தொலையாத பிறவித் துன்பம் என்று தொலையுமோ?

அருணகிரி உலா - 63

Advertising
Advertising

‘‘கொடுங்கைப் பட்ட மராமரம் ஏழுடன்

நடுங்கச் சுக்கரிவனோட மராடிய

குரங்கைச் செற்று மகோததி தூனெழ நிருதேசன்

குலங்கப்பட்ட நிசாசரர் கோவென

இலங்கைக்குள் தழலோனெழ நீடிய

குமண்டைக் குத்திர ராவணனார் முடி அடியோடே

பிடுங்கத் தொட்ட சராதிபனார் அதி

ப்ரியங்கொள் தக்க நன்மாமருகா, இயல்

ப்ரபஞ்சத்துக் கொரு பாவலனாரென விருதூதும்

ப்ரசண்டச் சொற் சிவ வேத சிகாமணி

ப்ரபந்தத்துக்கொரு நாத சதாசிவ

பெரும்பற்றப் புலியூர் தனில் மேவிய பெருமாளே.’’

பொருள்: கொடுமைக்கிடமான ஏழு மராமரங்களுடன், சுக்ரீவனும் நடுங்கும்படி அவனுடன் போர் புரிந்த வாலியை அழித்து, பெருங்கடலானது தூளாகும்படி, ராவணனின் குலத்தவரான அரக்கர்கள் கோ என அலற, இலங்காபுரி தீமூள, பெரும் செல்வச் செருக்கும் வஞ்சக மனமும் உடைய ராவணனின் எல்லா தலைகளும் அறுந்து விழும்படி வில்லைச் செலுத்திய ராமபிரான் மிகவும் அன்பு பாராட்டும் சிறந்த மருகனே!

இயல் முதலான முத்தமிழுக்கும், அது விளங்கும் தமிழகத்திற்கும் ஒரு ஒப்பற்ற கவிராஜன் என வெற்றிச் சின்னங்கள் ஊதும், வீரம் வாய்ந்த தேவாரப் பதிகங்களை ஓதிய சிவவேத சிகாமணியாகிய (ஞான சம்பந்த) மூர்த்தியே! நூல் வகைகளுக்கெல்லாம் தலைவனே! என்றும் மங்களகரமானவனே! பெரம்பற்றப் புலியூர் எனும் சிதம்பரத்தில் வீற்றிருப்பவனே!’’இப்பாடலில் மனனம் செய்து தினம் கூறத்தக்க வேண்டுகோளையும் வைத்திருக்கிறார்.

‘‘மனதாலே இறந்திட்டுப் பெறவே கதியாயினும்,

  இருந்திட்டுப் பெறவே மதியாயினும்,

  இரண்டில் தக்கதொர் ஊதியம் நீதர இசைவாயே.’’

‘‘என் மனமானது இறந்து அதாவது மனோநாசம் ஏற்பட்டு, அதனாலே நல்ல கதி எனப்படும் மோட்சத்தை அடையவாவது, அல்லது, பூமியில் வாழும்பொழுதே நல்ல அறிவை அளித்து, அதனால் மனது உத்தமனாகி, அதன்மூலம் பெரு வாழ்வைப் பெறவாவது, இவ்விரண்டிலும் எந்த ஊதியம் எனக்குத் தரத்தக்கது என்று கருதி அதை எனக்குத் தந்தருள்வாயாக’’ என்று  அழகிய, கருத்து நயம் மிகுந்த வேண்டுதலை வைக்கிறார். கோவிந்தரை வணங்கி வெளியே வரும்போது அடுத்த பிராகாரத்தில் நடராஜர் சந்நதிக்கு நேராக அமைக்கப்பட்டுள்ள கொடி மரத்தைக் காணலாம். இதன் பின்னால் தெற்குப்புறம் உள்ள நிருத்த சபையை நோக்கிச் செல்கிறோம். இது இறைவன் காளியுடன் ஊர்த்துவ தாண்டவமாடிய இடமாதலால், கிழக்கு நோக்கிய ஊர்த்துவ தாண்டவர் சந்நதி இங்கு அமைந்துள்ளது.

‘‘உக்ர வீர பத்ரகாளி வெட்க மகுடாம்

ஆசாசமுட்ட வீசி விட்ட காலர்’’ என்றும்

‘‘மகாகாளி நாண முனம் அவைதனில் நடித்தோனை’’ என்றும்,

‘‘திட்டென எதிர்வரு மாகாளியினொடு திக்கிட தரிகிட

தீதோம் என வரு சித்திர வெகுவித வாதாடிய பத மலராளன்’’

 

- என்றும் பாடியுள்ளார் அருணகிரிநாதர். சந்நதி வாசலில் பிள்ளையார் முருகன் (இவர் நாம் காணும் மூன்றாவது முருகனின் திருவுருவம்) இருவரையும் கண்டு வணங்குகிறோம். இங்கு ஒரு சிதம்பரத் திருப்புகழைச் சமர்ப்பிக்கிறோம். ‘மந்தர மென்’ எனத் துவங்கும் பாடலில் சிவபெருமானது ஆடலை வெகுவாக விவரிக்கிறார்.

‘‘அந்தர துந்துமியோடுடன் கண

நாதர் புகழ்ந்திட, வேத விஞ்சையர்

இந்திர சந்திரர் சூரியன் கவி

வாணர் தவம் புலியோர் பதஞ்சலி

அம்புயன் அம்திருமாலொடு இந்திரை

வாணி அணங்கவளோடு அருந்தவர் தங்கள் மாதர்

அம்பரர் அம்பையரோடுடன் திகழ்

மா உரகன்புவியோர்கள் மங்கையர்

அம்புவி மங்கையரோடருந்ததி

மாதர் புகழ்ந்திடவே நடம்புரி

அம்பய செம் பதர் மாடகஞ் சிவ

காம சவுந்தரியாள் பயந்தருள் கந்தவேளே’’

 

- எனும் அப்பாடலின் வர்ணனைகள் மிக அழகாக உள்ளன. ‘‘ஆகாயத்தில் ஒலிக்கும் பேரிகை வாத்தியங்களுடன் கணத் தலைவர்கள் புகழ, வேத மந்திர வல்லவர்கள், இந்திரர்கள், சந்திரர்கள், சூரியன், பாவாணர்கள், தவத்தில் சிறந்த வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர், பிரம்மன், அழகிய மகா விஷ்ணுவுடன் மகாலட்சுமி, சரஸ்வதி, ரிஷி பத்தினிகள், விண்ணிலுள்ள ரம்பை முதலான தேவமாதர்களுடன் விளங்கும் பெரிய நாகலோக அணங்குகள், மண்ணுலக மாதர்கள், அருந்ததி முதலானோர் அனைவரும் துதி செய்ய, நடனம் புரிந்த தாமரையன்ன திருவடிகளை (பதர் = நடம்புரி பாதத்தர்) உடைய நடராஜரின் அருகிலுள்ள சிவகாம சுந்தரி தந்தருளிய கந்தவேளே!’’ என்று போற்றுகிறார். பொதுவாகவே பல சிதம்பரப் பாக்களில் விதவிதமான தாள பேதங்களை அருணகிரியார் பாடியிருப்பதைக் காணலாம். இப்பாடலிலும்

திந்திமி திந்திமி தோதி மிந்திமி

தீததி திந்தித தீதி திந்திமி

தந்தன தந்தன னாத னந்தன

தானத னந்தனனா வெனும் பறை

செந்தவில் சங்குடனே முழங்க’’

 

- என்று போர்க்களக் காட்சியைப் பாடுகிறார். நிருத்த மண்டபத்தில் அமைந்துள்ள மற்றொரு சந்நதி வடக்கு நோக்கிய சரபேஸ்வரர் சந்நதியாகும். திருமால் நரசிம்ம மூர்த்தியாய் அவதாரமெடுத்து இரணியனை வதைத்த பின்னரும் நரசிம்மத்தின் உக்ரம் தணியவில்லை. அவரது கோபத்தை அடக்க சிவபெருமான் வீரபத்திரரை ஏவினார். வீரபத்திரர் ‘எட்டுக் கால்கள், வலிய சிறகுகள், சிங்க முகம், நரியின் வாய், மனித உடல்’ கொண்ட சரபேஸ்வரராக வந்து நரசிங்கத்தின் உக்கிரத்தைத் தணிவித்தார். சிவனே இவ்வாறு வந்ததாகவே அருணகிரியார் பாடுகிறார். சிங்கத் தோலை உடையாக அணிந்த சிவபிரான் ‘நாரசிங்காம்பரன்’ ‘சிம்ஹாரி’ எனும் பெயர்களைப் பெற்றார்.

நிருத்த சபையின் எதிரே மேற்கு நோக்கி மடப்பள்ளியும், அதன் வாயிலில் அன்னபூரணி இருப்பதையும் காணலாம். முன்மண்டபத்தில் கால சம்ஹார மூர்த்தியின் சற்றே வித்தியாசமான திருவுருவத்தைக் காணலாம். நடராஜரின் தூக்கிய திருவடி ‘அருளல்’ தொழிலைக் குறிக்கும். அனுக்ரஹ பாதம் என்பதாலும், இடப்புறம் அம்பிகை உறைவதாலும், ஐயன் எமனை வலக்காலால் உதைப்பதாக இங்கு காட்டப்பட்டுள்ளது. சபையின் ஒருபுறம் மஹாலட்சுமியின் உருவத் திருமேனி உளது. சபைக்கு அருகில் கிழக்கு நோக்கியவாறு மஹாலட்சுமி சந்நதி உளது. இவரைப் புண்டரீகவல்லித் தாயார் என்றழைக்கின்றனர்.

இதுதவிர யாகசாலை மண்டபம், கண்ணாடி அறை, பத்மாவதி திருக்கல்யாண மண்டபம் போன்றவை உள்ளன. நடராஜருக்கான கொடி மரத்திற்கருகிலிருந்து பிராகார வலத்தை ஆரம்பிக்கிறோம். முதலில் நாம் தரிசிப்பது பாலதண்டாயுதபாணியைத் தான். இது இங்குள்ள மிகப் பழமையான சந்நதி என்பர். ஏராளமான திருப்புகழ்ப் பாக்கள் கல்வெட்டுகளாகப் பதிக்கப்பட்டுள்ளன. (ஒவ்வொரு கல்வெட்டிலும் அதைப் பொறிக்க உதவியவர்கள் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளன. அதைப் பார்க்கும்போது இந்த விளம்பர யுகத்தை எண்ணி வருந்தாமலிருக்க முடியவில்லை) ஒன்றிரண்டு பாடல்களை இங்கு முருகனுக்குச் சமர்ப்பிக்கிறோம்.

(இத்திருவுருவம் நாம் கோயிலில் காணும் நான்காவது முருகன் திருவுருவம் ஆகும்)

‘‘நாடாப் பிறப்பு முடியாதோ எனக்கருதி

நாயேன் அரற்று மொழி வினையாயின்

நாதா திருச்சபையினேறாது சித்தமென

நாலா வகைக்கும் உனதருள் பேசி

வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி

வாய்பாறி நிற்குமெனை அருள்கூர

வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது

வாரேன் எனக்கெதிர் முன் வரவேணும்

சூடாமணிப் பிரபை ரூபா கனத்த அரி

தோலாசனத்தி உமை அருள்பாலா

தூயா துதித்தவர்கள் நேயா எமக்கமிர்த

தோழா கடப்பமலர் அணிவோனே

ஏடார் குழற் சுருபி ஞானாதனத்தி மிகு

மேராள் குறத்தி திரு மணவாளா

ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை

ஈடேற வைத்த புகழ் பெருமாளே’’

‘‘நாடாப் பிறப்பு முடியாதோ’’ என்று பாடும்பொழுது ‘‘இந்த தொலையாத பிறவித் துன்பம் என்று தொலையுமோ? பிறவித் துயர் போக நான் எதைக் கடைப்பிடிக்க வேண்டும்’’ என்று உருகுகிறார் அருணகிரிநாதர். ஓயாத இந்தப் பிறவிநோய் முடிவிற்கு வராதா என கவலைப்பட்டு அடியேன் கூவி ஓலமிட்டிடும் இந்தக் கூக்குரல் நான் முன் பிறவிகளில் செய்த வினை காரணமாக வந்த அவல நிலைதான். எனவே, தலைவா! என் அழுகுரல் உமது தெய்வச் சபையில் எடுபடாது என்ற உணர்வினால் பலவகையான உனது அருள் திருவடிகள் எனும் மோட்சத்தைக் கொடுத்தருளுக என்று (தா, தா) மீண்டும் மீண்டும் வாய் குழற, வாய் கிழிய ஓலமிட்டு முறையிடும் அடியேனுக்கு நிரம்ப அருள் சேரும்படி வந்தருளுக;

என் மனக்கவலையைத் தீர்த்தருள்வாயாக; உன்னைத் தொழும் வழக்கமில்லாதவனாக நான் இருந்தாலும் எனக்கு நீ தரிசனம் தரவேண்டும். தெய்வீக மணியாகிய சூளாமணியின் ஒளி போன்ற வடிவினளும், கம்பீரமான சிங்கத்தின் தோலை ஆசனமாகக் கொண்டவளுமான பார்வதியின் மகனே! பரிசுத்த மூர்த்தியே! துதி செய்யும் அடியார்களுக்கு நண்பனே! எனக்குப் பிறவா இறவா வரம் அளிக்கும் அமிர்தம் போன்ற தோழனே! கடம்ப மலர் மாலையை அணிபவனே!

மலர் நிறைந்த கூந்தலை உடைய அழகியும், ஞானத்தையே இருப்பிடமாகக் கொண்டவளும், மிகுந்த அழகுடையவளுமான வள்ளியின் கணவனே! ஈசனே! ஒப்பற்ற புலியூர் எனப்படும் தில்லையில் வாழ்பவனே! தேவர்கள் கூட்டத்திற்கு நல்வாழ்வு அளித்த பெருமாளே! இப்பாடல் அடியார்களால் நாள்தோறும் மனனம் செய்யக்கூடிய பெருமை உடையது! முருகனை உரிமையுடன் தோழா என அழைத்து தன் மனக் கவலைகளைத் தீர்க்கும்படிக் கேட்டுக் கொள்ளும் அருமையான பாடல். சிவபெருமானின் நுதல் விழியினின்றும் உதித்த முருகப் பெருமானும் நடனமாடுவதில் தன் தந்தைக்குச் சற்றும் சளைத்தவரல்ல என்பதையும், திருப்புகழ்ப் பாக்களில் ஆங்காங்கே குறிப்பிடுகிறார் அருணகிரியார். முருகப்பெருமான் துடிக் கூத்தும் குடைக்கூத்தும் ஆடியது பற்றி ஒரு பாடலில் பின்வருமாறு விவரிக்கிறார்.

‘‘முரசு பேரி திமிலை துடிகள் பூரித்தவில்கள்

முருடு காளப் பறைகள் தாரை கொம்பு வளை

முகடு பேர் உற்ற ஒலி இடிகள் போல் ஒத்த மறை

முதுவர் பாடிக் குமுறவே இறந்தசுரர்

முடிகளோடெற்றி இரதம் ஆனை பிணமொடு

இவுளி வேலைக் குருதி நீர் மிதந்து திசை எங்கும் ஓட

முகில் வேல் விட்டு வட குவடு வாய் விட்டு அமரர்

முநிவர் ஆடிப்புகழ வேத விஞ்சையர்கள்

முழவு வீணைக் கிளரி அமுர்த கீதத் தொனிகள்

முறையதாகப் பறைய ஓதி ரம்பையர்கள்

முலைகள் பாரிக்க உடன்நடனமாடிற்று வர

முடி பதாகைப் பொலியவே நடங்குலவு கந்தவேளே!

தாளக் கருவிகள் பற்றிய அருணகிரிநாதரது பரந்த அறிவு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. முரசு, பேரிகை, பறை, உடுக்கை, ஊதுகுழல்கள், தவில்கள், மத்தளம், ஊதுகொம்பு, போர்ப் பறைகள், நீண்ட ஊது கருவி, சங்கு இவற்றின் ஒலி ஆகாய முகட்டை எட்டும்படி ஒலித்து, இடி போல் முழங்கின. வேத வல்லுநர்கள் வேதங்களை முழங்கினர். மாண்டு போன அசுரர்களின் தலைகளை அறுத்துத் தள்ளி, சிங்கம், தேர்கள், யானைகளின் சடலங்களோடு குதிரைகள் ரத்தக் கடலில் மிதந்து வந்து எல்லா திசைகளிலும் ஓட விசையுடன் வேலாயுதத்தைச் செலுத்தியவனே! வடமேரு கலங்கி அதிர, தேவர்களும் ரிஷிகளும் ஆடிப்புகழ,

வேதவல்லுநர்கள், வித்யாதரர்கள், குடமுழா, வீணை, கின்னரி எனும் யாழ் முதலான இசைக்கருவிகளின் அமுதம் போன்ற ஒலிகளை முறையாக எழுப்பிப் பாட, ரம்பை முதலான மாதர்கள் உடன் நடனமாடி வர, கிரீடமும் கொடிகளும் முற்பட்டு விளங்குமாறு துடிக் கூத்தும் குடைக் கூத்தும் ஆடிய கந்தவேளே!’’ என்று பாடுகிறார். முருகனை வணங்கிச் செல்லும்போது தூணில் விநாயகர், ரிஷபாரூடர் இருவரையும் தரிசிக்கிறோம். இங்கிருந்து சிறிது தூரம் சென்ற பின் திருமுறைகண்ட விநாயகர், தாயுமானவர், சுப்ரமண்யர் ஆகியோரைக் காணலாம். (இங்குள்ள சுப்ரமண்யர் நாம் காணும் ஐந்தாவது முருகனின் திருவுருவமாகும்)

இத்திருவுருவங்கள் மேற்கு நோக்கி உள்ளன. தொடர்ந்து வரும்போது மூலையில் திருமுறைக் கோயில், நான்கு சந்தனாச்சாரியர்கள் (மெய்கண்டார், அருள் நந்திசிவம், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம்) மற்றும் நால்வர் சந்நதிகளில் வணங்குகிறோம். நடராஜர் ஆலயத்தின் இரண்டாவது சுற்றில் தனிக்கோயிலாக விளங்குவது திருமூலட்டானம். மூலவர் திருமூலட்டானர் கிழக்கு நோக்கியும், அம்பிகை உமையபார்வதி தெற்கு நோக்கியும் வீற்றிருக்கின்றனர். ‘‘மூலவர், பாதாளத்திலிருந்து தோன்றிய மலையின் கொழுந்தாக முளைத்தெழுந்த மூர்த்தி ஆவார் என்றும், மத்தியந்தன முனிவரது மைந்தராகிய வியாக்ரபாதர் தில்லைவனம் வந்து இப்பெருமானைத் தமது பெரும்பற்றாகக் கொண்டு வழிபாடு செய்ததால் இத்தலம் ‘பெரம்பற்றப் புலியூர்’ என்று பெயர் பெற்றது என்றும் கூறுகிறார் பேராசிரியர் வெள்ளை வாரணார்.

இங்கு பதஞ்சலியும், வியாக்ரபாதரும் வேண்டிக் கொண்ட வண்ணம், தில்லைப் பொன்னம்பலத்திலே சிவகாமியம்மை கண்டு களிக்கவும், வானோர்கள் துதிக்கவும், நடராஜப்பெருமான் ஆனந்தத் திருநடனம் ஆடியருள்கின்றார் என்பது புராணம். ஆதியில் இம்மூலவர் ஆலமரத்தடியில் இருந்தார் என்பர். தென்புறம் திரும்பினால் வல்லப கணபதி, மோகன கணபதி, பல்லீஸ்வரர், தட்சிணாமூர்த்தி ஆகியோரைத் தரிசிக்கலாம். மூலட்டானரை வலம் வரும்போது விநாயகர், தலவிருட்சம், வைத்தியநாதர், தையல் நாயகி, பைரவர், சண்டேசர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், பிரம்ம சண்டேசர் ஆகியோரை வணங்குகிறோம்.

கிழக்கு வாயிலில் நுழைந்து நேரே நடராஜரைத் தரிசிக்கச் செல்லும் வழியில் திருவுலாச் செல்லும் பஞ்சமூர்த்திகள் முதலான உற்சவ மூர்த்திகள் அமர்ந்துள்ள பேரம்பலத்தைக் கண்டு தரிசிக்கலாம். இச்சபை வாயிலில் மேற்கில் சட்டைநாதர், கிழக்கு நோக்கி நவகோள், இங்கிருந்து மூலட்டானம் போகும் வழியில் சங்கு ஊதும் விநாயகர் ஆகியோரைக் காணலாம். உள்வாயில் தென்புற மண்டபத்தில் மாம்பழ விநாயகர் உள்ளார். தாரகனை வதைத்து, கேதாரம், காசி, ஸ்ரீசைலம் முதலான திருத்தலங்களைத் தரிசித்த முருகப் பெருமான், தென்னாட்டிற்கு வந்து தில்லை மூதூரைக் கண்டு அங்கு மன்றில் ஆடும் இறைவனின் அற்புதக் கூத்தைக் கண்டுகளித்தான் எனும் குறிப்பு கந்த புராணத்தில் காணப்பெறுகிறது.

- சித்ரா மூர்த்தி

(உலா தொடரும்)

Related Stories: