×

அண்ணாமலையானுக்கு அரோகரா!

கார்த்திகை தீபத்திருவிழா உற்சவம் நடைபெறும் நாட்களில், திருவீதியுலா வரும் வாகனங்கள்: வெள்ளி மூஷிகம், வெள்ளி மயில்,  வெள்ளி அதிகார நந்தி, ஹம்சம், காமதேனு, சிம்மம், வெள்ளி இந்திர விமானங்கள், வெள்ளி கற்பக விருட்சம், வெள்ளி அன்னம், வெள்ளி பெரிய ரிஷபம், வெள்ளி குதிரை, கைலாசம், தங்கமேரு, வெள்ளி ரதம், மகா ரதம்.

கார்த்திகை தீபத்திருவிழா உற்சவம் சிறப்பாக நடைபெற வேண்டி, விழா தொடங்குவதற்கு முன்பு காவல் எல்லை தெய்வ வழிபாடு நடத்துவது மரபு. அதன்படி, துர்க்கையம்மன், பிடாரியம்மன், விநாயகர் வழிபாடு தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும்.

கார்த்திகை தீபத்திருவிழாவில் 7ம் நாளான மகா ரத பவனியின்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரும்புத் தொட்டில் நேர்த்திக்கடன் செலுத்து கின்றனர். இதுபோன்ற நேர்த்திக்கடன் வேறு எந்த ஸ்தலங்களிலும் இல்லை. மகப்பேறு பாக்கியம் வேண்டி கரும்புத் தொட்டில் நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது. திருக்கோயில் 3ம் பிராகாரம், மாட வீதி ஆகியவை கரும்பு தொட்டில் நேர்த்திக்கடன் செலுத்த ஏற்றதாகும்.

தீபத்திருவிழாவின் உற்சவத்தின் 10ம் நாளன்று அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். 108 நாட்கள் கடும் விரதமிருக்கும் சிவாச்சாரியார், பரணி தீபத்தை ஏற்றுவது மரபு.

தீபத்திருவிழா உற்சவத்தின் 10ம் நாளன்று மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றப்படும். மலைமீது ஏற்றப்படும் மகா தீபம், தொடர்ந்து 11 நாட்கள் பிரகாசிக்கும்.

மகா தீபம் ஏற்றும்போது, கோயில் கொடி மரம் எதிரில் 3ம் பிராகாரத்தில் அமைந்துள்ள காட்சி மண்டபத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் எழுந்தருள்வார்கள்.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே எழுந்தருளும் அர்த்தநாரீஸ்வரர், மகா தீபம் ஏற்றும் சில வினாடிகளுக்கு முன்பு கொடி மரத்தின் முன்பு ஆனந்த தாண்டவத்தில் எழுந்தருள்வார். அப்போது, அகண்ட தீபம் ஏற்றப்படும். அதனை தொடர்ந்தே, மலை மீது மகா தீபம் ஏற்றப்படும்.

மகா தீபப்பெருவிழா நிறைவுற்றதும், ஐயங்குளத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறும். முதல் நாளில் சந்திரசேகரர், இரண்டாம் நாளில் பராசக்தி அம்மன், மூன்றாம் நாளில் சுப்பிரமணியர் பவனி வந்து அருள்பாலிக்கின்றனர்.

ஆதியும், அந்தமும் இல்லாத பரம்பொருளான இறைவன், ஜோதியே வடிவாக எழுந்தருளும் மகா தீபத்தின் மறுநாள், உண்ணாமலையம்மன் சமேதராக அண்ணாமலையார் கிரிவலம் செல்வது விசேஷம். திருவூடலின்போதும், மகா தீபத்தின்போதும் என ஆண்டுக்கு இருமுறை இறைவனே கிரிவலம் செல்வது தனிச்சிறப்பு.

சிவன் கோயில்களில் வைகுந்த வாசல் அமைவது அபூர்வம். அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வைகுந்த வாசல் அமைந்திருக்கிறது. அங்கிருந்து மலையுருவை தரிசிப்பது புண்ணியம். வைணவ கோயில்களில் மட்டுமே நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு, சைவ திருத்தலமான அண்ணாமலையார் கோயிலிலும் நடைபெறுகிறது.

அண்ணாமலையார் திருக்கோயிலில் அர்த்தஜாம பூஜை முடிந்தபிறகு, பள்ளி அறைக்கு செல்லும் அம்மனின் திருமேனிக்கு பெயர் வைபோக நாயகி.

துபம், மகா தீபம், அலங்கார தீபம், நாக தீபம், விருஷப தீபம், புருஷாமிருக தீபம், ஓல தீபம், கமடதி தீபம், கணு தீபம், வியானன் தீபம், மயூர தீபம், ஐந்தட்டு தீபம், சிம்ம தீபம், துலஜதீபம், நட்சத்திர தீபம், மேரு தீபம் என தீபங்கள் 16 வகையாகும். அதில், சிவனுக்கு உகந்ததும் திருவண்ணாமலையில் ஏற்றப்படுவதும் மகா தீபம்.

அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் பூஜைகள்: உஷத்காலம் காலை 5.30, காலசந்தி பூஜை காலை மணி, உச்சிகால பூஜை  பகல் 11.30, சாயரட்சை பூஜை  மாலை 6 மணி, இரண்டாங்கலம் இரவு  7.30, அர்த்தஜாமம் இரவு 9 மணி.

அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கு ஆறுகால பூஜையும், அம்மனுக்கு ஐந்துகால பூஜையும் நடைபெறும். ஆறாம்கால பூஜை முடிந்து அம்மன் பள்ளியறைக்கு போகும்போது தலைகாயாது என்பதால் கூந்தல் மலர் மட்டும் மாற்றப்படுவது மரபு.

மலை சுற்றும் வழியில் உள்ளது நேர் அண்ணாமலை சந்நதி. தீபம் ஏற்றும் மலை உச்சிக்கு சரியாக நேர்க்கோட்டில் அமைந்துள்ளதால் நேர் அண்ணாமலை எனும் பெயர் பெற்றது. அண்ணாமலையார் கோயில் கருவறையில் இருந்து நேர்க்கோட்டில் அமைந்துள்ளதாலும் இப்பெயர் என மற்றொரு கருத்தும் உள்ளது.

அண்ணாமலையார் கோயிலில் ஸ்தல விருட்சம் மகிழ மரம். மகுட மரம் என்றும் அழைக்கப்படும். அக்னி ஸ்தலம் என்பதால், இத்திருக்கோயிலுக்கு ஸ்தல விருட்சமே இல்லை என்ற கருத்தும் உண்டு.

மலை சுற்றும் பாதையில் அமைந்துள்ளது இடுக்கு பிள்ளையார் கோயில். குபேர லிங்கத்தை கடந்து வந்தால், இடுக்கு பிள்ளையாரை தரிசிக்கலாம். குறுகலான இக்கோயிலுக்குள் உடலை வளைத்து சென்று வந்தால் பெண்களுக்கு கர்ப்பப்பை அமைப்பு சீராகி குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

சபரிமலைக்கு மாலை அணிந்து, விரதம் பூண்டு மலைக்கு செல்வது போல திருவண்ணாமலையிலும் வழக்கம் உள்ளது. கார்த்திகை மாதம் தீபத்திருவிழா கொடியேற்றத்தின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், விரத மாலை அணிவதும், மகா தீபத்தின்போது மலைக்கு சென்று நெய் காணிக்கை செய்வதும் தனிச்சிறப்பு.

அருணகிரிநாதர் அவதரித்த திருநகரம் திருவண்ணாமலை. ‘முத்தைத்திரு பத்தித் திருநகை’ எனும் திருப்பாடல் உருவான திருத்தலம் அண்ணாமலையார் சந்நதி. அருணகிரி நாதர் உடலை எரித்துவிட்ட பிறகு, கிளி உருவில் அவர் பாடியது கந்தரனுபூதி. மொத்தம் 195 ஸ்தலங்கள் பற்றி பாடியுள்ளார்.

பெண்கள் மட்டுமே தேரின் வடம் பிடித்து இழத்துச் செல்லும் சிறப்பு பெற்றது திருவண்ணாமலை தீபத்திருவிழா மகா தேரோட்டத்தில் நடைபெறும் அம்மன் தேர். ஆண்கள் வடம் பிடிப்பது வழக்கமல்ல.

அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் திருமணங்கள் சுவாமி சந்நதியில் நடப்பது வழக்கமில்லை. உண்ணாமுலையம்மன் சந்நதியில் மட்டுமே திருமணங்கள் நடைபெறும்.

அனைத்து திருக்கோயில்களிலும் உள்ள நவகிரங்களின் அமைப்பில் இருந்து, அண்ணாமலையார் கோயிலில் அம்மன் சந்நதி எதிரில் உள்ள நவகிரகங்களின் அமைப்பு சற்று மாறுபட்டிருக்கும்.

கி.வினோத்குமார்

படங்கள்: சு.திவாகர்

Tags : Brother ,
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...