ஒயிட் ரோஸ் விமர்சனம்

தனது மனைவி கயல் ஆனந்தியின் பிறந்தநாளை சர்ப்ரைஸாக ஓட்டலில் கேக் வெட்டி கொண்டாடிவிட்டு, ஒரே மகள் நக்‌ஷத்ராவுடன் பைக்கில் வீடு திரும்பும் விஜித், நடுரோட்டில் போலீசார் சில தீவிரவாதிகள் மீது நடத்திய என்கவுண்டரில், தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து பரிதாபமாக பலியாகிறார். இதனால் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படும் ஆனந்தி, மகளுடன் சேர்ந்து வறுமையில் வாடுகிறார். அப்போது பக்கத்து பிளாட் பெண் ஆனந்திக்கு தவறான வழிகாட்ட, வேறு வழியின்றி அதற்கு சம்மதிக்கும் ஆனந்தி, சைக்கோ வில்லன் ஆர்.கே.சுரேஷிடம் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்.

ஏற்கனவே வாங்கிய கடன் தொகையை கட்ட முடியாத நிலையில், நக்‌ஷத்ராவை கந்துவட்டிக்காரர் ராஜசிம்மன் கடத்திக்கொண்டு செல்கிறார். ஒருபுறம் காணாமல் போன மகள், இன்னொருபுறம் தன்னையும், தன்மானத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை. இந்நிலையில், செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேட நினைக்கும் போலீஸ் அதிகாரி ரூசோ ஸ்ரீதரன், ஆனந்திக்கு உதவி செய்தாரா என்பது மீதி கதை.

காதலித்து கலப்புத்திருமணம் செய்த கணவன் விஜித்தை இழந்து தவிக்கும் ஆனந்தி, பிறகு மகள் நக்‌ஷத்ராவை காணாமல் கலங்குவதும், சைக்கோவின் பிடியில் இருந்து தப்பிக்க தனி மனுஷியாக போராடுவதுமாக, ஆழமான கேரக்டரில் நடித்து, அழுத்தமான முத்திரை பதித்துள்ளார். தான் எப்போது கொல்லப்படுவோமோ என்ற பயத்தில், சைக்கோவின் வீட்டிலிருந்து தப்பிக்க போராடும் அவர், தனது நடிப்பின் மூலம் ஆடியன்சுக்கும் அந்த பதற்றத்தை கடத்தியிருக்கிறார். சிறப்புத்தோற்றம் என்றாலும், கச்சிதமாக நடித்துள்ளார் விஜித்.

போலீஸ் அதிகாரி ரூசோ ஸ்ரீதரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சசி லயா உள்பட அனைவரும் காட்சிகளின் வேகத்தை அதிகரிக்க பயன்பட்டுள்ளனர். இரவு நேர காட்சிகளில் ஒளிப்பதிவாளர் வி.இளையராஜா கடுமையாக உழைத்துள்ளார். பின்னணி இசையில் சுதர்சன் மிரட்டியுள்ளார். சைக்கோ கிரைம் திரில்லர் படம் என்பதால், ஏற்கனவே வெளியான பல படங்களின் சாயல் தெரிகிறது. காட்சிகளையாவது இயக்குனர் கே.ராஜசேகர் சற்று மாற்றி யோசித்திருக்கலாம். சைக்கோ கொலையாளியின் பின்னணி பற்றி தெரியும்போது, இதுவும் ஓரிரு படத்தில் வந்த விஷயம்தானே என்று தோன்றுகிறது.

The post ஒயிட் ரோஸ் விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: