வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள் சரஸ்வதி

சரஸ் என்றால் பொய்கை என்று பொருள். மனம் என்ற பொய்கையில் வாழ்பவள் என்ற பொருளில் கலைவாணி சரஸ்வதி என்று அழைக்கப்படுகிறாள். கலைமகள் கையில் தாங்கியிருக்கும் வீணைக்கு ‘‘கச்சபி’’ என்று பெயர். கலைமகளின் வாகனம் அன்னப்பறவை.

வேதாரண்யம் கோயிலில் உள்ள சரஸ்வதிக்கு வீணை கிடையாது. காரணம் யாழைப் ‘‘பழித்த மொழியாள்’’ என்னும் அம்பிகையை நோக்கி சரஸ்வதி தவக்கோலத்தில் இருப்பதால் வீணை இன்றி காட்சி தருகிறாள்.

அஜ்மீரிலிருந்து பத்து கி.மீ. தொலைவில் ‘‘புஷ்கரம்’’ என்ற ஊர் உள்ளது. இங்கு பிரம்மாவுக்கான கோயிலில் சரஸ்வதிக்குரிய சந்நதியும் உள்ளது. இத்தேவியின் கரங்களில் வீணை இல்லை.

ஹைதராபாத்தில் அலம்பூரில் (மகபூப் நகர் மாவட்டத்திலுள்ளது) உள்ள கோட்டைக்குள் ஒன்பது பிரம்மாக்களின் கோயில்கள் உள்ளன. அதாவது, பால பிரம்மா, குமார பிரம்மா, அர்க்க பிரம்மா, வீர பிரம்மா, விஸ்வ பிரம்மா, தாரகா பிரம்மா, கருட பிரம்மா, சுவர்க்க பிரம்மா, பத்ம பிரம்மா என்பனவாம். இந்த ஒன்பது பிரம்மாக்களுக்குமுள்ள ஒரே ஒரு தேவி சந்நதி சரஸ்வதியினுடையதாகும்.

ஆந்திரப் பிரதேசத்தில் அடில்லாபாத் மாவட்டத்தில் மதோலே தாலுக்காவில் பாஸாரா என்னும் இடத்தில் வாக்தேவிக்கு ஒரு ஆலயம் உள்ளது. வியாசர் சிறிது காலம் இத்தேவியை வழிபட்டதால் வியாசர் தலம் என்பது வஸாராவாக மாறி விட்டது. ஆதிசங்கரர் இத்தேவியை வழிபட்டார் என்றும் கூறுவர். இந்த சரஸ்வதி தேவியின் ரூபம் மிக அழகானது. கையில் வீணை இல்லை. லட்சுமிக்கும் கனக துர்க்கைக்கும் இங்கு சந்நதிகள் உள்ளன.

- லலிதா

Related Stories: