திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்றிரவு கருடசேவை உற்சவம் : மோகினி அவதாரத்தில் சுவாமி வீதிஉலா

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான இன்று காலை மோகினி அலங்காரத்தில் சுவாமி வீதி உலா வந்தார். இரவு கருடசேவை உற்சவம் நடைபெறுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து பிரம்மோற்சவத்தின் 4ம் நாளான நேற்றிரவு சர்வ பூபாள வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார். பாற்கடலில் மந்திரகிரி என்ற மலையை வாசுகி எனும் பாம்பை கொண்டு தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்தனர். அப்போது கிடைத்த அமிர்தம் அசுரர்களிடம் இருந்து தேவர்களுக்கு மட்டும் கிடைக்க செய்யும் விதமாக மகா விஷ்ணு மோகினி அலங்காரத்தில் தோன்றி அமிர்தத்தை தேவர்களுக்கு கிடைக்க செய்தார்.

அதன்படி பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான இன்று காலை நாச்சியார் திருக்கோலத்தில் (மோகினி அலங்காரத்தில்) மாய மோகத்தை போக்கும் விதமாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுவாமி ஊர்வலத்தின்போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கோலாட்டம், ஆடியபடி கலந்து கொண்டனர். பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவை இன்றிரவு 7 மணிக்கு தொடங்கி நடக்கிறது. கருடசேவையில் சுவாமியை தரிசிக்க நாடெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கூடுதல் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை முதலே நான்கு மாட வீதிகளிலும் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

Related Stories: