கார்த்திகை தீபத்திருவிழா 2ம் நாள் உற்சவம் : வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்ச மூர்த்திகள் பவனி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் 2ம் நாள் உற்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது. தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரரும், வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்ச மூர்த்திகளும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் 2ம் நாள் உற்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. சுவாமி தரிசனத்துக்காக அதிகாலையில் இருந்தே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தொடர்ந்து, காலை 11.30 மணி அளவில், ராஜகோபுரம் எதிரில் இருந்து மங்கள இசை, சங்கொலி முழங்க, மூஷிக வாகனத்தில் விநாயகரும், தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரரும் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளும் காட்சி திதி கோலமாகும். சூரியன், சந்திரன் இயக்கத்தால், உலகம் நிலைத்துள்ளது என்பதை உணர்த்துவது திருவீதிஉலா வாகனத்தின் தத்துவமாகும். அனைத்து உயிர்களையும், அண்ட சராசரங்களையும் காக்கும் இறைவனாகிய பரம்பொருள், சூரிய, சந்திர கோள்களுக்கு இடையே ஞானம்பெறும் தீச்சுடராக விளங்குவதால் இரவும், பகலும், தட்ப வெட்பமும் உண்டாகிறது என்பதே திதி கோலத்தின் உட்பொருளாகும்.

இரவு 10 மணி அளவில், திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து அலங்கார ரூபத்தில் புறப்பட்ட விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர், 3ம் பிரகாரத்தை வலம் வந்தனர். பின்னர், ராஜகோபுரம் எதிரில் உள்ள அலங்கார மண்டபத்தில், அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து, அதிர்வேட்டுகள் முழங்க மாட வீதியில் பவனிவந்து அருள்பாலித்தனர். தீபத்திருவிழா உற்சவத்தில், சுவாமி திருவீதிஉலாவுக்கு முன்பாக கம்பீரமாக நடந்து செல்லும் கோயில் யானை ருக்கு, இந்த ஆண்டு இல்லாதது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.

வீதிஉலா வாகன சிறப்பு

தூய்மையான அறிவுடைய ஆன்மா, இறைவனை பற்றிக்கொண்டு, அவன் மூலமாக அவனை அடைதல் இரண்டாம் நாள் இரவு உறசவத்தின் தத்துவமாகும். இந்திரன் தன் விமானத்தில் அனைத்து உலகத்தையும் காண்கிறார். பரம்பொருளான இறைவன், ஐந்து தொழில்களையும் செய்து, அதனை நோக்குகிறார். அதையொட்டி, இந்திர விமானத்தில் பவனி வந்து, அனைவரையும் காத்து அருள்புரிய மாடவீதியில் இறைவன் உலா வருகிறார் என்பது விழாவின் உட்பொருளாகும்.

தீபவிழாவில் இன்று 3ம் நாள் உற்சவம்

காலை உற்சவம்: மூஷிக வாகனத்தில் விநாயகர், பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி. காலை 11.00 மணி: அண்ணாமலையார் கோயிலில் 1,008 சங்காபிஷேகம்.

இரவு உற்சவம்: விநாயகர் மூஷிக வாகனம், சுப்பிரமணியர்மயில் வாகனம், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார்சிம்ம வாகனம், பராசக்தி அம்மன் வெள்ளி அன்ன வாகனம், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனம்.

Related Stories: