திருப்பதி கபிலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி பக்தர்கள் திரண்டனர்

திருப்பதி: திருப்பதி கபிலேஸ்வரர் சுவாமி கோயிலில் கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் திரண்டனர். மேலும், நெல்லிக்கனியில் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். திங்கட்கிழமைகளில் சிவனுக்கு உகந்த சோமவார விரதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில், கார்த்திகை மாதத்தில் 5 திங்கட்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்த 5 திங்கட்கிழமையிலும் பெண்கள் சோமவார விரதத்தை கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில், சித்தூர் மாவட்டம், திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் சுவாமி கோயிலில் கார்த்திகை மாதத்தின் முதல் சோமவாரமான நேற்று காலை சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் அதிகாலை முதலே பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும், கோயில் தெப்பக்குளத்தின் படிக்கட்டுகளில் மா, அகல், எலுமிச்சை, நெல்லிக்கனி போன்றவற்றால் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.

Related Stories: