தேர்தல் முடிவு வெளியான பிறகு இந்தியன் 2 ரிலீஸ்

சென்னை: கடந்த 1996ல் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடித்த ‘இந்தியன்’ படம் திரைக்கு வந்தது. தற்போது 28 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன், ஷங்கர் மீண்டும் இணைந்துள்ள படங்கள் ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ ஆகும். இதில் ‘இந்தியன் 2’ படம் வரும் ஜூன் மாதம் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் திரைக்கு வருவது உறுதி என்று, படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

முக்கிய வேடங்களில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக் கனி, பாபி சிம்ஹா நடித்துள்ளனர். 2வது பாகத்துக்கான படப்பிடிப்பு முடிந்தவுடன், ‘இந்தியன் 3’ படத்துக்கான படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது 3வது பாகத்துக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்தார். லைகா புரொடக்‌ஷன்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இரு படங்களுக்கும் அனிருத் இசை அமைக்கிறார்.

தற்போது ‘இந்தியன் 2’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணி நடந்து வருகிறது. வரும் ஜூன் மாதம் 4ம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ‘இந்தியன் 2’ படம் திரைக்கு வருகிறது. தற்போது நடந்து வரும் தேர்தல் பிரசாரம் முடிந்தவுடன், ‘தக் லைஃப்’ படத்தின் ஷூட்டிங்கில் கமல்ஹாசன் கலந்துகொள்கிறார். ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம் இணைந்து பணியாற்றும் படம் இது. அருண் விஜய், திரிஷா உள்பட பலர் நடிக்கின்றனர். துல்கர் சல்மானும், ஜெயம் ரவியும் விலகிவிட்டனர்.

 

The post தேர்தல் முடிவு வெளியான பிறகு இந்தியன் 2 ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: