அளவற்ற செல்வம் அருளும் அங்காள பரமேஸ்வரி அம்மன்

புதுச்சேரி-முத்தியால்பேட்டை

ஆன்மீக பூமி என்றழைக்கப்படும் புதுச்சேரியில் முத்தியால்பேட்டை என்ற இடத்தில் அமைந்துள்ளது ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில். கோயிலின் பெயரால் அங்காளம்மன் நகர் என்றே இப்பகுதி அழைக்கப்படுகிறது. கோயிலில் உள்ள ராஜகோபுரம் 56 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. தீர்த்தக்குளம் 70 அடி நீளமும், 50 அடி அகலமும் கொண்டதாகும். தல விருட்சமாக புங்க மரம் உள்ளது.

 

தல வரலாறு:

தற்போது சோலை நகர் அருகில் பாப்பம்மாள் கோயில் என்று அழைக்கப்படும் இடம் 400 ஆண்டுகளுக்கு முன் வனப்பகுதியாக இருந்தது. அங்கிருந்த ஒரு ஆலமரத்தடியில் இருந்த கல்லில் அங்காளம்மன் குடி கொண்டிருப்பதாக ஒரு பெண் யாடிபடி அருள்வாக்கு கூறினார். இதையடுத்து, அந்த கல்லை பெயர்த்தெடுத்து தற்போது கோயில் இருக்கும் இடத்தில் வைத்து, அதன் மேல் அம்மன் சிலை வைத்து வழிபட ஆரம்பித்தனர். இக்கோயில் இருக்கும் இடம் நாட்டுக்கோட்டை செட்டியார் இனத்தவருக்கு சொந்தமானது. அவர்களே இவ்விடத்தை தானமாக கொடுத்து திருக்கோயிலையும் முதன் முதலில் கட்டினார்கள்.

அக்காலத்தில் ஒன்பது ஊர் மக்கள் அம்மனை வழிபட்டு வந்தனர். இக்கோயிலுக்கு கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயில் வளாகத்தை சுற்றி பால விநாயகர், கல்கத்தா காளி, அன்னபூரணி, புத்து அங்காள பரமேஸ்வரி, பூங்காவனத்தம்மன், துர்க்கா தேவி, பெரிய பாளையத்து பவானி அம்மன், சமயபுரத்து மாரியம்மன், தேவி கருமாரி அம்மன், மாரியம்மன், ஈஸ்வரன், ராமசீதா, பாவாடைராயன், பேச்சாயி அம்மன் உள்ளிட்ட சன்னதிகள் அமைந்துள்ளன.

மயானக்கொள்ளை:

ஆண்டுதோறும் பங்குனி மாத பிரம்மோற்சவம் (மயானக்கொள்ளை) வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசிக்கின்றனர். இதுதவிர, சித்திரை தமிழ் வருடப்பிறப்பன்று அம்மனுக்கு விசேஷ பூஜை நடைபெறுகிறது. மேலும், சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடி மாத உற்சவம், ஆடி அமாவாசை அன்று கடல் தீர்த்தவாரி, ஆடிப்பூரம், ஆடி கிருத்திகை, விநாயகர் சதுர்த்தி அன்று சக்தி விநாயகருக்கு விசேஷ அபிஷேகத்துடன் சாமி வீதியுலா, நவராத்தி பூஜை, கந்தர் சஷ்டி விழா, கார்த்திகை மாதம் சோமவாரம் மற்றும் அண்ணாமலையார் தீபம் ஏற்றுதல் விழா, மார்கழி மாத உற்சவம், மாசிமக பெருவிழாவுக்கு அம்மன் கடற்கரைக்கு சென்று கடல் தீர்த்தவாரி முடித்து வீதியுலா என ஒவ்வொரு சிறப்பு பூஜைகள் நடைபெறக்கூடிய திருத்தலமாக இது அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மனை பக்தியுடன் தரிசிப்போரின் வேண்டுதலை நிறைவேற்றி சகல வரங்களையும், அளவற்ற செல்வங்களையும் அருளுகிறார்.

செல்வது எப்படி?

புதுச்சேரி கோரிமேடு, காலாப்பட்டு வழித்தடத்தில் செல்லக் கூடிய பேருந்தில் ஏற வேண்டும். பேருந்து நிலையத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முத்தியால்பேட்டை மணிக்கூண்டு பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து கிழக்கு நோக்கி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல ஆட்டோ வசதியும் உள்ளது.

அம்மனுக்கு உகந்த ராகுகால பூஜை

பிரதி பவுர்ணமி, அஷ்டமி தினத்தன்று கோயில் வளாகத்தில் உள்ள கல்கத்தா காளிக்கு பூஜையும், பிரதி செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் துர்க்கா தேவிக்கு ராகுகால பூஜையும், பிரதி மாதம சங்கடஹர சதுர்த்தியில் பூஜையும் நடக்கிறது. இத்தகைய நாட்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோயிலின் நடை திறக்கப்படுகிறது. அதேபோல் காலை 8.30 மணி, மதியம் 12 மணி, மாலை 6.30 மணி, இரவு 9 மணிக்கு பூஜைகள், அபிஷேகங்கள் அம்மனுக்கு செய்யப்படுகிறது.

Related Stories: