அனந்த பத்மநாப விரதத்தையொட்டி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

திருமலை: அனந்த பத்மநாப விரதத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சுக்லபட்ச சதுர்தசியில் நிகழும் விரதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுவது அனந்த பத்மநாப சதுர்தசி விரதம். பாத்ரபத புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்தசி திதியில் வரும் இதை அனந்த பத்மநாப சுவாமி விரதம் என அழைக்கின்றனர். அளவிட முடியாத செல்வ செழிப்புக்களை அளிக்கக் கூடியது இந்த விரதம். மேலும், ஸ்ரீமந் நாராயணன் ஆதிசேஷன் மீது, அனந்த பத்மநாபனாக சயனித்தவாறு இந்நாளில் தோன்றியதாக ஐதீகம்.

Advertising
Advertising

அனைத்து உயிரினங்களின் மீதும் அளவிலாக் கருணையுடனும், அவற்றின் வளமான வாழ்வில் பற்று கொண்டவராகவும், கூப்பிட்ட குரலுக்கு அந்த நொடியிலேயே காத்தருள ஓடி வருபவராகத் துயிலுற்ற நிலையிலும், விழிப்புற்றவராகச் சயனித்திருக்கிறார் மகா விஷ்ணு. மகா விஷ்ணு அவதாரமாக கலியுகத்தில் சீனிவாச பெருமாள் பக்தர்கள் கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்றும் தெய்வமாக விளங்கி வருகிறார் ஏழுமலையான் கோயிலில் உள்ள சீனிவாச பெருமாள். இந்த நிலையில் திருமலையில் அனந்த பத்மநாப சுவாமி விரதத்தையொட்டி நேற்று சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

ஏழுமலையான் கோயிலில் இருந்து சக்கரத்தாழ்வார் ஊர்வலமாக நான்கு மாட வீதியில் வலம் வந்தார். அப்போது, தெப்பகுளத்தில் பால், தயிர், தேன் உட்பட சுகந்த திரவியங்களை கொண்டு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பின்னர் கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி  நடைபெற்றது. தொடர்ந்து, சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில், தேவஸ்தான துணை செயல் அதிகாரி ஹரிந்திரநாத், அர்ச்சகர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: