என்னை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள்?

‘‘நான் பசியாய் இருந்தேன்; நீங்கள் உணவு கொடுத்தீர்கள். தாகமாய் இருந்தேன்; என் தாகத்தைத் தணித்தீர்கள். அந்நியனாய் இருந்தேன்; என்னை ஏற்றுக்கொண்டீர்கள். நான் ஆடையின்றி இருந்தேன்; எனக்கு ஆடை அணிவித்தீர்கள். நோயுற்றிருந்தேன்; என்னைக் கவனித்துக்கொண்டீர்கள். சிறையில் இருந்தேன்; என்னைத் தேடி வந்தீர்கள் என்பார். அதற்கு நேர்மையாளர்கள், ‘‘ஆண்டவரே! எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராயககண்டு உணவளித்தோம்? அல்லது, தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக்கண்டு உம்மைத் தேடி வந்தோம்? என்று கேட்டார்கள்.

அதற்கு அரசர், மிகச்சிறியோராகிய என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என பதிலளிப்பார்.’’  (மத்தேயு 25: 3540) ஊர் மக்களுக்கு உபதேசம் செய்ய ஒரு மகான் வரப்போகிறார். அவரது பேச்சைக் கேட்பதற்காக அந்த ஆலயத்தை நோக்கி மக்கள் நிறைய பேர் வந்துகொண்டிருந்தார்கள். ஆலய வாசலில் யாரோ ஒரு மனிதர் படுத்துக் கிடக்கிறார். இதைப்பார்த்தவர்கள் வெறுப்போடு விலகிச் செல்கிறார்கள். ஏம்பா! இன்றைக்கு கோயில்ல பெரிய மனிதர் வந்து உபதேசம் பண்ணப்போகிறார். அதைக் கேட்பதற்காக மக்கள் ஆர்வத்துடன் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரம் பார்த்து இப்படி வழியிலே படுத்துக் கிடக்கிறியே! எழுந்து ஒரு ஓரமாய்ப் போய்ப்படு என்று சொல்லிவிட்டுப் போனார் ஒருவர். இன்னொருவர் இரக்கப்பட்டு உணவுப் பொட்டலத்தை அவர் அருகில் வைத்துவிட்டுப் போனார்.

சிலர் மோசமான வார்த்தைகளால் திட்டிவிட்டுப் போனார்கள. பலர் முணுமுணுத்தபடி  ஒதுங்கிப் போனார்கள். முரட்டுத்தனமுள்ள ஒருவர் அவரை எட்டி உதைத்துவிட்டுப் போனார். எல்லோரும் போய் ஆலயத்தில் அமர்ந்துகொண்டனர். ஆனாலும் வரவேண்டிய மகான் இன்னும் வந்து சேரவில்லை. எல்லோரும் வாசல் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். அப்போது அந்த அதிசயம் நடக்கிறது. கீழே படுத்துக்கிடந்த அந்த எளிய மனிதர் மெள்ள எழுந்து உள்ளே வருகிறார். முன்னால் போடப்பட்டிருந்த மேடையில் ஏறி அமர்ந்து பேச ஆரம்பிக்கிறார். ‘‘நீங்கள் எதிர்பார்க்கும் மகான் நான்தான்’’ அதிர்ச்சியோடு எல்லோரும் அவரைப் பார்க்கிறார்கள். அவர் சொல்கிறார். ‘‘எனது முதல் போதனை என்ன என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

யாரையாவது அவர் நிலைமையைப் பார்த்து, எடை போட்டுக்கொண்டிருந்தால் அவர்களை நீங்கள் நேசிக்க முடியாது. நிபந்தனை எதுவும் இன்றி மனமாற பிறரை நேசியுங்கள்; வெறுக்காதீர்கள் என்றபடியே போதனை தொடர்ந்தது. ஆர்வமாய் கேட்டுக்கொண்டிருந்தவர்களை நோக்கி, ‘‘வாழ்க்கையில் அமைதியான நேரம் எது என்று தெரியுமா?’’ என்று கேட்டார் அந்த மகான். எதிரே இருந்தவர்கள் பதில் தெரியாமல் விழித்தார்கள். மகான் தொடர்ந்தார். ‘‘எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் அன்பு செலுத்தும் நேரம் இருக்கிறது பாருங்கள். அதைவிட அமைதியான நேரம், ஆனந்தமான பொருள் வேறு எதுவுமே இல்லை.

 

‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ.

Related Stories: