையும், வழிபாடுகளையும் அது சார்ந்த மற்ற வேதம் கூறும் வேள்விகளையும் நன்றாக தெரிந்து வைத்திருப்பீர்கள்.

இந்த விஷயங்களை மிகச் சிரத்தையாக செய்வதால் என்ன கிடைக்கப் போகிறது என்பதையும் அறிவீர்கள். அதாவது சித்த சுத்தி என்கிற எந்தவிதமான மாசுக்களும் அணுகாத ஒரு நிலையை அளிக்கும். அதாவது மனத்துக் கண் மாசுக்களே இல்லாத ஒரு நிலை. அந்த நிலைக்குப் பிறகு மனம் சத்வ குணத்தை கைக்கொண்டு ஆத்ம விசாரம் பழகுவதற்கு ஏதுவாக இருக்கும். எதற்கு இவ்வளவு விதிமுறைகளை விதித்திருக்கிறார்கள்? இந்த விஷயங்கள் எல்லாவற்றினுடைய மையமும் என்ன? சொல்லுங்கள் பார்ப்போம்’’ வேறொரு சீடரைப் பார்த்துக் கேட்டார்.  ‘‘வேதாந்தத்தின் மையத்தில் கூறப்படும் தன்னை அறிவதற்குண்டான பக்குவத்தை இந்த ஆத்மீகமயமான சாதனைகள் கொடுக்கும்.

அதற்காகவே இதையெல்லாம் விதித்திருக்கிறார்கள்.’’‘‘மிகச் சரியாகச் சொன்னாய். அதாவது தான் என்கிற இந்த நான் யார் என்பதை அறிய வேண்டும். இந்த நான் என்பதே அதுவேயாகும். ஆனால், நான் உடம்பு என்று அகங்காரக் கோலம் பூண்டு மயங்கி நிற்கிறது. அப்படி மயங்கியிருக்கும், இந்த உடம்பே நான் என்றும், இந்த உலகமே ஒட்டுமொத்த சுகமென்றும் மயங்கி நிற்கும் இந்த நான் யார் என்று அறிய வேண்டும். இப்படி தன்னை அறிதலே சகல சாஸ்திரங்களின் சாரம் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்காது. எதை அறிதல்...’’‘‘தன்னை அறிதல்...’’ ஒரு பால சீடன் குதூகளித்தான். ‘‘இப்போது பாருங்கள். தன்னை என்பது தன்மை என்று கொள்வோம். இப்போது நாம் அறிய வேண்டியது தன்மை என்கிற வடிவில் இருக்கும் தன்னைத்தானே.’’

‘‘ஆமாம்... ஆமாம்... புரிகிறது’’‘‘சரி, தன்மை உண்டெனில் முன்னிலையும், படர்க்கையும் இருக்கும். நான் என்கிற தன்மை இருக்கிறது. நீங்கள் என்கிற முன்னிலை இருக்கிறது. அவர்கள் என்கிற படர்க்கையும் இருக்கிறது. ஏனெனில், தன்மை இருப்பதால் இவையெல்லாம் எழுகின்றன. தன்மை எழவில்லையெனில், அதாவது அகங்கார வடிவான நான் எனும் தன்மை உணர்வு எழவில்லையெனில் இந்த உலகம் எதுவும் தோன்றாது. எனவே, உன்னால்தான் இது உருவாகியிருக்கிறது. நீ உன் பிறப்பிடத்தில் இருந்தால் அது என்கிற பிரம்மமாகவே இருப்பாய். அதாவது நான் நானாகவே இருத்தல் என்கிற உயர்ந்த ஞான நிலையில் நின்றிருப்பாய். எனவே, இப்போது எழுந்துள்ள இந்த தன்மை உணர்வுள்ள அகங்காரம் யாருக்கு எழுகிறது என்று விசாரம் செய்ய வேண்டும். ஏனெனில், தன்னை அறிதல் என்பதே சகல வேதாந்தங்களின் முக்கியமான விஷயம் என்பது உங்கள் யாவருக்குமே தெரியும்.

அப்படி அறிந்தோரையே ஜீவன் முக்தர்கள் என்றழைக்கின்றனர். அப்படி தன்னை அறிந்தோரையே ஞானிகள் என்று கொண்டாடுகின்றனர். அவர்களையே மகா யோகிகள் என்று உபநிஷதங்களும், வேதாந்தங்களும் முரசு கொட்டி அறிவிக்கின்றன. அவனே பரமாத்மா என்றும் அறைகூவல் விடுகின்றன. இதுவரை சொன்னவை புரிகிறதா. ஏனெனில், கொஞ்சம் கவனமாகக் கேட்டால் அருணாசலம் என்ன செய்யும் என்பதையும் அறிந்து கொள்வீர்கள். சீடர்கள் கண்கொட்டாது கேட்டுக் கொண்டிருந்த பார்வதி தேவியையும், முகம் முழுவதும் பூரிப்போடும், பெரும் வியப்போடும் கூறிக் கொண்டிருந்த கௌதம மகரிஷியை பார்த்தபடி இருந்தனர். ‘‘பொதுவாகவே மனம் உலகை நோக்கியே ஓடும். அதாவது இன்பங்கள் எதிலெதில் உள்ளதென்று சதா நேரம் பார்த்தபடி முன்னிலை, படர்க்கை என்று இடம் தெரியாது, தேசம் தெரியாது தேடிக் கொண்டே இருக்கும்.

இதில் ஏதேனும் சுகம் கிடைக்குமா என்றபடி ஓயாது சலசலக்கும். ஒட்டு மொத்த வாழ்க்கையையும் உலகிலேயே உழலும்படி மனமும் வைத்திருக்கும். அதாவது முன்னிலை படர்க்கை பொருட்களை நோக்கி மனம் விரிந்தபடி இருக்கும் என்பது எழுதப்படாத விதி. அது எந்தப் பொருளாயினும் சரிதான். ஆனால், இந்த அருணாசலமோ அதாவது இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த முன்னிலைப் பொருளான அருணாசலமோ தன்மையை நினைப்பூட்டும் அதிசய சக்தி வாய்ந்த முன்னிலையாகும். வேறு எந்த முன்னிலையும் தன்மையை நினைப்பூட்டாது. மனதை வெவ்வேறு விருத்திகளில் பெருக்கிக் கொண்டே இருக்கும். அருணாசலமே நம்முள் இருக்கும் ஆன்மாவாகும். நமக்குள் இருக்கும் ஆன்மா இங்கு கிரி வடிவில் எழுந்தருளியிருக்கிறது. அதன் அருகே செல்லச் செல்ல நாம் நம்முடைய தன்மை என்கிற எப்போதுமுள்ள ஆத்மாவை நெருங்குகிறோம்.

அருணாசலம் தன்னை அறியச் செய்யும் முன்னிலைப் பொருள். நான் இருக்கிறேன் என்கிற தன்மை உணர்வின் மீது உங்களின் கவனத்தை பதிய அருள் செய்யும் அதிசயமான முன்னிலை பெருஞ் சக்தியே அருணாசலமாகும். இப்போது சற்று முன் கூறினேனே. பிரம்ம விஷ்ணுக்கள் அக்னி ஸ்தம்பமாக நின்ற அருணாசலத்தின் அடிமுடியை தேடினார்கள் என்று அதை இங்கு புரிந்து கொள்வோம். பிரம்மா தான் படைத்தேன் என்கிற இடத்தில் தன்னை விட்டு உலகைக் கண்டார். ஏனெனில், தான் தானாக இருத்தல் என்பது ஆத்மாவாகவே இருத்தலாகும். அதற்கு அந்நியமாக வேறொன்றையும் அறியார். சர்வமும் நானே என்று ஈசனாகிக் கிடப்பதே அந்த நிலை. இப்போது பிரம்மா உலகத்தை படைத்தார் என்பதை இப்போது நீங்கள் காணவில்லையா?

ஏனெனில், அவர் படைத்த உலகத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் படைப்பை வேறு அதிகமாக பெருக்குகிறீர்கள். அதாவது பிரம்மாவின் சக்தி பெருகியபடி உள்ளது. விஷ்ணுவோ படைத்ததை காப்பாற்றுகிறார். அப்படி காப்பாற்றுகிற பரிபாலிக்கிற சக்தியே விஷ்ணுவாகும். தன்னால் படைக்கப்பட்ட பிரம்மனும், அவன் படைப்பையும் காக்க வேண்டும் என்கிற எண்ணத்தைக் கொண்டார். அப்போது இயல்பாகவே நான் இவையெல்லாவற்றையும் செய்கிறேன் என்கிற அகங்காரம் உதயமாயிற்று. அது தானே எல்லாவற்றையும் செய்து கொண்டிருப்பதாகவும், தானே பெரியவன் என்றும் அகங்காரம் கொண்டு அலைகிறது. அப்போதுதான் அக்னி ஸ்தம்பமான ஈசன் தோன்றி உண்மையை விளங்க வைத்தார். அதாவது இரு பெரும் அகந்தை எழுச்சிகளை அடக்கி சாந்தமாகச் செய்ய தோன்றினார். அவர்களும் ஈசனை மேலும், கீழுமாக ஒவ்வொரு மூலைக்கொன்றாக சென்று வலம் வந்தனர்.

இறுதியில் தாங்கள் யார் என்று அறிந்தனர். அங்கு துவைதமில்லை. அத்வைத நிலையான ஈசனிடமிருந்து தான் தனி வியக்தி என்கிற மாயை இல்லாது ஏக சொரூபமாக அருணாசலமாக நின்றனர். கொஞ்சம் ஆழ யோசித்தால் பிரம்மாவும், விஷ்ணுவும் யார் என்று புரியும். நமக்குத் தெரிந்தபடி புரிந்து கொண்டால் கூட படைப்பும், அதைக் காத்தலும் அதை நாம் செய்கிறோம் என்கிற அகங்கார வடிவில் நான் என்கிற எண்ணம் இருப்பதையும் கண்டு கொள்ளலாம். அது ஒருபுறம் இருக்கட்டும். எனவே, இப்போது நீங்கள் இந்த மலையை வலம் வர வலம் வர, அருணாசலத்தை நினைக்க நினைக்க ஆச்சரியமாக என்னை நினைக்கும் நீ யார் என்று பார் என்று இதுவரை நாம் கவனம் கொள்ளத் தவறிய தன்மை உணர்வின் மேல் கவனத்தை திருப்பும். இதன் மூலம் இதுவரை இடையிலே நம்மை குழப்பிய அகங்காரம் என்ன செய்வதென்று தெரியாது அழியும்.

அதாவது தான் எங்கு உற்பத்தி ஆயிற்றோ அங்கு சென்று ஒடுங்கும்.’’ கௌதம மகரிஷி சுற்றியுள்ளோரை ஒரு கணம் பார்த்தார். அந்த ஒரு கணத்தின் இடைவெளியில் ஏற்பட்ட மௌனம் எல்லோர் மீதும் கவிந்தது. மெல்ல அங்கொரு சீடர் எழுந்தார். கைகூப்பினார். ‘‘அருணாசலம் இப்படிச் செய்யும் என்கிற விஷயம் இப்போதுதான் எனக்குத் தெரியும். ஏதோ மோட்ச பூமி என்று சொன்னார்கள். ஆதலால், இங்கு வந்து தங்கியிருக்கிறேன். ஆனால், இதையெல்லாம் அறியாத பாமரர்களுக்கும் இப்படிப்பட்ட விஷயங்கள் நடக்குமா? அருணாசலம் என்பதை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டுமா?’’சகலமும் அறிந்த பார்வதி தேவியின் முன்பு அருணாசல மகாத்மியத்தை சொல்கிறோம் என்கிற சந்தோஷமும், இதைச் சொல்ல வைப்பதும் அவளே என்கிற எண்ணத்தோடும் கௌதம மகரிஷி தொடர்ந்து பேசத் தொடங்கினார்.

‘‘அருணாசலம் என்பது ஞானக் கனல். அறிந்தும் அறியாமலும், மகிமையை உணர்ந்தும் உணராமலும், போக வாழ்க்கையையே வேண்டிக்கொண்டு வந்து வலம் வந்தாலும், விளையாட்டாகவே இதை வலம் வந்தாலும் சரிதான் அவர்கள் தன்னை அறிதல் என்கிற உச்சபட்சமான ஆத்மீகமான விஷயத்தை அறிந்து கொள்வார்கள். இந்த க்ஷேத்ரம் அப்படித்தான் செய்யும். இது ஈசனின் ஆணை. உலகத்திலுள்ள எந்தவொரு விருத்தியும் இந்த தன்மை என்ற சொரூபத்திலிருந்து தூர விலக்கி வைக்கும். அதாவது தன்மை என்கிற ஞான உணர்விலிருந்து விலக்கியே வைக்கும். ஆனால், இதோ உங்கள் எதிரே விருத்தியடைந்து நிற்கும் இந்த அருணாசல விருத்தியானது உங்கள் தன்மையிலிருந்து தூர விலக்காது. அதாவது தூர விலக்காத துவைத விருத்தியாகும். அதாவது அத்வைத பொருளாகிய ஆத்ம வஸ்துவே அருணாசலமாகும்.

உனக்குள் இருக்கும் ஆத்மா வெளியே அருணாசலமாக தோன்றி உன்னை உள்ளுக்குள் செலுத்தும் சூட்சுமமிக்க விருத்தியாகும். அதனால், இந்த விருத்தியான அதாவது ஊனக் கண்களின் எதிரே தோன்றியுள்ள, விருத்தி ரூபத்திலுள்ள அருணாசலத்தை நினையுங்கள். அதையே வலம் வாருங்கள். காலக்கிரமத்தில் அதுவே தன்னோடு சேர்த்துக் கொள்ளும். ஒரு பசுவானது நடப்பட்ட முளைக் குச்சியை சுற்றிச் சுற்றி வரும்போது முளை குச்சியின் அருகே வந்து எப்படி நகர முடியாது நிற்குமோ, அதுபோல அருணாசலத்தை வலம் வர வலம் வர உங்கள் மனம் நகராமல் அருணாசலத்தோடு ஒட்டிக் கொண்டு விடும். அப்புறமென்ன? அதுவே நீங்கள் ஆவீர்கள். ஏற்கனவே அதுவாகவே நீங்கள் இருப்பதையும் உணர்வீர்கள். அங்கு துவைதம் எங்குள்ளது. ஏகமான பிரம்மம் மட்டும் உண்டு. அவ்வளவுதான்.’’

பார்வதி தேவி இமைகள் மூடாது நெடு நெடுவென்றிருக்கும் அருணாசலத்தை மீண்டும் பார்த்தாள். அருணாசல மகாத்மியம் என்பது இதுதானா? என்று பேச்சற்று மோனமாக இருந்தாள்.‘‘ரகசியம்... பரம ரகசியம்... என்கிறார்களே. அதுதானா இது. அருணாசலத்தின் ரகசியம் என்பது இதுதானா.’’ ஒரு இளம் வயது இல்லறச் சீடர் வினவினார்.‘‘இல்லை. ரகசியமே இங்கு இல்லை. உள்ளுக்குள் ஆத்மா உள்ளது. அதுதான் நீங்கள். அதுவே உங்களின் சொரூபம் என்பதுதான் சாதாரண மாயையில் உள்ளவர்களுக்கு ரகசியம். ஆனால், அதே ஆத்மா, ஈசன், பரம்பொருள் இங்கு ரகசியமாக இல்லாது வெளிப்படையாகவே மலை வடிவில் எழுந்தருளியிருக்கிறார். அதை நினைக்க வேண்டும் என்பதில் என்ன கஷ்டம் இருக்கிறது. அதை வலம் வாருங்கள் என்பதில் என்ன சிரமம் வந்துவிடப் போகிறது. அருணாசலத்தை வலம் வருதலும், நீங்கள் உள்ளுக்குள் உங்களின் சொரூபத்தை நோக்கி நகர்தலும் ஒன்றே.

நான் யார் என்று ஆராயப்புகும் ஞான விசார முயற்சிகளில் ஐயம் ஏற்பட்டால் அருணாசலத்தை வலம் வாருங்கள். அருணாசலம் எனும் வார்த்தையே மகாவாக்கியம். அந்த நாமமே அகத்தையே அதாவது அகந்தையை வேரோடு அறுக்கவல்லது. அதற்கு இங்கு வாழும், இனி வரப்போகும் ஞானிகளே சாட்சியாகும். எனவே, அருணாசல மலையின் மகிமையை தெரிந்து கொண்டு வருதல் என்பது சிரத்தையை அதிகமாக்கும். சிந்தையின் ஏகாகிரகத்தை இன்னும் கூர்மையாக்கும்.  பக்தியையும் புஷ்டியாக்கும். எப்பேற்பட்ட வஸ்து இது? பெறுதற்கும் அரிதான பேறான ஞானத்தை வழங்கவல்லதான அருட்பெரும் ஆற்றலல்லவா இது என்பதைப் புரிந்துகொண்டு வரும்போது இன்னும் நெருங்கிச் சென்று விடலாமே? உன்னை அறிவதற்கு நான் யார் என்று தன்னை சமர்ப்பிக்கும் சரணாகதி இங்கு எளிதாக சாத்தியமாகி விடுமே?’’

‘‘அருணாசல கிரிவலம் வருவதற்கும், தியானம் முதலிய ஆன்மிக சாதனைகளை மேற்கொண்டு செய்வதற்கும் ஏதேனும் தொடர்புண்டா, மகரிஷி அவர்களே.’’ ஹடயோகி ஒருவர் கௌதமரை பணிந்து கேட்டார்.‘‘தியானத்தின்போது உங்களுக்குள் ஏற்படும் போராட்டங்கள் அதிகமானது. நீங்கள் கொஞ்சம் அயர்ந்தாலும் மனம் ஓரிடத்தில் நிற்காது ஓடுவதை கவனிப்பீர்கள். உங்களின் சொரூபத்தை நாடிய உங்களின் முயற்சியில் பல்வேறு அவஸ்தைகளை அனுபவித்திருப்பீர்கள். ஆனால், கிரிவலம் செய்யும்போது நாளாவட்டத்தில் பெரும் முயற்சியின்றியே உங்களின் மனம் அடங்குவதை உணருவீர்கள். அவ்வளவு ஏன், உலகாயதமான பிரார்த்தனைகளுக்குக்கூட கிரிவலம் வருவோர் போகப்போக மனம் பக்குவம்பெற்று வைராக்கியத்தையும், தன்னில் மூழ்கும் விவேகத்தையும் பெறுவார்கள்.

இது எப்படியெனில் ஈர விறகானது காய்ந்து காய்ந்து ஒருநாள் சட்டென்று பற்றிக் கொள்வதுபோல உலக வாசனைகளில் மிக அதிகமாக ஊறிய மனம் கிரி பிரதட்சணம் வரவர தானே தீப்பற்றி எரிகிறது. ஒருமுறை கிரிவலம் வருவதாலேயே மீண்டும் மீண்டும் அந்த மலை ஈர்த்து தன்னை மீண்டும் வரம் வலச் செய்யும் மகத்துவம் வாய்ந்தது. சத்சங்கமாக நாம் இங்கு சேர்ந்திருந்து உபதேசங்களை பெறுகிறோம். குருவின் அருளும், உபதேசங்களும் ஒருவருக்குள் புகுந்து ஆத்மீகமான வாழ்க்கையில் ஒருவரை முன்னே செலுத்துகின்றன. அப்படி வெளிப்புறமாக சத்சங்கம் அமையாதவர்களுக்கும், மானிட உருவில் குரு இவர்தான் என்று தெரியாதவர்களுக்கும் இந்த அருணாசலமே குருவாகவும், சத்சங்கமாக செயல்பட்டு அவர்களை நற்பாதையில் செலுத்திக் கொண்டபடியே செல்லும்.’’

கிருஷ்ணா

Related Stories: