நாமகீர்த்தனமே நமக்கிட்ட பணி!

ஞானியர் தரிசனம் - 25

திருவிசநல்லூர் கிராமத்தின் ஒவ்வொரு நாளும் தவம்போல கடந்தது. அதிகாலை எழுவார். அய்யாவாள் இயற்றிய ஸ்தோத்திரங்களை சொல்லியபடியே காலை சந்தியாவந்தனத்தை முடிப்பார். பிறகு உஞ்ச விருத்திக்கு காலையில் சென்று வருவார். பூஜைகளையும் நித்தமும் செய்துவரும் ஹோமங்களையும் வழுவாது செய்வார். பாகவதம் மற்றும் ராமாயணத்தை கதையாகச் சொல்வார். மீண்டும் மாலை சந்தியாவந்தனம் செய்தபிறகு நாராயண தீர்த்தர், ராமதாசர், புரந்தரதாசரின் கீர்த்தனைகளை உரக்கப் பாடுவார். பிறகு இரவு நேரத்தில் டோலோத்சவம் செய்த பிறகு உறங்கப் போவார். வைதீக கர்மங்களை இம்மிகூட பிசகாது நடத்திக் காட்டினார். எப்படி பக்தி யோகத்தில் தன்னை கரைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்கு சுவாமிகள் ஒரு உதாரண புருஷராக திகழ்ந்தார். சத்குரு சுவாமிகளுக்கு பத்தினியுடன் அயோத்திக்கே சென்றுவிடலாம் என்று தோன்றியபடி இருந்தது. எனவே, தன்னுடைய தணியாத பெரும் ஆவலை ஊரிலுள்ள மக்களிடம் வெளிப்படுத்தினார்.

‘‘என்மீது நீங்கள் எத்தனை பிரியமாக இருக்கிறீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். எந்தக் குறைவுமின்றி இந்த கிராமத்தினர் என்னை மிகவும் கொண்டாடினார்கள். இப்போது என் ராமன் சஞ்சரித்த இடங்கள் தோறும் தரிசிக்க வேண்டுமென ஆவல் அதிகமாகிறது. சில வருஷங்கள் அங்கேயே வசித்து வரவும் ஆசையாக உள்ளது, இதை ஈஸ்வர சங்கல்பமாக நினைக்கிறேன். வேறு எவரையும் இந்த திட்டத்தை மாற்றிவிட முடியாது. மேலும், நான் உஞ்சவிருத்தி எடுத்தே பிழைத்திருந்ததால் அங்கேயும் எனக்கு எவ்வித தேவையும் இருக்க முடியாது’’ என்று சொன்னவுடன் மக்கள் அழுதனர். சத்குருசுவாமிகள் ராமன் எப்படி காட்டிற்குச் சென்றானோ அதுபோலவே ஊராரிடம் சொல்லிக் கொண்டு அயோத்தி நோக்கி பல வனங்கள், நகரங்கள் என்று தனது மனைவியோடும் தன்னுடைய குல தனமாகிய கோதண்டராமனை சுமந்தபடி அயோத்தியை அடைந்தார்கள்.

அங்குள்ள.ஜனங்கள் சதாசர்வ காலமும் ராமனை பஜித்தபடியே தங்களின் அன்றாடங்களை யோகமாக மாற்றியபடி இருந்தனர். அங்கேயும் சத்குரு சுவாமிகளின் பக்தியை கண்ட மக்கள் அவரையே பின் தொடர்ந்தபடி இருந்தனர். வெகுநாட்கள் கழித்து சத்குரு சுவாமிகள் தேவையற்ற புகழ் தன்னை சூழ்ந்து விடுமோ என்று பயந்தார். மெல்ல அயோத்தியிலிருந்தும் புறப்பட்டார். பல்வேறு தேசங்களையும், பெருநகரங்களையும், கிராமங்களையும் கடந்து ஆந்திர தேசத்திற்குள் நுழைந்தார். சுவாமிகள் எந்த ஊரில் நுழைந்தாலும் யாசகம் கேட்போரைப் போலத்தான் நடந்து கொள்வார். அங்குள்ள தெருக்களில் கீர்த்தனங்களை பாடியபடி செல்லும்போது மக்கள் அவரின் நாமகீர்த்தனத்திற்கு கட்டுப்பட்டு அவரை சூழ்ந்து கொள்வார்கள். இவ்வளவு சிறிய வயதில் எப்படி இந்த உஞ்சவிருத்தி என்கிற இந்த தர்மத்தைக் கைக்கொண்டார் என்று ஆச்சரியமுற்றனர்.

வெகுசிலருக்கே இவர் நிச்சயம் மகான்தான் என்று அருகே நெருங்கி நமஸ்கரித்தனர். சிலர் அந்த தம்பதியை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்ற பின்னரும் கூட தங்களுக்கு கிடைத்த உஞ்சவிருத்தி அரிசியிலேதான் சமையலையும் செய்து கொண்டனர். இவ்வாறாக ஆந்திர தேசத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது தாளப்பாக்கம் எனும் கிராமத்தில் நிறைய பாகவதர்கள் இருப்பதாக கேள்வியுற்று அங்கு சென்றார். அவர் நினைத்தது போன்றே அந்த ஊரே பாகவதர்களால் சூழப்பட்டிருந்தது. அண்ணமாச்சார்யார் மற்றும் சின்னையா ஸ்வாமி என்பவராலும் ஏற்படுத்தப்பட்ட சம்பிரதாயப்படி நாம கீர்த்தனம் செய்து வரும் பாகவதர்களை கண்டு பிரிய மனம் வராமல் அங்கேயே வசித்து வந்தார். அங்கிருக்கும்போது திருப்பதிக்கு வரும் யாத்ரீகர்கள் தாளப்பாக்கத்திற்கும் வந்துவிட்டுச் செல்வது வழக்கமாக இருந்தது. அந்நாட்களில் பல்வேறு மொழிகளை கற்றுக் கொண்டார்.

எல்லாவற்றையும்  விட கீத கோவிந்தத்திற்கு அதிக முக்கியத்துவமளித்தார். தனது இருதயத்திற்குள் கிருஷ்ண உபாசனையை ஏற்றுக் கொண்டார். இப்படியே ராமனையும் கிருஷ்ணரையும் தனது நெஞ்சத்தில் வைத்துக் கொண்டு பக்தி புரிந்தார். சத்குருவின் உள்ளத்தில் தகித்துக் கொண்டிருந்த ஞானாக்னி அவரின் வாக்குகளூடேயே சென்று மற்றவருக்குள்ளும் பாய்ந்தது. மெதுவாக அவர்களையும் எரிக்க ஆரம்பித்தது. விழிப்பை உண்டாக்கியது. நதியின் கரையினில் அமர்ந்து ஞானக் காற்றை சுவாசித்தார். தீர்த்தத்தை பருகியபடி பல நாட்கள் கழித்தார். அப்படி தான் வாழ்வதும் அவருக்கு பிடித்திருந்தது. பாகவதத்தில் கிருஷ்ண கதையை எடுத்துக் கொண்டு பதம் பதமாக அர்த்தம் புரிந்து படிக்கத் துவங்கினார். பாகவத ஸ்லோகங்கள் முதலில் மனதில் வாக்கியங்களாக கிடந்தன. மனம் வாக்கியங்களை மனனம் செய்து கொண்டே இருந்தது. ஏதோ ஒரு பிடிப்பு கிடைத்ததுபோல மனம் மெல்ல கதை ரூபமான ஸ்லோகங்களை பற்றின.

அந்த கதையின் அழகு முதலில் வசீகரித்தது. மீண்டும் மனதுக்குள் நெல்மணி போன்றிருந்த வாக்கியங்களுக்குள் மனதை செலுத்தினார். கண்களை மூடி தனித் தனியான வார்த்தைகளுக்குள் ஊடுருவினார். மெல்ல பாகவதம் இவரை நோக்கித் திரும்பியது. அந்த வார்த்தைகளின் அர்த்தங்கள் தத்துவங்களாக படராது அப்படியே அனுபூதியாக விரிந்தன. வெளியே இருக்கும் பாகவதம் உள்ளிருக்கும் ஆத்ம பாகவதத்தோடு ஒரு பிணைப்பை உண்டாக்கிக் கொண்டது. ஹா... என்னவொரு நிலை அந்த ஞானியினுடையது என்று அவ்வப்போது சிலிர்த்துப்போட்டது. தொடர்ந்து  உபதேசங்கள் உள்ளுக்குள் நகர்ந்தபடி இருந்தன. ராமாயணத்தைச் சுற்றும்போதே கதையின் மையமான ராம... ராம... எனும் நாமத்தை பிடித்தார். அதுபோல ஒவ்வொரு கதைகளாக மனம் உண்டது. ஆனால் தானும் அழியத் தொடங்கியது.

ஒரு யோகி மனதை தீவிரமாக கவனித்து அதைக் கட்டுவதை கீத கோவிந்த பாராயணம் அநாயாசமாகச் செய்வதை கண்டு ஆனந்தமானார். கிருஷ்ணரின் லீலைகள் மீண்டும் தனக்குள் நடப்பதை எண்ணி ஆனந்தமும் அதிர்ச்சியும் அடைந்தார். அவ்வப்போது பாவ சமாதியில் கரைந்தார். கிருஷ்ணா... கிருஷ்ணா... என்று தனியே புலம்பினார். பாலைவனத்தில் நீருக்காக அலைந்தவனிடத்தில் குவளை நிறைய நீரை கொடுத்தால் எப்படி குடிப்பானோ, அப்படித்தான் கீத கோவிந்தம் இவருக்குள் சென்றன. நீர் என்பது திரவமாக இருந்தாலும் அது கொடுக்கும் சுகம்தான் அனுபூதி. அப்படித்தான் காலமே தெரியாமல் மனம் ஏதேனும் ஒரு கதைக்குள் சொருகிக் கிடக்கும். ஜென்மாந்திர வாசனைகள், எண்ணங்கள் போன்றவை அழிந்து கொண்டே வந்தன. பாகவத சமுத்திரம் பரமாத்ம சொரூபம் சட்டென்று விளங்கியது. பேரருளும் பேரானந்தமும் பேரமைதியும் கவிழ்ந்தது.

ஏதோ பெருஞ்சக்தி அவனுக்குள் பாய்ந்து அவரை மூழ்கடித்தது. கீத கோவிந்த பாகவதத்தை ஆரம்பத்தில் பாராயணம் செய்வது போலிருந்தாலும், பாகவத தரிசனம்தான் இறுதியில் கிட்டுகிறது. தன்னை பார்க்கிறவர்களை அது பார்க்கிறது. தன்னை பார்க்கிறவர்களை தானாகவே ஆக்குகிறது. ஒருநாள் திடீரென்று திவ்யமான கனவொன்றினை கண்டார். அதாவது ‘‘உடனே புறப்பட்டு தெற்குப் பக்கமிருக்கிற தமிழகத்திற்கு செல்’’ என்று சந்நியாசி உருவில் ஒருவர் வந்து சொன்னவுடன், சட்டென்று புறப்பட்டார். அடுத்த சில மாதங்களில் சோழநாட்டிலுள்ள கற்குடி என்றழைக்கப்பட்ட மதனாந்தகபுரம் என்றும் அழைக்கப்பட்டுவந்த மருதாநல்லூரை அடைந்தார். ஊரிலுள்ள பெரியோர் அனைவருமே கூடிநின்று வரவேற்றனர்.. பிறகு அவர்களில் அளித்த இல்லத்திலேயே அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். தன்னுடைய கனவில் வந்தது சத்குரு போதேந்திர சுவாமிகள்தான் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்ந்தார். தன் எதிரே பல நூற்றாண்டுகளாக செய்யப்படப்போகும் பணி இருப்பதை திடமாக உணர்ந்தார்.    

கிருஷ்ணா

(ஞானியர்  தரிசனம் தொடரும்)

Related Stories: