குடும்ப நலம் காப்பார் குக்கே சுப்ரமண்யர்

பெங்களூர் அருகேயுள்ள தொட்டபாலாப்பூரில் குக்கே சுப்ரமணியார்கோயில் உள்ளது. குக்கே என்றால் கூடை எனப்பொருள். கூடை நிறைய லிங்கம் கிடைத்த இடம்... காட்டி என்றால் பானை எனப்பொருள். இங்கு பாம்பு... பானை போன்ற வடிவமைப்பில் சுப்ரமணியனை தாங்கியுள்ளது. சுப்ரமணிய விக்ரகத்திலேயே பின்னால் நரசிம்மரையும் கொண்டுள்ளது தனிச் சிறப்பு... சுப்ரமணியர், நாகங்களின் தலைவர், நரசிம்மரோ காட்டு வாசிகளை கொடூரமான விலங்குகளிலிருந்து காப்பவர்... இந்த இரண்டும் எப்படி இணைந்தன! இதற்கு கூறப்படும் தகவல் இதுதான். அசுரன் தாருகனை வதம் செய்ய, சுப்ரமணியர், தேவர்களால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டார்.

Advertising
Advertising

தாருகன், பல வரங்களைப் பெற்று தனக்கு நிகரில்லை என வாழ்பவன்! ஆக அவனை கொல்ல வேண்டுமானால், அதற்கு தனக்கு கூடுதல் சக்தி தேவை என்பதை உணர்ந்த சுப்ரமணியர் இந்த பகுதியில் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அப்போது நாகங்கள் அவருக்கு மிக உதவியாய் இருந்தன. அத்துடன் ஒரு கோரிக்கையும் வைத்தன! தங்களுக்கு கருடனால், நிரந்தர தொல்லைகள் உள்ளதாகவும், அவரை தடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் எனவும் வேண்டின! தவத்தில் இருந்த சுப்ரமணியன், உடனே நரசிம்மரை நினைத்தார்.

‘‘தாங்களே, இவர்களுக்கு உதவ வேண்டும்’’ என கோரிக்கை வைத்தார்! காட்டுத் தெய்வமான நரசிம்மரும் அதனை ஏற்று, நாகங்களை அன்று முதல் இன்று வரை காப்பாற்றி வருவதாக ஒரு ஐதீகம்! இதனிடையே தாருகனை தன்னுடைய வலிமையால் ஓட ஓட விரட்டி, சுப்ரமணியன் வதம் செய்தபோது, அவன், ‘‘என் மக்களை, தாங்கள் இங்கு நிரந்தரமாய் தங்கி காப்பாற்றி அருள வேண்டும் என வேண்டினான். அதனை ஏற்று முருகன் இங்கேயே தங்குவதாக ஐதீகம். அத்துடன் தன்னை நம்பி வருபவர்களுக்கு நாகசாந்தி கிடைக்கச் செய்து அவர்கள் வாழ்விலும் மலர்ச்சியை வழி செய்ய வேண்டும் என அசுரன் வேண்டியதற்கு ஏற்ப, இந்த தலமே நாக சாந்தி தலமாக பிரபலமாய் உள்ளது.

கல்யாணம் தள்ளிப் போய்க் கொண்டே இருத்தல்.

கணவன் மனைவிக்குள் பிரிவு, விவாகரத்து எழும் சூழல்.

மனதில் அமைதி இல்லை.

உடைந்த நட்பு.

வழக்குகளில் நீதி கிடைப்பதில் தாமதம்.

வேலைகள், இருப்பிடங்களில் எதிர்பாராத சிக்கல் என பலவற்றிற்கு கண்கண்ட தெய்வமாய் ‘குக்கே’ சுப்ரமணியர் உள்ளார்.  நாகதோஷம், மனமுறிவு, குழந்தை பாக்கியமின்மைக்கு வழி வகுக்கிறது. செவ்வாய் தோஷமோ கல்யாணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே செல்கிறது. இந்த இரு தோஷங்களிலிருந்து நிவாரணம் கிடைக்க ஒரே வழி சுப்ரமணியர் ஸ்தலத்துக்கு வந்து பரிகார ஹோமம் செய்வதுதான். இதற்கு ஏற்ப இந்த கோயிலில், சர்ப சாந்தி, குஜசாந்தி மற்றும் நவக்கிரக சாந்தி ஆகியவை ஒரே சமயத்தில் 3 மணி நேரத்தில் செய்யப்படுகின்றன. இதைச் செய்து கொள்பவர் புதுத்துணி அணிந்து வர வேண்டும். இதற்கு முன்னாடியே புக் செய்து கொள்ளலாம்.

வேண்டுதல் நிறைவேறினால் நாக பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக் கொள்ளும் பக்தர்கள் நிறைவேறியதும் முதல் காரியமாக கோயில் வெளி பிராகாரத்தில் நாக கற்களை பிரதிர்ஷ்டை செய்கின்றனர். கோயிலுக்குள் நுழைந்ததும் 5 நிலை கோபுரம் நம்மை வரவேற்கிறது. சோழ பாணியில் கட்டப்பட்டுள்ள கோபுரம். இதன் வலப் பக்கத்தில் 7 தலை நாகம் பிரம்மாண்ட பொம்மையாக அலங்கரிக்கிறது. இங்கு கர்ப்பகிரகத்திற்கு எதிரில் கருடஸ்தம்பம் உள்ளது. இங்கும் குக்கே சுப்ரமணியர் போன்றே கருடஸ்தம்பம் இருப்பதற்கு, நாக தொல்லை பக்தர்களுக்கு ஏழாமல் இருக்கவே பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

கர்ப்பகிரகத்தில் ஆதிசேஷன், வாசுகியின் மீது சுப்ரமணியர் அமர்ந்துள்ளார். அனைத்தும் ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளன. இதிலேயே பின்னால் நரசிம்மரும் இருக்கின்றார். சுப்ரமணியர் கிழக்கு பார்த்து இருக்கிறார். நரசிம்மர் மேற்கு பார்த்தபடி இருக்கிறார். இந்த நரசிம்மரை பார்ப்பது கஷ்டம்! அதே சமயம் மேலும் தெளிவாக பார்க்க ஏதுவாய், ஒரு கண்ணாடி பொருத்தியுள்ளனர்! அலங்காரத்தில் நரசிம்மரை காண வெண்ணெய் தடவியுள்ளனர். வெளியே பிராகாரத்தில் ஆயிரக்கணக்கான நாக சிலைகள் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த கோயிலில் பிரமோற்சவம் உண்டு. தேரோட்டமும் உண்டு.

தேரோட்டத்திற்கு முன், இந்த கோயில் சார்ந்து, மிகப் பெரிய கால்நடைகள் காட்சி உண்டு. இதில் 5000க்கும் அதிகமான மாடுகள் பங்கேற்கின்றன. முன்பு மூன்று வாரங்கள் நடந்த இந்த கால்நடை கண்காட்சி தற்போது 5 நாட்களாக குறைந்துவிட்டது. மாடுகள் சார்ந்து அழகுப் போட்டி கூட உண்டு. கடந்த ஆண்டு ஒரு மாடு 1.06 லட்சத்துக்கு விலைபோனது.இது தவிர புஷ்ய சுத்த சஷ்டியின்போது சிறப்பு பூஜை அமர்க்களப்படும். ஸ்கந்த சஷ்டி, வைகாசி விசாகம், நரசிம்ம ஜெயந்தி ஆகியவையும் இங்கு கொண்டாடப்படுகிறது. சைவ  வைணவம் பிரிப்பு, கர்நாடக கோயில்களில் அபூர்வம். இங்கு கூட சுப்ரமணியருக்கு, அர்ச்சனை செய்ய எடுத்துச் செல்லும் தட்டை, ஒரு வைஷ்ணவ குருக்கள் சங்கல்பம் செய்வித்து அனுப்புவது சகஜம். இக்கோயில் பெங்களூரிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டரில் அமைந்துள்ள தொட்டபாலாப்பூரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் குக்கே சுப்ரமணியா கோயில் உள்ளது.

ராஜி ராதா

Related Stories: