சீர்காழி சட்டைநாதர் கோயிலில் சூரசம்ஹாரம் : அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

சீர்காழி: சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருநிலைநாயகி, பிரம்மபுரீஸ்வரர் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் திருஞானசம்பந்தருக்கு திருநிலைநாயகி ஞானப்பால் கொடுத்த ஸ்தலமாகும். இத்தகைய புகழ் பெற்ற கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹார விழா நடைபெற்றது. விழாவையொட்டி தேர் தெற்கு வீதியில் உள்ள சம்ஹார வேலவர் கோயில் முன்பு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சூரப்பத்திரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு மயில் வானத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சம்ஹார வேலவருக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.

அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா என கோஷமிட்டு சுவாமி தரினம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர். மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதானேஸ்வரர்  (வள்ளலார்) கோயிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு நேற்று  முன்தினம் இரவு சூரசம்ஹாரம் நடைபெற்றது. இக்கோயில் சுப்ரமணியசுவாமி உற்சவமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் கோயில் முன் மண்டபம்  எழுந்தருளினார்.

தருமை ஆதீனம் குருமகா சன்னிதானம் சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் முருகப்பெருமான்  கோயில் ராஜகோபுரம் முன்பு எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி  நடைபெற்றது.  இதில் கோயில் தலைமை அர்ச்சகர் ஸ்ரீகண்டசிவாச்சாரியார் உட்பட  திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோன்று மாயூரநாதர் சுவாமி கோயிலில்  தருமை ஆதீனத்திற்கு சொந்தமான குமரக்கட்டளையில் சுப்ரமணியசுவாமி சிறப்பு  அலங்காரத்தில் எழுந்தருளி சூரசம்ஹாரம் நடந்தது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை  சமேத முருக பெருமான் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா நடைபெற்றது.

Related Stories: