முந்தி முந்தி விநாயகனே...

காஞ்சிபுரத்தை அடுத்த தேனம்பாக்கம் சிவாலயத்தில் அம்மையப்பனுடன் அருள்புரியும் சோமகணபதியை தரிசிக்கலாம். திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் உக்கிரத்தைத் தணிக்க ஆதிசங்கரர் தேவியின் காதுகளில் ஸ்ரீசக்ரம், சிவசக்ரம்பொறித்த தாடங்கங்கள் அணிவித்த பிறகும், உக்கிரம்  தொடர்ந்தது. உடனே ஆதிசங்கரர் அன்னையின் முன் விநாயகரைப் பிரதிஷ்டை செய்ய, உடனே தேவி குளிர்ந்தாள். அந்த விநாயகரை இன்றும் தரிசிக்கலாம். சென்னை கிழக்கு தாம்பரம் ஸ்கந்தாஸ்ரமத்தில் புவனேஸ்வரி அன்னையின் எதிரே சுவாமிநாதன் எனும்பெயரில் முருகப் பெருமான் அருள, விநாயகர், கமலவிநாயகராகத் திகழ்கிறார். திருப்பாதிரிப்புலியூர் எனும் கடலூரில் அன்னை பெரிய நாயகியின் தவத்திற்கு உதவிய விநாயகர் கையில் பாதிரி மலர்களை ஏந்தி தரிசனமளிக்கிறார்.

Advertising
Advertising

ஆந்திர மாநில ஸ்ரீசைலம், மல்லிகார்ஜுனர் ஆலயத்தில் கைகளில் எழுத்தாணி, ஏடு வைத்துக் கொண்டு சாட்சி கணபதி திருவருள்புரிகிறார். காஞ்சிபுரம் வேலூர் பாதையில் உள்ள திருவலம் திருத்தலத்தில் மாங்கனிக்காக அம்மையப்பனை வலம் வந்த விநாயகரையும் அந்த விநாயகருக்கு மாங்கனியை அளித்த தனுமத்யாம்பாளையும் தரிசித்து மகிழலாம். சென்னைநங்கநல்லூர் வழியில் உள்ளகரத்தில் விஜயகணபதி கோயில் கொண்டருள்கிறார். இந்த ஆலயத்தில் ஆண்டு முழுவதும் தினந்தோறும் கணபதி ஹோமம் நடைபெறுகிறது. பாற்கடல் தந்த அமிர்தத்தை தேவர்களும் அசுரர்களும் பங்குபெற முனைந்தபோது, தன்னை வணங்காததால் விநாயகர் மறைத்தார். தவறை உணர்ந்த தேவாசுரர்கள் அவரை வணங்க, அமிர்தத்தை காட்டியருளிய விநாயகரை திருக்கடவூரில் கள்ளவாரணப் பிள்ளையாராக தரிசிக்கலாம்.

லிங்கம் போன்ற பாண உருவமும் அதில் கணபதி உருவமும் கொண்ட வித்தியாசமான விநாயகரை தீவனூரில் பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் காணலாம். திருப்பூவனம் திருத்தலத்தில் மந்திர விநாயகர், கற்பகவிநாயகர், ஒட்டுக்கல் வெள்ளை விநாயகர் என மூன்று விநாயகப் பெருமான்கள் திருவருள் புரிகின்றனர்.

சுந்தரரும், சேரமான் பெருமானும் கயிலை சென்ற போது, கணபதி பூஜையை நடத்திக் கொண்டிருந்த ஔவையாரை, கணபதி பெரிய விஸ்வரூபம் எடுத்து அவர்களுக்கு முன்பே கயிலையில் சேர்த்தார். அவரை திருக்கோவிலூரில் பெரியானை கணபதியாக தரிசிக்கலாம். கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலய திருப்பணியை மேற்கொண்ட கணக்குப்பிள்ளையிடம் மன்னன் சந்தேகப்பட்டு கணக்கு கேட்க, கணக்கெழுதாத அவர் கணபதியிடம் புலம்ப, கணபதி கணக்கு விவரங்களை துல்லியமாக அவனுக்கு அறிவித்தார்.அந்த விநாயகர் கணக்கு விநாயகராக இன்றும் அருள்புரிகிறார்.

காஞ்சிபுரம் காமாட்சி ஆலயத்தில், சிந்தூர கணபதி, விக்ன நிவாரண கணபதி, பிரசன்ன கணபதி, இஷ்டசித்தி கணபதி, துண்டீர மகாராஜ கணபதி, சக்திகணபதி, சௌபாக்ய கணபதி, சந்தான கணபதி, வரசித்தி கணபதி, திருமஞ்சன கணபதி மற்றும் சந்நதி வீதியில் ஏலேல விநாயகர் என ஏகப்பட்ட கணபதிகள் அருள்கின்றனர். தன் தந்தையை வழிபட்ட நீலகண்ட விநாயகரை சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் தனி சந்நதியிலும் தன் தாயைப் போல் வடிவெடுத்த விக்னேஸ்வரி எனும் விநாயகரை ஆலய தூணிலும் தரிசிக்கலாம். நாவல், பவளமல்லி, வில்வம், அரசு, நெல்லி, அத்தி, மந்தாரை, வேம்பு, வன்னி ஆகிய ஒன்பது தலவிருட்சங்கள் சூழ வீற்றருளும் விநாயகரை மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் தரிசிக்கலாம். இவரை வழிபட நவகிரக தோஷங்கள் நீங்குகின்றன.

நாட்டரசன்கோட்டை அருகே, வாணியங்குடியில் அடைக்கலம் காத்த அம்மன் ஆலயத்தில் விநாயகப் பெருமான் அம்பிகை வடிவில் அருள்கிறார்.காஞ்சிபுரம் திருவோணகாந்தன் கோயில் விநாயகர் சந்நதி அருகில் காதை ஒட்டி வைத்துக் கேட்டால் ஓம் எனும் ஒலியைக் கேட்கலாம். அதனால் அவர் ‘ஓங்காரஒலி’ விநாயகர் என வணங்கப்படுகிறார். ஓர் அங்குலம் முதல் ஓரடி வரை உள்ள வித விதமான விநாயகர்களை தரிசிக்க கும்பகோணம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். சோழர் கால மன்னர்களின் அற்புதப் படைப்பு அவை. தன் இரு அன்னையர்களான கங்கையும் பார்வதியும் இருபுறங்களிலும் வீற்றிருக்க திருவருள் புரியும் விநாயகரை திருநெல்வேலி காரையாரில் உள்ள அருவிக்கரையில் தரிசிக்கலாம். விடியல் முதல் இரவு வரை விநாயகப்பெருமானின் திருவுருமுன்னேயே சுடச்சுட நெய் அப்பம் ஊற்றி அதை கணபதிக்கு அபிஷேகம் செய்யும் ஆலயம், கேரள மாநிலம் கொட்டாரக்கரையில் உள்ளது. பின் அந்த அப்பம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. 

Related Stories: