×

பகவான் ஸ்ரீரமண மகரிஷி அருளிய அருணாசல மாகாத்மியம்

உரை: சாது ஓம் சுவாமிகள்
தீப தரிசன தத்துவம்
இத்தனுவே நானா மெனுமதியை நீத்தப்
புத்தியித யத்தே பொருந்தியக நோக்கா

லத்துவித மாமெய் யகச் சுடர்காண் கைபூமத்தியெனு மண்ணா மலைச்சுடர்காண் மெய்யே பூமியின் இதய ஸ்தானம் என்று சொல்லப்படுகின்ற அண்ணாமலையின் தீபதரிசன உண்மை யாதென்பதை இதில் விளக்குகிறார். அதாவது நான் இவ்வுடலே என்று அபிமானிக்கும் அகந்தை உணர்வே மனித வர்க்கத்தைப் பிடித்துள்ள நோயென்றும், அதற்கான மருந்து நான் என்று மட்டும் விளங்கும் தன் இருப்புணர்வை நோக்கும் ஆன்ம விசாரத்தால் புத்தியை இதயத்திலே பதித்தல் என்றும், அதன் பயனாய் அடையப் பெறும் லட்சியமாவது அகந்தை அழியப்பெற்று நான் நானே என்று இதயத்தில் பிரகாசிக்கும் உபாதி கலப்பற்ற அறிவொளியாகிய இரண்டற்ற மெய்ப்பொருளைத் தரிசிப்பதே ஆகும் என்றும் விளக்குகிறார்.  

அதுவேதல மருணாசலந் தலம்யாவிலு மதிக
மதுபூமியி னிதயம்மறி யதுவேசிவ னிதயப்
பதியாமொரு மருமத்தலம் பதியாமவ னதிலே
வதிவானொளி மலையாநித மருணாசல மெனவே.

‘ஸ்தலம்’ என்று கூறப்படுவதென்றால், அது அருணாசல க்ஷேத்ரமேயாகும். அது ஸ்தலங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும். அது இப்பூவுலகின் இதயமாகும். இம்மலையே சிவபிரானாகும். அன்றியும் இது சிவபிரானது நடுநாயக ஸ்தானமான ஒப்பற்ற ஓர் ரகசிய ஸ்தலமுமாகும் என்றறிக. மேலும் இறைவனாகிய சிவபிரான் இத்தலத்தின்கண் ‘அருணாசலம்’ என்ற பெயரோடு ஜோதிமலையாக எப்பொழுதும் விளங்குகின்றான். இவ்வாறு அறிவாயாக.

சிவ வசனம் :
அங்கியுரு வாயுமொளி மங்குகிரி யாகத்
தங்கலரு ளாலுலகந் தாங்குவதற் கன்றி
யிங்குறைவன் சித்தனென வென்றுமென துள்ளே
பொங்கியொளி ருங்குகைபல் போகமொடென்
றுள்ளே.

நான் உண்மையில் அக்கினி வடிவமேயானாலும் ஒளியடங்கி சாந்தமான கல் மலையாக உருக்கொண்டிருப்பது ஏனென்றால், எனது பரமகருணையினால் உலகை ரக்ஷிப்பதற்காகவே. அன்றியும் ‘அருணகிரி சித்தன்’ என்ற வடிவில், இக்கிரியின் வடபால் உச்சியில் நான் எக்காலத்தும் வசிக்கின்றேன். இந்த எனது மலை வடிவத்தின்கண்பலவித இகபர போக ஐஸ்வர்யங்களுடன் குகைகள் பல சிறந்து விளங்குகின்றன என்று இப்படியாகக் கருதுவாயாக.

குறிப்பு : ‘உலகம் தாங்குவதற்கு’ என்ற சொற்றொடருக்கு வடமொழி மூலத்தில் ‘லோக ரக்ஷணாத்’ என்ற சொற்றொடர் கையாளப்பட்டுள்ளது; இவ் வடமொழி சொற்றொடருக்கு ‘உலகை ரக்ஷிப்பதற்காகவே’ என்று மட்டுமே பொருள்படும். ஆனால், ஸ்ரீபகவான் கையாண்டுள்ள ‘உலகம் தாங்குவதற்கு’ என்ற சொற்றொடருக்கு ‘உலகம் என்னைத் தாங்க வேண்டுமென்பதற்காகவே’ என்ற சிறப்புப் பொருளும் காணக் கிடைக்கிறது. இதன் விளக்கமாவது ‘என் அக்கினி வடிவை (ஞானாக்கினி சொரூபத்தை) உலகம் தாங்காது; ஆகையால் அது என்னைத் தாங்கவேண்டுமாயின், நான் குளிர்ந்து மலைவடிவே யாகவேண்டும்’ என்பதாகும்.

உருத்தெரி யெல்லை யுற்றுகண் ணுற்றாற்
கருத்தினாற் றூரக் கருதினா லும்மே
வருத்தமு றாது வராதவே தாந்த
வருத்தவிஞ் ஞான மார்க்குமுண் டாமே.

அருணாசலத்தின் உருவம் தெரியக்கூடிய எல்லையில் வந்தடைந்திருந்து தரிசித்தாலும், அல்லது அருணாசலத்தைக் காண முடியாத தூரத்திலிருப்போர் மனத்தினால் அருணாசலத்தை நினைத்தாலுங்கூட, மிக வருந்திப் பாடுபட்டாலன்றி அடைய முடியாத வேதாந்தத்தின் உண்மைப் பொருளாகிய ஆன்மஞானம் எத்தகையவர்க்கும் எளிதில் உண்டாகும்.

யோசனை மூன்றா மித்தல வாசர்க்
காசறு தீக்கை யாதியின் றியுமென்
பாசமில் சாயுச் சியம்பயக் கும்மே
யீசனா மென்ற னாணையி னானே.

மூன்று யோசனை அளவுள்ளதாகிய (கிட்டத்தட்ட 50 கி.மீ.) இத்தலத்தில் வசிப்பவர்களுக்கு, குற்றம் அகற்றும் குருவினுடைய தீக்ஷை முதலியன எதுவும் இல்லாமலேயே, பற்றற்றதான, என்னோடு இரண்டறக் கலக்கும் சாயுச்சிய முக்தியை சர்வேசுவரனாகிய நான் என்னுடைய ஆக்ஞையினாலேயே கொடுக்கின்றேன்.

Tags : Shri ,Arunachal Pradesh Provincial ,
× RELATED ஸ்ரீ ஸாயி பாபா புராணம்!