தல்லாகுளம் பெருமாள் கோயிலில் தெப்பத் திருவிழா : அன்னப்பல்லக்கில் சுவாமி தேவியர்களுடன் எழுந்தருளினார்

அலங்காநல்லூர்: திருமாலிருஞ்சோலை என்றும், தென்திருப்பதி என்றும் போற்றி அழைக்கப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றானது அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலாகும். இக்கோயிலின் உப கோயிலானது மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயிலாகும். கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரமோற்சவ  12 நாள் நடைபெறும் பெருந் திருவிழா முக்கியமானதாகும். இந்த விழாவானது கடந்த 13ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அன்ன வாகனம், கிருஷ்ணாவதாரம், சிம்ம வாகனம், ராமாவதாரம், அனுமார் வாகனம், கஜேந்திர மோட்சம், கெருட வாகனம், ராஜாங்க சேவை, சேஷ வாகனம், மோகனாவதாரம், யானை வாகனம், புஷ்ப விமானம், வெண்ணெய் தாழி, குதிரை வாகனம், பூப்பல்லக்கு, தீர்த்தவாரி, பூச்சப்பரம் போன்ற வாகனங்களிலும், அவதாரங்களிலும் பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியானது இங்கு நடைபெறும் தெப்பத்திருவிழாவாகும். இதற்காக முன்னேற்பாட்டின் பேரில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் முல்லைப்பெரியாறு கால்வாயிலிருந்து அதற்காக அமைக்கப்பட்டுள்ள கிளைக்கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தெப்பத்தை நிரப்பி இருந்தனர். அதன்படி நேற்று காலை 10.45 மணிக்கு தெப்ப உற்சவம் நடந்தது.

இதில் மேளதாளம் முழங்க ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத வெங்கடாசலபதி பெருமாள் அலங்கரிக்கப்பட்ட அன்னப்பல்லக்கில் எழுந்தருளி தெப்பத்தில் வலம் வந்தார். மேள தாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் மேற்கு பகுதியிலுள்ள மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். அங்கு விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்து தரிசனம் செய்தனர். பின்னர் மாலையில் வண்ண விளக்குளால் தெப்பம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மறுபடியும் அன்னப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளி தெப்பத்தை வலம் வந்தது. இன்று 24ந் தேதி 12 வது திருநாள் காலையில் உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: