×

நவக்கிரக சக்திகள் நிறைந்த தோத்தாத்ரி நாதப்பெருமாள்

புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட தோத்தாத்ரி நாதர் கோயில் உள்ளது இந்த கோவில் முதலாம் பராந்தகச்சோழன் காலத்தில் (கி.பி.907955) கட்டப்பட்டது. வீரநாராயண விண்ணகரம் என்பது இக்கோவிலின் பழைய பெயர் வீரநாராயணன் என்பது பராந்தகரின் விருதுப் பெயராகும் இது தவிர பராந்தகரன் மனைவி பெயரை கொண்ட இவ்வூர் திருபுவனை மகாதேவி சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப் பட்டது. இவ்வூரில் அமைந்துள்ள ஏரியும் பராந்தகரின் மற்றொரு மனைவியின் பெயரை கொண்டு கோகிழரேடி பேரேரி என்று அழைக்கப்படுகிறது.

சோழர் காலக்கோயில்:

இக்கோயில் சோழர்காலத்து வேலைப்பாடுகள் கொண்ட அழகிய கற்றளி வகையை சேர்ந்ததாகும். கருவறை சுவற்றில் உள்ள இராமாயண பாசல சிற்பங்கள் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இக்கோயில் சோழர் காலத்திய கல்வெட்டுகள் பல அரிய வரலாற்றுச் செய்திகளை தருகிறது. இதில் உற்சவ மூர்த்தியாக ஸ்ரீவரதராஜ பெருமாளுடன் ஸ்ரீதேவி ஸ்ரீபூமி தேவியாரும் சேர்ந்து அருள்பாலிக்கின்றார். வியாழக்கிழமைகளில் சின்முத்திரை தாங்கி பெருமானை தரிசிப்பது சிறப்புடையது. குரு பகவானுக்கும், சுக்கிர பகவானுக்கும் சின்முத்திரையின் ஞானப் பேரொளியைத் தந்த பெருமாள். பெரும்பாலும் பெருமாள் ஆலயத்தில் நவக்ரஹ சன்னதிகள் இருப்பது இல்லை இதற்கு காரணம் இராஜ கோபுரங்களும் தசாவதார தரிசனங்களுமே நவக்ரஹ சக்திகளைப் பெற்று தந்து விடுகின்றன.

நவக்ரஹ மூர்த்திகளில் குரு பகவானும் சுக்கிர பகவானுமே பெருமாளைப் போற்றிப்பணிந்த தலம் என்பதால் நவக்ரஹ சக்திகள் நிறைந்த அற்புதப் பெருமாள் தலமாக விளங்குகிறது. நம்மாழ்வார் சன்னதி, அனுமன் சன்னதி, முருகப்பெருமான், கருடாழ்வார் சன்னிதி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளும் இந்த ஆலய வளாகத்தில் அமைந்துள்ளன. இந்த கோயிலின் படம் தஞ்சை பெரிய கோயிலில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகியவற்றுடன் எளிமையாகக் காணப்படுகிறது. கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதியில் அரைத் தூண்கள் அழகு செய்கின்றன. தேவக்கோட்டப் பகுதியில் சாளரம் அமைந்துள்ளது. கோட்டங்களில் சிற்பங்கள் ஏதும் அமைக்கப்படவில்லை.

கருவறை விமானத்தின் உயரத்தை அதிகரிப்பதற்காக உபபீடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. உயரமாக அமைக்கப்பட்ட உபபீடத்தின் மீது தாங்குதளம் அமைந்துள்ளது. தாங்குதளம் உபானம், பத்மஜகதி, உருளைக்குமுதம், புடைப்புச்சிற்பங்கள் அமைந்துள்ள பிரதிபந்த கண்டம், இராமாயண மற்றும் பாகவத காட்சிகளின் புடைப்புச் சிற்பங்கள் அமைந்த வேதிகைக் கண்டம் ஆகிய உறுப்புகளை பெற்று விளங்குகிறது. இக்கோயில் விமானம் உபபீடத்திலிருந்து கூரைப்பகுதி வரை கற்றளியாக அமைந்துள்ளது. கருடாழ்வாருக்கு தனி  சன்னதி பலிபீடத்தின் முன் அமைந்துள்ளது.

சிறப்புகள்:

இங்குள்ள பெருமாளையும், தாயாரையும் வழிபடுவோர்க்கு சற்குருவின் அனுகூலத்தையும் காரிய சித்திகளையும் பெற்றுத்தருபவரே திருபுவனை பெருமாள் இந்த பெருமாளை தரிசித்தால் குழந்தை பேறு கிடைக்கும். திருமணத்தடை நீங்கும், தொழில்முடக்கம், கடன் பிரச்னை முற்றிலுமாக தீரும் என்பது ஐதீகம். தோத்தாத்ரி நாதரை தரிசித்தால் வாழ்வில் சகல செல்வங்களும் நம்மை வந்து சேரும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். தோத்தாத்ரிநாதப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா, சொர்க்கவாசல் திறப்பு மிக சிறப்பாக நடைபெறும். மேலும் விழாவையொட்டி திருக்கல்யாண உற்சவமும் சிறப்பாக நடைபெறும். புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை பெருமாள், தாயார் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். வியாழக்கிழமை தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.

செல்வது எப்படி?

புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் திருபுவனையில் இறங்கி திருபுவனை காவல் நிலையம் செல்லும் சாலையில் சென்றால் சிறிது தூரத்திலேயே இக்கோவில் அமைந்துள்ளது.

Tags :
× RELATED காமதகனமூர்த்தி