காணிப்பாக்கம் கோயிலில் 4வது நாள் பிரமோற்சவம் : சின்ன சேஷ வாகனத்தில் விநாயகர் வீதி உலா

சித்தூர்: காணிப்பாக்கம் கோயில் பிரமோற்சவத்தின் 4வது நாளில் சின்ன சேஷ வாகனத்தில் விநாயகர் வீதி உலா வந்தார். இரவு பெரிய சேஷ வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சித்தூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி 21 நாட்கள் பிரமோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, 14ம் தேதி கோயிலில் கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கியது.

பிரமோற்சவத்தையொட்டி தினந்தோறும் பல்வேறு வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில், பிரமோற்சவத்தின் 4வது நாளான நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட சின்ன சேஷ வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீதி உலாவில் பக்தர்கள் விநாயகர் உட்பட பல்வேறு வேடங்கள் அணிந்தும் கோலாட்டம் ஆடியபடியும் பங்கேற்றனர். முன்னதாக விநாயகருக்கு உபயதாரர்கள் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த பட்டு வஸ்திரத்தை கோயில் செயல் அலுவலர் பூர்ண சந்திரராவ் உள்ளிட்டோர் பெற்று அர்ச்சகர்களிடம் வழங்கினர்.

தொடர்ந்து மதியம் சித்தி, புத்தி சமேத விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பல வண்ண மலர்களை கொண்டு அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க புஷ்ப யாகம் நடத்தினர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  இரவு தங்க பெரிய சேஷ வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று ரிஷப வாகனத்திலும், நாளை கஜ வாகனத்திலும் சுவாமி வீதி உலா வருகிறார்.

பிரமோற்சவத்தையொட்டி பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் அன்னப்பிரசாதம், குடிநீர் உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கோயில் பிரகாரம், கோபுரம், தெப்பக்குளம் உட்பட பல்வேறு பகுதிகள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுதவிர கோயில் தங்க கொடிமரத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கிறது.

Related Stories: