செங்காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

காரிமங்கலம்: அரியகுளம் செங்காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கிருஷ்ணாபுரம் ஊராட்சி அரியகுளத்தில் செங்காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்தல், 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, விநாயகர் பூஜையும், இரவு 7.45 மணிக்கு முதல் கால யாக பூஜையும், 8 மணிக்கு எண்வகை மருந்து சாற்றுதலும், 8.45 மணிக்கு வேள்வி நிறைவு, திருமுறை விண்ணப்பமும், 9.30 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடந்தது.

நேற்று அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 5.30 மணிக்கு 2ம் கால யாக பூஜை, 6.30 மணிக்கு வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு, 7 மணிக்கு திருக்குடங்கள் புறப்படுதல் நடந்தது. காலை 7 மணிக்கு மேல் விமானங்கள் மற்றும் மூலமூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு நடந்தது. கோவை திருப்போரூர் மணிவாசகர் அருட்பணி மன்ற குமரலிங்கம் தலைமை வகித்து, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.

காலை 9 மணிக்கு பதின்மங்கல காட்சி, 10 மணிக்கு பெருதிருமஞ்சனம், 11 மணிக்கு பேரொளி வழிபாடும், அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கிருஷ்ணாபுரம், கொண்டம்பட்டி, ஆண்டிஅள்ளி ஊராட்சி பொதுமக்கள், திருப்பணிக்குழு நிர்வாகிகள் கோபு(எ) துத்தியப்பன், முன்னாள் வீட்டு வசதி சங்க தலைவர் நடராஜன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: