ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் பிரமோற்சவ தேர்த்திருவிழா

பெரணமல்லூர்: பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கி நடந்து வருகிறது. இந்தநிலையில், பிரமோற்சவத்தின் 7வது நாளான நேற்று விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை மூலவர் சீனிவாச பெருமாளுக்கும் உற்சவமூர்த்திகள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனுவாச பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.

தொடர்ந்து, காலை 9.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் உற்சவமூர்த்திகள் மேளதாளத்துடன், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்துடன் வடம் பிடித்து  தேரை இழுத்து சென்றனர். பின்னர் மலையை சுற்றி மாடவீதி வழியே தேர் நிலையை அடைந்தது. விழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: