கல்வி தெய்வமான கூத்தனூர் சரஸ்வதி கோயிலின் சிறப்பு!

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பூந்தோட்டம் என்கிற இடத்துக்கு அருகே அமைந்திருக்கிறது கூத்தனூர் கிராமம். வரைபடங்களில் கூட இடம்பெறாத இந்த சிறு கிராமத்துக்கு ஒரு பெருமை உண்டு. ஆம். தமிழ்நாட்டில் கல்வி தெய்வமான சரஸ்வதிக்கு என்று பிரத்யேகமாக அமைந்திருக்கும் ஒரே கோயில் இது மட்டும்தான். பிரம்ம லோகத்தில் பிரம்மனுக்கும், சரஸ்வதிக்கும் திடீர் சர்ச்சை. தன்னால்தான் இந்த லோகத்துக்கே சிறப்பு என்று சரஸ்வதி வாதிடுகிறார். உயிர்களை படைக்கும் தன்னால் இல்லாத சிறப்பா சரஸ்வதியால் என்று பிரும்மன் கோபம் கொள்கிறார். இருவரும் சண்டை போட்டு பிரிகிறார்கள். தெய்வங்கள் மீண்டும் சேரவேண்டுமே? அதனால், சோழ நாட்டில் கீர்த்தி, சோமனை தம்பதியினருக்கு மகனாக பகுகாந்தன் என்கிற பெயரோடு பிரம்மா பிறக்கிறார்.

சிரத்தை என்கிற பெயரோடு சரஸ்வதியும் ஜென்மம் எடுக்கிறார். இருவருக்கும் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்படும் நேரத்தில்தான் முன்ஜென்ம நினைவுகளைப் பெறுகிறார்கள். அல்பசண்டை காரணமாக பிரிந்ததற்காக இருவருமே நாணம் கொள்கிறார்கள். சிவனை வழிபடுகிறார்கள். சரஸ்வதி கங்கையுடன் இணைகிறார். கூத்தனூர் ஆபத்சகாயேஸ்வரர், பரிமளநாயகியின் அபிஷேகநீராக மாறுகிறார். அதே ஊரில் மகாசரஸ்வதியாக குடிகொள்கிறார். இதுதான் தல வரலாறு பெரும் புலவர் ஒட்டக்கூத்தர், குலோத்துங்க சோழனின் அவையை அலங்கரித்த மாகவி. இராமாயணத்தின் உத்திர காண்டத்தை எழுதியவர் இவர்தான். குலோத்துங்க சோழனை தலைவனாக்கி ‘தக்கயாக பரணி’ பாடியவரும் இவர்தான். இதனால் மனம் மகிழ்ந்துபோன சோழன், இவருக்கு பரிசாக ஓர் ஊரை தானம் தந்தான். அந்த ஊர்தான் கூத்தனூர்.

கூத்தர் என்கிற பெயர்தான் கூத்தனூர் ஆனது. சரஸ்வதி தேவியின் அருளால்தான் தன்னால் பரணி பாட முடிந்தது என்பதால், அம்மனின் ஆலயம் இருந்த இந்த ஊரை மன்னரிடம் கூத்தர் கேட்டுப் பெற்றார் என்பார்கள். அம்மன் குடியிருக்கும் கருவறைக்கு மேலே ஐந்து கலசங்கள் கொண்ட கோபுரம் மட்டும்தான். தனியாக ராஜகோபுரம் இல்லை. கருவறையில் சரஸ்வதி தேவி, வெண்பட்டு உடுத்தி வெண்தாமரை மீது அமர்ந்திருக்கிறார். ஜடாமுடி. இடதுகரத்தில் புத்தகம், அமுத கலசம். வலது கரத்தில் சின் முத்திரை. வீணையென்று அம்மனின் கோலம் அற்புதமாக அமைந்திருக்கிறது. அன்னையின் அன்ன வாகனம் பலிபீடத்துக்கு முன்பாக வணங்கியபடி காட்சியளிக்கிறது. பெருமாள், மகாலட்சுமி, துர்க்கை என்று மற்ற தெய்வங்களும் உண்டு. பிராகாரத்தில் நர்த்தன விநாயகர், பிரம்மா, ஒட்டக்கூத்தர் ஆகியோருக்கும் சிலைகள் உண்டு. விஜயதசமிக்கு இக்கோயிலுக்கு அழைத்துச் சென்று பிள்ளைகளுக்கு முதன்முதலாக கல்வி கற்பிப்பது விசேஷமான செயல். 

Related Stories: