நீரை ஆளும் சந்திரன்

ஜோதிடம் என்கிற மருத்துவம் - 48

புதன், குரு, சுக்கிரன் ஆகிய சுபகிரகங்களே நம் உடலிலுள்ள சுரப்பிகளைக் கட்டுப்படுத்துகின்றன என்பதையும் இவைகளின் இயக்கத்தில் உண்டாகும் மாறுபாட்டினால் பிறக்கும் குழந்தைக்கு கூட செயற்கை கணையம் பொருத்த வேண்டிய சூழல் உருவாகியிருப்பதைக் கடந்த இதழில் கண்டோம். நம் பூமியிலுள்ள ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் ‘நீர் ராசி’ என்ற ஒன்று இயற்கையாக அமைந்திருக்கும். உடற்பொலிவிற்குக் காரணம் அந்தந்த பகுதியின் நீர் வளமே. ‘அந்த ஊரு தண்ணி அப்படி’ என்று பேச்சுவாக்கில் கிண்டலாகச் சொல்வார்கள். அந்தத் தண்ணீரின் மீது தனது ஆதிக்கத்தினைச் செலுத்தும் கிரகம் சந்திரன். இந்தச் சந்திரனாலும் உடலிலுள்ள சுரப்பிகளில் கோளாறை உருவாக்க முடியும். அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதையும் காண்போம். சந்திரன் நீர் சார்ந்த கிரகம் என்பதால் உடலிலுள்ள நீரின் அளவைக் கட்டுப்படுத்துகின்ற அல்லது கழிவு நீரை வெளியேற்றுகின்ற பணியைச் செய்யும். நம் உடலில் இருந்து சிறுநீரை வெளியேற்றும் பணியைச் செய்யும் கிட்னி அதாவது சிறுநீரகங்களின் மீது தனது தாக்கத்தினை சந்திரன் உண்டாக்கும்.

ஒருவரது ஜாதகத்தில் எட்டாம் பாவகம் என்பது சிறுநீரகத்தின் செயல்பாட்டினைச் சொல்லும். எட்டாம் பாவகத்தில் சந்திரனும், எட்டாம் பாவக அதிபதியும் இணைந்து அசுப கிரஹத்தின் சாரம் பெற்று அமர்ந்தால் சிறுநீரகம் சார்ந்த கோளாறுகள் உடலில் உண்டாகும் வாய்ப்பு உண்டு. எட்டாம் பாவக அதிபதியோடு லக்னாதிபதியும் தொடர்பு கொண்டால் நீண்ட நாட்களுக்கு சிறுநீரகக் கோளாறு தொடரும். மாறாக லக்னாதிபதி வலிமை பெற்றிருந்தால் இந்தப் பிரச்னையை குறைந்த காலத்திற்குள் சரிசெய்ய இயலும். சமீபத்தில் நம் பார்வைக்கு வந்த 13 வயது குழந்தையின் ஜாதகம் வாசகர்களின் பார்வைக்கு: இந்தக் குழந்தை பிறந்து ஒரு வயது ஆகும்போது நெஃப்ராடிக் சிண்ட்ரோம் என்ற சிறுநீரகம் சார்ந்த குறைபாடு உண்டாகியிருக்கிறது. கடந்த 12 வருடங்களாக இந்தக் குழந்தை இதற்கான சிகிச்சையைப் பெற்று வருகிறது. இங்கே நாம் கவனிக்க வேண்டியது சிறுநீரகத்தைப் பற்றிச் சொல்லும் எட்டாம் பாவகத்தில் சுக்கிரனும், சந்திரனும் இணைந்திருக்கிறார்கள் என்பதே.

மேலோட்டமாகக் காண்போருக்கு அந்த பாவகத்தில் சுக்கிரன் ஆட்சி பலத்துடனும், சந்திரன் உச்ச பலத்துடனும் அமர்ந்திருப்பதாகத் தோன்றும். ஆட்சி மற்றும் உச்ச பலத்துடன் கிரகங்கள் அமர்ந்திருந்தாலும் எட்டாம் பாவகம் என்பது கஷ்டத்தைத் தரக்கூடியது ஆகும். ரிஷபம் என்னும் அந்த ஸ்தானத்தின் அதிபதி சுக்கிரன் தன் சொந்த வீட்டிலேயே அமர்ந்திருந்தாலும் சூரியனின் சாரம் பெற்று சஞ்சரிக்கிறார். அங்கே இணைந்திருக்கும் சந்திரனும் சூரியனின் சாரம் பெற்றிருக்கிறார். சூரியன் அசுப கிரகம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதியும் சுக்கிரனாகவே அமைந்து அந்தச் சுக்கிரன் எட்டில் அமர்ந்திருப்பதால் இந்தக் குறைபாடு அத்தனை எளிதாக குணமாகாமல் நீண்ட நாட்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முக்கியமான விஷயம் குழந்தைக்கு ஒரு வயதாகும்போது இந்தப் பிரச்னை தொடங்கியிருக்கிறது. அதாவது சூரியதசை முடிவடைந்து சந்திரதசை தொடங்கிய காலத்தில் இருந்து குழந்தையின் உடல்நிலையில் குறைபாடு தொடங்கியுள்ளது. சந்திரனின் பலவீனமான நிலையால் குழந்தையின் சிறுநீரகத்தில் பாதிப்பு உண்டாகியுள்ளது.

சரி, இந்தப் பிரச்னையை சரிசெய்ய இயலுமா இயலாதா என்ற கேள்வி நம் மனதைத் துளைப்பது இயற்கை. இதற்கு மருத்துவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று பார்த்தால் தொடர்ந்து மருந்தும், மாத்திரைகளும் எடுத்துக் கொள்ளட்டும், சரியாவதற்கும் வாய்ப்பு உண்டு அல்லது சரியாகாமல் தொடர்ந்து மருந்து மாத்திரைகளை உட்கொண்டு சமாளிக்க இயலும், எல்லாம் இறைவன் செயல் என்பதே அவர்களது பதிலாக உள்ளது. அறிவியல் முன்னேற்றத்திற்கு தலைசிறந்த உதாரணமாகத் திகழும் மருத்துவ உலகமும் ஆன்மிக நம்பிக்கையுடன்தான் இயங்குகிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது. இந்தக் குழந்தையின் பிரச்னைக்கு ஜோதிடத்தின் மூலம் தீர்வு காண முடியுமா என்ற சந்தேகம் தோன்றும்.

(தொடரும்)

Related Stories: