நெல்லை மாவட்ட முருகன் கோயில்களில் கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

தென்காசி: தென்காசி அடுத்த ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். தென்மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக மிகவும் பிரசித்தி பெற்ற ஆய்க்குடி பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள்  திரளாகப் பங்கேற்றனர்.

திருவிழாவில் தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேக  அலங்கார தீபாராதனை மற்றும் மண்டகப்படிதாரர் சார்பில் சிறப்பு வழிபாடு, பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. அத்துடன் தினமும் ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவின் சிகரமான சூரசம்ஹாரம் வரும் 13ம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் நடக்கிறது. 14ம் தேதி இரவு 10 மணிக்கு சப்தாவர்ணம் நடக்கிறது.  ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து சமுதாய கட்டளைதாரர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இலஞ்சி  குமாரர் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று காலை  கொடியேற்றத்துடன்  துவங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார  தீபாராதனை நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு  அபிஷேக அலங்காரம், மண்டகப்படிதாரர் தீபாராதனை, பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா, கலைநிகழ்ச்சி நடக்கிறது. வரும் 13ம் தேதி மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 14ம் தேதி இரவு 7.35 மணிக்கு தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

15ம் தேதி இரவு 7.30 மணிக்கு ஊஞ்சல் வைபவமும், 16 தேதி காலை தீர்த்தவாரியும் நடக்கிறது. ஏற்பாடுகளை  கோயில் நிர்வாகத்தினர் கட்டளைதாரர்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்து  வருகின்றனர். இதே போல தென்காசி தென்பழனியாண்டவர் கோயில், மேலகரம்  செண்பகவிநாயகர் கோயில், கிளாங்காடு கோயில்களிலும் கந்த சஷ்டி திருவிழா  நேற்று முதல் துவங்கியது. 13ம் தேதி சூரசம்ஹாரம், 14ம் தேதி திருக்கல்யாணம்  நடக்கிறது. ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories: