பழநி, திருப்பரங்குன்றம் கோயில்களில் கந்தசஷ்டி திருவிழா கோலாகல துவக்கம்

பழநி: பழநி, திருப்பரங்குன்றம் முருகன் கோயில்களில் கந்தசஷ்டி திருவிழா நேற்று கோலாகலமாக துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நேற்று பகல் 12.45 மணிக்கு காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து மூலவருக்கு 16 வகை அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர், வள்ளி  தெய்வானை சமேதரராக, சண்முகர், விநாயகர், துவாரபாலகர்கள், தீபஸ்தம்பம், நவவீரர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் செந்தில்குமார், மேலாளர் உமா மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 13ம் தேதி நடைபெறுகிறது. 14ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மலைக்கோயிலில் வள்ளி  தெய்வானை சமேதரராக சண்முகர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் ரிஷப லக்னத்தில் பெரியநாயகி அம்மன் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். சூரசம்ஹாரம் காரணமாக அன்று தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும். இதேபோல் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலிலும் நேற்று காலை 9.30 மணிக்கு கந்தசஷ்டி விழா துவங்கியது. முன்னதாக விநாயகர் பூஜை, யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது. பின் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் காப்புக்கட்டி, சஷ்டி விரதத்தை துவக்கினர்.

Related Stories: