குமரி முருகன் கோயில்களில் இன்று சூரசம்ஹாரம்

நாகர்கோவில்: குமரி மாவட்ட முருகன் கோயில்களில் இன்று சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கந்தசஷ்டி விழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. குமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.  நாகர்கோவில் நாகராஜா கோயிலில் உள்ள பாலமுருகன் சன்னதி, வேளிமலை குமாரகோயில், வெள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், தோவாளை முருகன் கோயில், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், கன்னியாகுமரி முருகன் குன்றம்,  பெருவிளை தெய்வி முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
Advertising
Advertising

தினமும் முருகப்பெருமானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகிறார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று (13ம் தேதி) மாலை நடக்கிறது. நாகர்கோவிலில் நாகராஜா திடலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும். இதையொட்டி இன்று காலையில் இருந்து நாகராஜா கோயிலில் உள்ள பாலமுருகன் சன்னதியில் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடக்கிறது.

மதியம் 2 மணிக்கு வேல் வாங்க புறப்படுதல் நிகழ்ச்சியும், மாலை 6.30க்கு சூரசம்ஹாரமும் நடக்கிறது. பின்னர் வாண வேடிக்கை நடத்தப்படுகிறது. முன்னதாக நேற்று நடைபெற்ற ருத்ர யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல் மற்ற முருகன் கோயில்களிலும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. தோவாளையில் முருகன் கோயிலில் நடைபெறும் சூரசம்ஹாரத்தையொட்டி, நாகர்கோவில்  திருநெல்வேலி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Related Stories: