திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 13ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. காலை மற்றும் மாலை நேரங்களில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்வேறு வாகனங்களில் மாடவீதியில் வலம் வந்தார். 8ம் நாளான நேற்று காலை மகா தேரோட்டம் நடந்தது. இரவு அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் கல்கி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாட வீதியில் பவனி வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதையடுத்து 9ம் நாளான இன்று காலை சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடந்தது.

இதையொட்டி கோயிலில் இருந்து அதிகாலை உற்சவ மூர்த்திகளும், சக்கரத்தாழ்வாரும் ஊர்வலமாக வராக சுவாமி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டனர். கோயில் எதிரே மலையப்ப சுவாமி, தாயார்கள், சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட சுகந்த திரவியங்களை கொண்டு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பின்னர் கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.

இதனால் தெப்பக்குளத்தை சுற்றியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் புனித நீராடினர். இதனை தொடர்ந்து, சுவாமி வீதிஉலாவின்போது வாகன சேவைகளை காண வந்த, தேவதைகளை வழியனுப்பும் விதமாக ஆகம முறைப்படி வேதமந்திரங்கள் முழங்க கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டிருந்த கொடி இன்று மாலை இறக்கப்படும். கொடியிறக்கத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. வரும் அக்டோபர் 10ம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கி 18ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Related Stories: