வயலூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் : அரோகரா கோஷம் முழங்க திரளான பக்தர்கள் தரிசனம்

திருச்சி: வயலூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. அரோகரா கோஷம் முழங்க திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வயலுார் முருகன் கோயிலில் கந்த சஷ்டி உற்சவம் கடந்த 8ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 11ம் தேதி இரவு அன்னவாகனத்தில் சிங்காரவேலர் எழுந்தருளி யானை முகாசுரனுக்கு பெருவாழ்வு அளித்தார். நேற்று முன்தினம் இரவு வெள்ளி மயில் வாகனத்தில் சிங்காரவேலர் எழுந்தருளி சிங்கமுகாசுரனுக்கு பெருவாழ்வு அளித்தார்.

முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று இரவு நடந்தது. முன்னதாக நேற்று காலை 10 மணிக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின், முருகன் பார்வதி தேவியிடமிருந்து சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் சிங்காரவேலர் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். அவரைத் தொடர்ந்து முத்துக்குமாரசாமி பல்லக்கில் வந்தார். பின்னர் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிகள் கோயில் முன்புறம் உள்ள மைதானத்தில் துவங்கியது. முருகனும், சூரபத்மனும் கடும் போரிடும் காட்சிகள் விழா நிகழ்ச்சியாக நடைபெற்றது.

இரவு 8 மணிக்கு முருகன் சூரபத்மனின் தலையை கொய்து அவனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேள, தாளங்கள் முழங்க வேல் கொண்டு ஆடியபடி சென்று சூரனை வதம் செய்த நிகழ்வை அரோகரா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் வள்ளி தேவசேனாசமேத முத்துக்குமார சாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிறைவாக இன்று இரவு முருகன்தேவசேனா திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

Related Stories: