அமாவாசையை முன்னிட்டு காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

செங்கம்: அமாவாசையை முன்னிட்டு செங்கம் அடுத்த கிளையூர் கிராமத்தில் உள்ள தாழம்பூ காளியம்மன் கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை அடிவார கிராமமான கிளையூரில் தாழம்பூ காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் அமாவாசை தினத்தன்று அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

அதன்படி, நேற்று ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. பின்னர், மாலை அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம், திருவிளக்கு பூஜை நடந்தது. அப்போது, காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். மேலும், தாழம்பூ ஓடையில் தீர்த்தம் பெற்றுச்சென்றனர். பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

× RELATED மழை வேண்டி சிறப்பு பூஜை