×

வானில் ஒளிரும் பக்த துருவன்

மனித குலத்தின் பிதாமகரான ஸ்வயம்புவ மனுவுக்கும், சதரூபைக்கும் பிறந்தவனே உத்தானபாதன். அவனுக்கு சுநீதி, சுருசி என்று இரு மனைவியர். சுநீதி ஹரியின் அளவிலா அருளுக்கு ஆட்பட்டாள். கர்ப்பவதியாக இருக்கும்போதே அவளின் பிரகாசம் பார்த்து பலர் வியந்தனர். உத்தனானபாதனின் மற்றொரு மனைவி சுருசி அதை ரசிக்கவில்லை. சுருசி உலக இன்பங்களிலும் புலன்களால் கெடுக்கப்பட்டும் அதில் ருசியும் கொண்டிருந்தவள். ஆனால், சுநீதியோ நீதியொன்றையே தர்மத்தையே தனது பாதையாகக் கொண்டு நடந்தாள். சுநீதியின் தர்ம நிஷ்டையை பார்த்து சுருசி கொஞ்சம் மிரண்டுதான் போனாள். சுநீதியின் மகனான துருவன் பிறப்பவன் தன் மகனை விஞ்சிவிடுவானோ என்று கவலைப்படவே ஆரம்பித்து விட்டாள். ஜாக்கிரதையாக தன் மகனுக்கு உத்தமன் என்று பெயர் வைத்தாள். சுநீதிக்கு பிறந்தவனை துருவன் என்று அழைத்தார்கள்.

உத்தானபாதனை சுநீதியின் பக்கம் திருப்பாமல் சுருசி தன் வசத்திலேயே வைத்துக் கொண்டாள். இயல்பிலேயே எம்பெருமானிடத்தில் பக்தி பூண்டவளான சுநீதி, துருவனுக்கு பக்திக் கதைகளையே பாலாக புகட்டினாள். பிஞ்சிலேயே கனிந்தான் துருவன். ஆனாலும் கனிந்த பழத்தின் மணம் சிறு கூடைக்குள்ளேயே சுற்ற வேண்டாம் என்று எம்பெருமான் கணக்கிட்டார்.  ‘‘என் கண்ணே.. குழந்தாய்.. தந்தையார் என்ன செய்கிறார் என்று பார்த்து விளையாடிவிட்டு வாடா’’ என்று சுநீதி துருவனை அனுப்பினாள். அதற்குமுன் சுருசி தன் மகனான உத்தமனை உத்தானபாதனின் மடியில் விளையாட விட்டிருந்தாள். துருவன் தந்தையை நெருங்கினான். அந்த மடியில் நானும்  உட்காருகெறேனப்பா என்று ஆசையோடு கேட்டான்.

சுநீதி சதி செய்து அனுப்பியிருப்பாளோ என்று ஆத்திரமாக நோக்கினாள், சுருசி. அடேய்.. துருவா. உன்னை யார் இங்கெல்லாம் வரச் சொன்னது என்று குழந்தையென பார்க்காது கோபப்பட்டாள்.‘‘தந்தையாரையும், உங்களையும் பார்த்து சகோதரனோடு விளையாடிவிட்டுப் போகலாம் என்று வந்தேனம்மா’’ என்று மழலையாகப் பேசினான். உத்தானபாதனும், சுருசி ஏதேனும் சொல்லிக் கொள்ளட்டும் என்பதுபோல உத்தமனை கொஞ்சியபடி இருந்தான். ‘‘யாரடா உனக்குத் தந்தை. நீ அரசகுமாரனாக வேண்டுமானால் இருக்கலாம். என் வயிற்றிலா பிறந்தாய். என்ன பாவம் செய்தாயோ அவளின் வயிற்றில் பிறந்திருக்கிறாய். தந்தையின் மடியேறி விளையாட வேண்டுமெனில் அடுத்த ஜென்மத்திலாவது என் வயிற்றில் பிறந்து வா’’ என குழந்தை என்று பார்க்காமல் குரூரமாகப் பேசினாள். துருவனுக்கு வார்த்தைகள் புரியவில்லை.

சிற்றன்னையின் கோபம் மட்டும் அச்சத்தை அதிகரித்தது. நான் என்ன கேட்டேன், சிற்றன்னை என்னவோ சொல்கிறாளே என்று குழம்பினான். தந்தையின் மடியில் விளையாடிக் கொண்டிருப்பவனை பார்த்தான். அவனைப்போல் தந்தையோடு விளையாட வேண்டும்.  கழுத்தை கட்டிக் கொள்ள வேண்டும். தோளில் ஊஞ்சல் போல தொங்கி ஆட வேண்டும். முதுகில் ஆசையாக ஏற வேண்டும் என்று ஆசையோடு பார்த்தான். விலுக்கென்று சுருசி அவனின் கைகளை பிடித்து அவனை ஓடக்கூட விடாது தரையோடு தேய்த்து வாசலில் எறிந்தாள். துருவன் எழுந்து நின்றான். சற்று தூரத்திலிருக்கும் தந்தை பிச்சைக்காரனைப் போல் தன்னை பார்க்கிறான் என்று மட்டும் புரிந்தது. அழுதால் இன்னும் அவமானப் பட்டுப்போவோம் என்கிற மனமுதிர்ச்சியை அந்த அரண்மனை அவனுக்குத் தந்தது. ஆனால், வீதியில் இறங்கியவுடன் கரை உடைந்த ஏரியாக அலறிக் கொண்டே தாயைப் பார்க்க வந்தான். சுநீதி துருவன் தேம்பித் தேம்பி அழுவதைப்பார்த்து அணைத்துக் கொண்டாள். சுருசிதான் ஏதேனும் சொல்லியிருக்க வேண்டுமென்று கண்களை மூடிக் கொண்டாள்.

‘‘அம்மா... நான் தந்தையிடம் செல்லக் கூடாதா. சிற்றன்னைக்கு பிறந்தவன்தான் அப்பாவோடு இருக்க வேண்டுமா. வந்து தந்தையிடம் சொல்லம்மா.. ’’என்று தாயின் கைகளை பிடித்து இழுத்தான். சுநீதி எல்லாவற்றையும் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று அவனின் கண்ணீரைத் துடைத்தாள்.‘‘கண்ணா... சிற்றன்னை சொன்னதில் தவறில்லையடா. என்போன்ற துர்பாக்யசாலியை திருமணம் செய்ததால் மனைவி என்று சொல்லக்கூட உன் தந்தையார் வெட்கப்படுகிறார். நீ என்ன பாவம் செய்தாயோ இந்த பாழும் வயிற்றில் பிறந்திருக்கிறாய்.’’‘‘என்ன பாவமம்மா செய்தேன்’’ குழந்தை இடைமறித்து கேட்டது. குழந்தையிடம்போய் தானும் ஆற்றாமையால் இப்படிப் பேசுகிறோமே என்று வருந்தினாள். இனி நல்ல வழியை சொல்லுவோம் எனச் சொல்லத் தொடங்கினாள். சிற்றன்னை சுருசி உன் மேல் இருக்கும் அன்பில்தானப்பா அப்படி செய்திருக்கிறாள்.

நீ பெரியவனாகி அரசனாக வேண்டுமல்லவா அதற்கு நீ திருமாலை தியானம் செய்ய வேண்டும். தந்தையாரின் மடியில் அமர வேண்டுமென்றால் மகாவிஷ்ணுவை வணங்க வேண்டுமென்று நாரதர் அன்றே சொன்னாரல்லவா. அதை நீ மறந்து விட்டாயா. உன்னுடைய தாத்தாவான ஸ்வயம்பு மனு எப்படி பெருமாளை வணங்கி, பெரிய ராஜாவாக மாறினாரோ அதுபோல நீ ஆகவேண்டாமா. ஆனால், நீ கேட்பதையெல்லாம் வாங்கித் தரமுடியுமா என்று தெரியவில்லையடா கண்ணே. அதனால்தான் யாரால் எல்லாமும் முடியும் என்று சொல்கிறேன். உன்னைக் காப்பதற்கு திருமாலைவிட சிறந்தவர் யாருமில்லை’’ என்று சொல்லிவிட்டு விசும்பினாள். துருவன் தாயின் கண்களைத் துடைத்து விட்டான். ‘என்னை சொல்லிவிட்டு நீயே அழுகிறாயே’ என்பதுபோல் பார்த்தான். தாயின் மடியில் தலைவைத்து படுத்துக் கிடந்தவன் சட்டென்று காலடியில் விழுந்து நமஸ்கரித்தான். ‘‘என்னடா துருவா இதெல்லாம்’’ என்று அவளும் பதறி, வாரி அணைத்துக் கொண்டாள். இனி, எம்பெருமானை பார்க்காது திரும்புவதில்லை என்ற உறுதி அவனுக்குள் திடப்பட்டது.

இல்லத்தை விட்டு வெளியேறினான். பிருந்தாவனத்திலுள்ள மதுவனம் என்கிற அந்த காட்டின் ஓரத்தில் யமுனை பிரவாகமாக கடந்தாள். துருவன் மூழ்கியெழுந்து தியானத்தில் அமர்ந்தான். மனம் ஸ்படிகம்போல இருந்தது. ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய...’ என்று மந்திரத்தை உதடு பிரிக்காது மனதிற்குள்ளேயே சொன்னான். தாமரை போன்ற மலர்ந்த முகமும், அருளை பெருக்கும் கண்களும், கைகளில் சங்கு, சக்கரங்களோடும், அபய வரத ஹஸ்தங்களோடு, மனதை கொள்ளை கொள்ளும் ஸ்ரீமன் நாராயணனை மனதில் நிறுத்தினான். வெளியுலகம் கரைந்து, உள் உலகமான அக உலகம் விரிந்தது. ‘‘ துருவா... மீண்டும் நீ உன் நாட்டிற்கு சென்று பாகவத தர்மப்படி எல்லோருக்கும் வாழ்ந்து காட்டு.

வேறு எவராலும் அடைய முடியாத, சப்த ரிஷிகளும் சத் சங்கமாக விளங்கும் வானில் அவர்களுக்கு அருகிலேயே துருவ ஸ்தானம் எனும் இடத்தை அளிக்கிறேன். உன்னை காணும்போது அவர்களுக்குள் பக்தி ஊற்று கொப்பளிக்கட்டும். மகாபிரளயத்தின்போது என்னோடு நீ கலப்பாய். க்ரம முக்தி எனும் ஊழிக் காலத்தில் என்னோடு ஒடுங்குவாய் துருவா’’ என்று மறைந்தார். துருவன் நாடு திரும்பினான். தந்தையும், தாயும், சிற்றன்னையும், சகோதரனும் பாலகனாக அழுது கொண்டு சென்றவன் துருவ பாகவதனாக வருவதை பார்த்து நெகிழ்ந்தனர். இறைவன் யாரைப் பார்க்கிறாரோ அவரை உலகத்திலுள்ள எல்லோரும் பார்க்கிறார்கள். அப்படி அவன் பார்க்கச் செய்கிறான். வாழ்வின் இறுதியில் உடலை உகுக்காது ஒளி வடிவோடு வானத்தில் துருவ ஸ்தானத்தில் துருவ நட்சத்திரமாக ஒளிர்ந்தான்.
 
கிருஷ்ணா

Tags : Heaven ,
× RELATED ஆங்கிலத்தில் உருவாகும் தி டார்க் ஹெவன்