வளம் சேர்ப்பார் சூளகிரி வரதராஜர்!

ஒருமுறை பஞ்ச பாண்டவர்கள் துரியோதனனிடம் சூதாட்டத்தில் தோற்று வன வாசம் சென்றனர். அப்போது பல இடங்களுக்குச் சென்று விட்டு சூளகிரி மலைப்பகுதிக்கு வந்தனர். பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் பெருமாளை வழிபடுவதற்காக அங்கிருந்த மலையில் கல்லெடுத்து கோயிலமைத்து வழிபாடு செய்தான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜுனன் பிரதிஷ்டை செய்த இவ்விடம் தமிழகத் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. அர்ஜுனன் பிரதிஷ்டை செய்ததற்கு அடையாளமாக இன்றும் இந்த மலையில் “ஐந்து குண்டு” என்ற ஐந்து குன்றுகள் உள்ளன. மேலும் இந்த மலையைப் பார்த்தால் சூலம் போன்ற அமைப்பில் இருக்கும். இதனாலேயே இப்பகுதி சூளகிரி என அழைக்கப்படுகிறது.

Advertising
Advertising

ஏழு மலை, ஏழு கோட்டை, ஏழு மகா துவாரங்கள் ஏழு அடி உயரப் பெருமாள். இந்த ஏழுமலை வாசனுக்கு இப்படி எல்லாமே ஏழு ஏழாக அமைந்திருக்கிறது. இங்கு வரதராஜப்பெருமாள் தாயார் பெருந்தேவியுடன் அருளாட்சி செய்கிறார். மேற்குபார்த்த இந்த பெருமாள் கோயிலில் உத்ராயண காலத்தில் சூரியன் அஸ்தமனம் ஆகும் போது சூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் பட்டு அவரை வணங்குவதைத் தரிசிக்கலாம். இதனால் அஸ்தகிரி எனவும் இத்தலம் அழைக்கப்படுகிறது. சூளகிரி மலையின் மொத்த உயரம் 3000 அடி. மலையின் ஆரம்பத்திலேயே வரதராஜப் பெருமாள் கோயில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. கோயிலின் கருவறை மற்ற கோயில்களை விட உயரம் மிகவும் குறைவாக அமைக்கப்பட்டுள்ளது.

அதே போல் பெருமாளும் ஆரம்பகாலத்தில் கர்ப்பகிரக நிலைவாசலுக்கு உள் அடங்கி இருந்ததாகவும், காலப்போக்கில் வளர்ந்து மகாமண்டபத்தில் இருந்து பார்த்தால் பெருமாள் பாதி அளவே தெரியும் அளவிற்கு வளர்ந்திருப்பதாகவும் கூறுகிறார்கள். இப்படி காலப்போக்கில் வளரும் பெருமாளைத் தரிசித்தால் நமது வாழ்க்கையில் எல்லா நலன்களும் மென்மேலும் வளரும் என்பது ஐதீகம். மேற்கு பார்த்த வரதராஜப் பெருமாளை பார்த்தபடி கிழக்குப்பார்த்து பெருந்தேவி மகாலட்சுமி தனி சந்நதியில் அருட்பாலிக்கிறாள். அனுமன் பெருமாளின் காவலனாக மகாமண்டபத்தின் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார். இக்கோயிலை பல மன்னர்கள் பல காலங்களில் கட்டியிருக்கிறார்கள்.

அர்ஜுனனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாளுக்கு சோழ மன்னர்கள் கருவறை கட்டியுள்ளார்கள். விஜயநகர சாம்ராஜ்யத்தை சேர்ந்த கிருஷ்ணதேவராயரால் முன் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் பின் கர்நாடகத்தை ஆண்ட ஹோய்சாலர்கள், இதர மன்னர்களான பாளையக்காரர்கள், விஜய நகர சிற்றரசர்கள் படிப்படியாக இந்த கோயிலை விரிவு படுத்தி வழிபட்டு வந்துள்ளனர். வைகுண்ட ஏகாதசி, மார்கழி தனுர் பூஜை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவிழா காலங்களில் கருட சேவை இத்தலத்தின் சிறப்பு அம்சமாகும். ஏனெனில் இந்தப்பகுதியிலேயே இங்கு தான் மிகப்பெரிய கருடாழ்வார் வாகனம் அமைந்துள்ளது. பெருமாளை தரிசித்தால் நமது வாழ்க்கையில் எல்லா நலன்களும் மேன்மேலும் வளரும் என்பது ஐதீகம். இவரை புரட்டாசி சனிக்கிழமைகளில் தரிசிப்பது சிறப்பாகும். பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

 

ந. பரணிகுமார்

Related Stories: