திருமலை நாயக்கர் கட்டிய பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்

மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் 600 ஆண்டுகள் பழமையான கோயில் என்ற பெருமைக்குரியது. இக்கோயிலில் மூலவராக ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாசலபதி உள்ளார். மூலவரின் கருவறைக்கு அருகில், சுயம்பு மூர்த்தியாக ஆஞ்சநேயர் உக்கிரமாக காட்சியளிக்கிறார். அவரது உக்கிரத்தை குறைக்கும் விதமாக, எதிரில் உள்ள கல்லில் சங்கு, சக்கர வடிவில் சக்கரத்தாழ்வார் காட்சி தருகிறார். கோயிலில் கொடிமரம் உள்ளது. கோயிலுக்கு எதிரே தெப்பக்குளம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இக்கோயில் உள்ளது.

Advertising
Advertising

தல வரலாறு

மதுரையை 600 ஆண்டுகளுக்கு முன்னர் திருமலை நாயக்கர் ஆண்டு வந்தார். தினமும் திருப்பதி வெங்கடாசலபதியை வணங்கிய பின்பே, அவர் உணவு சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருந்தார். திருப்பதியில் உள்ள வெங்கடாசலபதி கோயிலில் பூஜை நடப்பதை அறியும் வகையில் திருப்பதியிலிருந்து, மதுரை வரை வழிநெடுகிலும் பெரிய மணிகளுடன் கூடிய மண்டபங்களை அவர் கட்டினார். திருப்பதியில் பூஜை துவங்கியுடவுடன் இந்த மண்டபங்களில் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக மணி அடிக்கப்படும்.

இதன் மூலம் திருப்பதியில் பூஜை நடப்பதையறிந்து, வெங்கடாசலபதியை திருமலை நாயக்கர் வணங்கி வந்தார். ஒருநாள் மணி ஒலிக்காததால் கோபமடைந்த மன்னர், அரண்மனையிலிருந்து கிளம்பி மண்டபத்திற்கு வந்தார். வழியில் ஒரு தோட்டத்தை கடந்த போது, அங்கு மண்ணில் புதைந்த நிலையில் ஒரு ஆஞ்சநேயர் சிலையை கண்டார். அவர் முன்பு பிரசன்னமான பெருமாள், அப்பகுதியில் தனக்கு கோயில் எழுப்புமாறும், அதில் ஆஞ்சநேயர் சிலையை பிரதிஷ்டை செய்யுமாறும் கூறி மறைந்தார். இதன் பின்னர் ‘பிரசன்ன வெங்கடாசலபதி’ என்ற பெயரில் திருமலை நாயக்கர் அப்பகுதியில் கோயில் எழுப்பினார். திருப்பதிக்கு சென்று வெங்கடாசலபதியை வழிபட முடியாதவர்கள், இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டால் நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம்.

சித்ரா பவுர்ணமி திருவிழா, ஆனிப்பூரம், புரட்டாசி பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ராப்பத்து உற்சவம் உள்ளிட்டவை இக்கோயிலின் விசேஷ தினங்களாகும். இவற்றில் சித்திரை திருவிழா, புரட்டாசி பிரமோற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்ரா பவுர்ணமி திருவிழாவையொட்டி அழகர்கோயிலிலிருந்து பல்லக்கில் புறப்படும் அழகர், பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் எழுந்தருள்கிறார். அங்கு அவருக்கு திருவில்லிப்புத்தூர் ஆண்டாளின் மாலை அணிவிக்கப்பட்டு, அபிஷேக, ஆராதனைகள் நடக்கின்றன. இதனையடுத்து மறுநாள் அதிகாலையில் வைகையில் தங்கக் குதிரையில் அழகர் எழுந்தருள்கிறார்.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். புரட்டாசி மாதம் துவங்கியவுடன் விரதத்தை துவக்கும் பக்தர்கள், சனிக்கிழமைகளில் பெருமாள் மற்றும் அம்பாளை தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் சிலர் வீடு, வீடாக சென்று ‘கோவிந்தா’ கோஷமிட்டு அரிசியை காணிக்கையாக பெற்று வேண்டுதல் நிறைவேற்றுகின்றனர். இங்குள்ள மூலவரை வேண்டி வணங்கினால் கல்வி, திருமணத்தடை நீங்கும். குழந்தைப்பேறு, வேலை கிட்டும். இங்குள்ள கோமாதாவிற்கு அகத்தி கிரை வழங்கினால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். ஆஞ்சநேயரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் வழக்குகளில் வெற்றி கிட்டும். வியாதிகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் மூலவருக்கு புஷ்ப அங்கி சாற்றி, சிறப்பு அபிஷேகம் மற்றும் நைவேத்யம் செய்கின்றனர். ஆஞ்சநேயருக்கு வடை, துளசி, வெற்றிலை மாலைகளை சாற்றி வணங்குகின்றனர். விவசாயம், வியாபாரத்தில் உயர்வு பெற்றவர்கள் நெல், சோளம், கம்பு, கடலை, மிளகாய் உள்ளிட்ட தானியங்களை நேர்த்திக் கடனாக செலுத்துகின்றனர். தினமும் அதிகாலையில் விஷ்வரூப தரிசன பூஜை நடக்கிறது. கோயில் நடை தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கிறது.

Related Stories: