நாணயம், ரூபாய் நோட்டு படைத்து பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு வழிபாடு

போச்சம்பள்ளி:போச்சம்பள்ளி அருகே நூற்றாண்டு பழமைவாய்ந்த கோடிப்புதூர் பத்ரகாளியம்மனுக்கு நாணயம், ரூபாய் நோட்டு படைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. போச்சம்பள்ளி அருகே கோடிப்புதூர் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையில், நூற்றாண்டு பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதம், இந்த கோயில் முன் பரண் அமைத்து பன்றியை பலியிட்டு நடத்தப்படும் வழிபாடு பிரசித்தி பெற்றது. இந்நிலையில், கேதார கவுரி விரதத்தையொட்டி, கோடிப்புதூர் பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

பத்ரகாளியம்மனுக்கு குபேர லட்சுமி ஹோமம் மற்றும் கோபூஜை நடத்தப்பட்டது. பின்னர், நாணய குவியலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மனுக்கு, ரூபாய் நோட்டு கட்டுகளை படைத்து பூஜை செய்தனர். இப்பூஜையின் மூலம் கடன் நிவர்த்தி, தொழில் விருத்தி, குடும்ப பிரச்னைக்கு தீர்வு, திருமண தடை விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பூஜையில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

Related Stories: