×

கேட்டதும் சிவம்... கொடுத்ததும் சிவம்...

உலக வாழ்வே இறையின் கருணை. அதற்கென்று இயல்பான சில நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, அதனைப் பின்பற்றுவதே வாழ்க்கை என்ற பெயரில், வாழவைத்துக் கொண்டிருக்கிறது நம்மை. கேட்டது இறையின் ஒரு ரூபம் என்பதற்காக, தனது வாழ்க்கை நெறிகளுக்கே பகையாகிப்போன ஓர் வைசியர். உலக இயல்பிற்கே பகையாகிப்போன ஓர் அடியவர்க்கு அடியவர்தான் இயற்பகைநாயனார். எப்படி என்று அறிவோமா! அன்று திருச்சாய்க்காடு ஊரே கலங்கிப் போய்தான் இருந்தது. இது அநியாயம் என்றனர் சிலர். இதை நானிலத்துக்கும் அதர்மம் என்றனர் சிலர். இது பெரும்பாவம் என்றனர் சிலர். இதை ஏற்றுக் கொள்ளமுடியாது என்றனர் சிலர். இதை தடுத்தே ஆகவேண்டும் என்று எல்லோரும் கூறினர். ஊரே கூடி, நடக்கவிருக்கும் ஓர் பாதகத்தினை தடுத்து நிறுத்த திரண்டது. அத்தனைக்கும் காரணமான அந்த வைசியரைத் தேடியது.

அவரோ அந்த வைசியரோ கையில் வாளுடன் சுற்று முற்றும் பார்த்தபடி வேகமாக வந்துகொண்டிருந்தார். அவர் பின்னே வைசியரின் மனைவியும் அவளுக்கு அருகே ஒரு வேதியரும் வந்து கொண்டிருந்தனர். வேதியரின் முகத்தில் தெரிவது தெளிவா, குழப்பமா என யூகிக்கமுடியாத நிலை. வைசியரின் மனைவியின் முகத்திலோ, தெள்ளத் தெளிந்ததோர் அமைதி. வைசியரின் முகமோ, கோபம் கலந்த ஆவேசத்தோடு முன்னே வைசியர் காவலாய் நடக்க, பின்னே, வேதியரும், வைசியரின் மனைவியும் அலையும் விழிகளோடு அங்கிங்கு ஆர்ப்பரித்தபடி வந்துகொண்டிருந்த வைசியரைக் கண்ட கூட்டம், அவர்களைத் தடுத்து நிறுத்தியது.
“நில்லுங்கள் வைசியரே… இதுதான் சிவத்தொண்டா... சிவனடியார்கள் என்று கூறி எவர் வந்து கேட்டாலும், உடனே அவர் கேட்டதை தந்து விடுவது நல்ல பண்புதான்.

அடியார்களுக்காக பொன்… பொருள்... வீடு... சொத்து... நிலம்... இப்படி எதை வேண்டுமானாலும் தருவீர்கள் என்பதையும் அறிவோம். பெற்ற பிள்ளையைக்கூட சிவனடியார்களுக்கு அர்ப்பணிக்கலாம். தவறில்லை. ஏன். தன் உயிரைக்கூட தானமாய் தந்தாலும் தவறில்லை. ஆனால், தற்போது நீங்கள் செய்து கொண்டிருப்பது தர்மத்திற்கு எதிரான செயல். அடியார் கேட்டார் என்பதற்காக, அன்போடு கட்டிய மனைவியை தானமாய் தருவது எந்த விதத்தில் நியாயம்..? வெறும் மனைவி தானே என்ற மமதையா உமக்கு... மனைவி என்பது உயிர் மட்டும் அல்ல. உன்னில் பாதி… அவள் உனது உணர்வு... அவள்தான் சக்தி. அவள் உன்னில் பாதி... அவள் இருக்கும்வரைதான் நீ சிவம்... அவள் உன்னை விட்டு நீங்கினால் நீ வெறும் சவமே... உனக்கு கட்டுப்பட்டு உன்னை உணர்வாய் உணர்த்துபவள்தான் மனைவி என்பவள்.

எவருக்குமே அடங்காத உன் காமத்தையே அடக்கி ஆள்பவள் மனைவி. உணர்வின்றி போய்விட்டால் நீ உயிர் வாழ்வதில் பயனென்ன...? உங்கள் சிவத்தொண்டு ஊர் அறிந்ததே என்றாலும் உன்னுடைய உணர்வை நீரே மதிக்கவில்லை என்றால் பிறர் எவர் மதிப்பர்...? உன்னுடைய அன்பையும் ஆதரவையும்... பரிவையையும் நீ எந்நேரத்திலும் எவரிடமும் காட்டலாம். ஆனால் உன்னுடைய கோபத்தையும், வெறுப்பையும் எப்பொழுதும் தாங்கும் சுமைதாங்கிதான் மனைவி. உனக்காக சிரிக்கவும், உனக்காக அழவும் தாய் உண்டு. உனக்கு வேண்டியதை தர இறைபோதும். ஆனால், இவை இரண்டையும் சேர்த்து ஒன்றாக அளிக்க மனைவியால் மட்டுமே முடியும். இப்போதுகூட உனக்காக உன் கொள்கைக்காக நீ சொன்னாய் என்பதற்காக எதுவுமே பேசாமல் முன் பின் தெரியாத ஒரு வேதியருடன் சென்று கொண்டிருக்கும் உன் மனைவியின் தியாகம் தெரியவில்லையா உனக்கு?

இயற்கைக்கு மாறான செயலை இறைத்தொண்டு என்ற பெயரில் செய்யாதே. தடுப்பவர் எவருமில்லை என்ற மமதையும் வேண்டாம். கற்பினுக்கரசி எனப் பெயர் கொண்ட உன் மனைவியை. கற்புநெறி தவறச் செய்வதுதான் சிவத்தொண்டா..? இறையே இதனை ஏற்காது. வேதியரைக் கொன்றாவது அவள் மானம் காப்போம்.
ஊர் மக்கள் வைசியரை தடுத்தனர். மொத்தக் கூட்டத்தின் பார்வையும் அந்த வேதியர் பக்கம் திரும்பியது. சிறிதும் சலனமின்றி காட்சியளித்த அந்த வேதியரின் முகமும், இதழோரம் தெரியும் ஓர் மந்திரப்புன்னகையும், ஏனோ அவர்களை தடுக்கவும் செய்தது. வைசியருக்கோ கண்கள் சிவக்க ஆரம்பித்தன. வாளினைப் பிடித்திருந்த கை இறுக ஆரம்பித்தது. கண்களில் கோபத்துடன் அந்த வைசியர் கூட்டத்தினரை நோக்கி, ‘‘விலகி நில்லுங்கள். எச்சரிக்கிறேன். இந்த வேதியருக்கு எவர் ஊறு விளைவிக்க நினைத்தாலும். அவர் உயிர் நீக்குவேன். சிவனின் அடியவரான இந்த வேதியர் கேட்டது எதுவாயினும், அது சிவனின் கட்டளையே. அதைத் தடுக்க நினைக்கும் எவரையும் அழிப்பேன்’’ என கையில் வாளுடன் மக்களை நெருங்கினார்.

‘‘இவ்வளவு கூறியும் விளங்கவில்லையா உமக்கு? மனைவியை இன்னொருவன் உடன் அனுப்புவதுதான் நீர் அறிந்த சிவத்தொண்டோ? சிவ நினைவு என்று கூறி சுய நினைவை இழந்தீரோ? கொஞ்சம் சிந்தித்துப் பாருமய்யா… நாங்கள் என்ன உனக்கு வேண்டாதவர்களா? வைசியரை நோக்கி ஊர் மக்கள் கேட்டனர்.
“என் உறவினர்கள் நீங்கள். என் நலன் விரும்பும் ஊர் மக்கள் நீங்கள். என்னைப் புரிந்துகொள்ள ஏன் மறுக்கிறீர்கள்? எல்லாம் சிவம் என்றால் இந்த வேதியரும் சிவம் தானே? சக்தியாகிய என் மனைவியை இவருடன் அனுப்புவது எப்படி தவறாகும்? இன்றுவரை சிவனடியார் பலருக்கு பொன், பொருள் தானமாய் தந்தேன். அவை எவரிடத்திலோ நான் ஈட்டது. என் உயிரை கூடத் தருவேன். அது என் தாய் தந்தை எனக்கு அளித்தது.

என் பிள்ளையை கூட தருவேன். அவன் எங்கள் இருவரின் உடைமை. இன்றுதான் முதன் முதலாய் எனக்கே சொந்தமான என் உணர்வினை ஒருவர் தானமாகக் கேட்கிறார். அதை கொடுக்கும் சந்தோஷத்தை அவர் கேட்டதை தர முடிந்ததே என்ற நிம்மதியை நிலைகுலைக்க வந்தீர்களா. அடியார்க்கு செய்யும் சேவை. ஆண்டவனுக்கே சேரும். அடியார் வடிவில் இறைவன் கேட்பதை தரமுடியாது என்று தடுக்க நினைப்பீரோ..? இதை தடுத்து இறை பாவம் தேடவேண்டாம். விலகிப் போங்கள். எவர் தடுத்தாலும் கொல்வேன் இது உறுதி.’’ அந்த வைசியர் முன் நடக்க ஆரம்பித்தார். ஊர் மக்கள் வைசியரின் பேச்சிற்கு உடன்படுவதாய் இல்லை. எல்லோரின் கோபமும் அந்த வேதியர் மேல் திரும்பியது. கூட்டத்தில் பல பேர் அந்த வேதியரை தாக்க முற்பட்டனர்.

வைசியரோ புயல்போலப் பாய்ந்து எதிர்த்தவர்கள் அனைவரையும் வெட்டி வீழ்த்தினார். வீதி முழுவதும் தலை வேறு; கால் வேறு; கை வேறு என உடல் குவியல்கள். எதிர்க்க எவரும் இல்லை என்ற பின் அந்த வைசியர். வேதியரை நோக்கி, இனி நீங்கள் இவளை அழைத்துச் செல்லலாம். தடுக்க எவருமிலர் என்றார். வேதியரும் சுற்று முற்றும் பார்த்துவிட்டு, ‘‘சரி… நீங்கள் செல்லலாம்’’ எனக்கூற வைசியர், வேதியரை வணங்கி விடைபெற்றார். திரும்பி நடந்தார்.
மனம் மகிழ்ச்சியில் நிறைந்தது வைசியருக்கு. அடியார் கேட்டதை தந்ததை அதை தடுக்க வந்ததடையையும் அகற்றியதை நினைக்க நினைக்க நெஞ்சுருகி நடந்தார். பெரும் சாதனை செய்த நிறைவொன்று அவர் நெஞ்சினை நிறைத்தது. வேதியரின் கண்களிலோ கருணை கலந்த வியப்பு; மனதிற்குள் பூரிப்பு.
என்ன பக்தி.!

தன் மனைவியையே நான் கேட்டேன் என்பதற்காக தந்துவிட்டு எதிர்த்த தன் உறவுகளையெல்லாம் அழித்துவிட்டு எள்ளளவுகூட வருத்தமின்றி இவனால் எப்படி போக முடிகிறது? சிவன் பக்திக்காக இவ்வளவு பெரிய தியாகமா? தன் மனைவி…. தன் பிள்ளை…. தன் உற்றார்…. தன் உறவினர் என்று வாழும் இவ்வுலக இயற்கை நீதிக்கே, சிவ பக்தியால் பகையாகிப் போனானே... உலக இயல்புக்கே பகையானவன் இயல்பகைநாயனன் இவன். ‘‘இயற்பகைநாயனரே...’’ ஒரு ஒலக் குரல் கேட்க மறுபடியும் வேதியரை தடுக்க எவரேனும் வந்தாரோ என எண்ணி வேகமாய் விரைந்தார் வைசியர். அங்கே அவர் மனைவி மட்டும் தனியே நிற்க பதறினார். என்ன ஆயிற்று என்று அறியும் முன் வானில் பார்வதி சமேதரராக பரமன் காட்சியளித்து‘‘இயற்பகைநாயனாரே… உங்கள் இருவரின் பக்தி எங்களை கட்டிப் போட்டு விட்டதய்யா. வேதியராய் வந்ததும் யானே.

இறைமேல் கொண்ட பக்தியின் பொருட்டு, தன் உணர்வினைக் கூட விட்டுத்தர இயலும் என்பதை எம்மோடு சேர்த்து இவ்வுலகிற்கும் உணர்த்தினீரே..! கணவனின் கட்டளை என்பதற்காக மட்டுமல்லாது, கேட்டதும் சிவம், கொடுத்ததும் சிவம் என சிறிதுகூட மனச்சஞ்சலமின்றி எம்மைப் பின் தொடர்ந்தாளே…. உம் துணைவி… இருவருமே பக்தியின் உச்சம் தொட்டு நிற்கிறீர்கள் நாயனரே. உங்கள் பக்தியின் பெருமையை உலகறியச் செய்தோம். இன்னும் பல சிவனடியார்க்கு தொண்டுகள் செய்து தகுந்த காலத்தில் எனை வந்து அடைவீராக’’ என்றுகூறி ஆசிர்வதித்து அருளினார். இயற்பகைநாயனாரால் கொல்லப்பட்ட அனைவரும் உயிர் பெற்றனர். அவரை வணங்கினர். அவரோ எல்லாமுமாய் நிற்கும் இறைவனை... அடியார்களின் பெருமையை உணர்த்த... அல்லல்படும் அம்பலத்தானை... மனமுருகி நினைத்து தன் இல்லம் நோக்கி நடந்தார்.

அடுத்த சிவனடியாரைக் காண... அவர் வேண்டியதை தருவதற்கு இறையருள் கேட்டு இறைஞ்சியபடி, வைசியராய் பிறந்து நாயனராய் இயற்பகைநாயனாராய் உயர்ந்த அவரை சிவன் பெயரால் வேண்டியதை நீங்களும் மனமுருகி கேளுங்கள். வேண்டியவற்றை தந்தருள்வார். உண்மையான பக்தியானது முக்தியை அடைய… உலக இயல்புகள் தடை போடத்தான் செய்யும். பந்தம், பாசம், உடைமை என்பதோடு கூடிய நம் உணர்வுகளும் போராடத்தான் செய்யும். அவற்றை வென்று இறையை அடையவும், இறையருள்தான் தேவை. அவனருளால் மட்டுமே அவன் தாள் வணங்க முடியும். அதற்கு நம்மை தகுதியாக்கிக் கொள்வதின் உயர்நிலைதான் இயற்பகைநாயனாரின் வாழ்க்கை சொல்லும் ரகசியம். பூம்புகாருக்கு அருகில் உள்ள திருச்சாய்க்காடு என்னும் ஊரில் உள்ள சிவத்தலத்தில் அடியவர்களாய் நின்று அருள்பாலிக்கும், இயற்பகைநாயனாரையும், அவரது மனைவியார் கற்பினுக்கரசியினையும், ஒருமுறை கண்டு உணர முற்படுங்கள். அவர்களே உணர்த்துவார்கள் இறையின் அருகாமையினை அடையும் வித்தையினை.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?