திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பவித்ர மாலைகள் சமர்ப்பணம் : சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம்

திருமலை: திருச்சனூர் பத்மாவதி தாயார் கோயிலில் பவித்ர மாலைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. திருப்பதி அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பவித்ர உற்சவம் கடந்த 22ம் தேதி அங்குரார்ப்பணத்துடன் தொடங்கியது. பவித்ர உற்சவத்தின் முதல் நாளான நேற்றுமுன்தினம் பத்மாவதி தாயார் சுப்ரபாத சேவையுடன் துழில் எழுப்பப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவ மூர்த்தி பத்மாவதி தாயார் யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டு அக்னி பிரதிஷ்டை மற்றும் பவித்ர மாலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்நிலையில், பவித்ர உற்சவத்தின் 2வது நாளான நேற்று காலை யாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பவித்ர மாலைகள் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து கிருஷ்ணமுக மண்டபத்தில் சுவாமிக்கு பால், தயிர், தேன், இளநீர் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் துளசி மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் கண்காணிப்பாளர் மல்லேஸ்வரி, கோயில் ஆய்வாளர் குருவய்யா உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: