கழுகாசலமூர்த்தி கோயிலில் சஷ்டி விழா : கழுகுமலையில் தாரகாசூரன் சம்ஹாரம்

கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கோலாகலமாக நடந்துவரும் கந்தசஷ்டி திருவிழாவில் தாரகாசூரனை முருகன் சம்ஹாரம் செய்தார். இதில் திரளானோர் பங்கேற்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கழுகுமலையில் கழுகாசலமூர்த்தி குடைவரைக்கோயில் அமைந்துள்ளது.இங்கு மூலவர் முருகர் ஒரு முகத்துடனும், ஆறு திருக்கரங்களுடனும், இந்திரனே மயிலாக மாறி இடப்புறம் திரும்பி நிற்கும் நிலையில் அதன்மீது ராஜகோலத்தில் வீற்றிருக்கிறார். தென்பழநி என்று போற்றப்படும் இக்கோயிலில் மட்டும்தான் தமிழகத்திலேயே சூரபத்மனின் தம்பியான தாரகாசூரன் வதம் நடைபெறும்.

இந்தாண்டு திருவிழா கடந்த 8ம் தேதி காப்பு கட்டுதலுடன்  துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி, வள்ளி  தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடந்தது. அத்துடன் பல்வேறு வடிவில் சூரன்கள் வலம் வருதலும், வள்ளி  தெய்வானையுடன் கழுகாசலமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனத்தில் வீதியுலாவும் நடந்தது. சஷ்டி திருவிழாவின் 5ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை எழுந்தருளியதும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் கழுகாசலமூர்த்தி, வள்ளி  தெய்வானையுடன் வெள்ளிச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.  தொடர்ந்து சூரன்களை எச்சரிக்க முருகன் சார்பில் வீரபாகு சென்றார்.

அங்கு தனது மாயைகளால் தாரகாசூரன் வீரபாகுவை சிறை வைத்தார். அவரை மீட்க முருகர் நாரதரை தூது அனுப்பினார். ஆனாலும் சூரனின் ஆணவம் அடங்காததால் முருகரே நேரடியாக போர்க்களம் சென்றார். தொடர்ந்து தாரகாசூரனை வதம் செய்து வீரபாகுவை மீட்டு வந்தார். வேறு எந்த முருகன் கோயிலிலும் காண இயலாத இந்த அரிய நிகழ்ச்சியை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திரளாக வந்திருந்த பக்தர்கள் தரிசித்தனர். பின்னர் கழுகாசலமூர்த்திக்கும், அம்பாள்களுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.  இரவு 8 மணிக்கு மேல் சுவாமி அன்னவாகனத்தில் வீதியுலாவாக திருக்கோயிலை சென்றடைந்தார்.

திருவிழாவில் இன்று (13ம் தேதி) காலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 6.30 மணிக்கு கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானையை எழுந்தருளச்செய்யும் பூஜைகளும் நடைபெறும். நண்பகல் 12 மணியளவில் சண்முகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் அர்ச்சனை, தீபாராதனை நடக்கிறது. பிற்பகல் 3 மணிக்கு வீரவேல் ஏந்தி சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி போர்க்களம் வருதலும், 4.30 மணிக்கு கோயில் தெற்கு வாசல் முன்பு உள்ள பந்தலில் வைத்து சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதையொட்டி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: