நீடித்த மாங்கல்ய வரமருளும் திருமங்கலம் பூலோகநாதர்

திருமங்கலம்

Advertising
Advertising

பூலோகவாசிகளுக்கு ஈசன் தனது திருமணக் கோலத்தை தரிசிக்க அருள்புரிந்த தலம் எது தெரியுமா? திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்ய குபேரன் பொன் பெற்று மாங்கல்யம் செய்த தலம் எது தெரியுமா? வசிஷ்டர்  அருந்ததி தம்பதியர் ‘மிருத்யுஞ்ஜெய ஹோமம் ’ செய்தபோது பிரயோக கால ஸம்ஹார மூர்த்தியாக, எமன், மார்க்கண்டேயர் சகிதம் ஹோமத்தீயிலிருந்து ஆவிர்பவித்த தலம் எது தெரியுமா?  இவை அத்தனைக்கும் ஒரே விடை ‘திருமங்கலம்’ என்ற இந்த தலமேயாகும். இத்தலம் மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள குத்தாலம்   திருமணஞ்சேரி இடையே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இது ‘ராஜராஜ திருமங்கலம்’ என்றும் ‘விக்கிரம சோழ திருமங்கலம்’ என்றும் அழைக்கப்படுகின்றது. விக்கிரம சோழன் ஆற்றங்கரை திருமணஞ்சேரிக்கு மிக அருகில் உள்ளது.

திருமணஞ்சேரியில் ஈசனுக்கும் உமைக்கும் திருமணம் முடிகிறது. இதில் கலந்துகொண்டு தரிசிக்க என தேவலோகமே திரண்டு விட்டது. எங்கு பார்த்தாலும் தேவர்கள்தான். இப்படி பூலோகவாசிகளான சாதாரண மக்கள் நம் திருமணத்தைக் காண முடியாது வருந்துகின்றனரே என்ற எண்ணம் அம்மை  அப்பன் மனதில் தோன்றியது. உடனே, ஸப்தபதி என்ற சடங்கை நிறைவேற்றுகிறதுபோல் ஏழு அடி எடுத்து வைத்தனர், அம்மையும்  அப்பனும். எந்தத் தலத்தில் தங்களது திருமணத்திற்கு ‘திருமாங்கல்யம் செய்யப்பட்டதோ, அந்தத் தலத்திற்கு வந்து நின்று காட்சி தந்தனர். இத்திருமணத்திற்கு மகாலட்சுமியே குபேரனிடம் பொன் எடுத்துக் கொடுத்ததாக ஐதீகம். இதைக் குறிக்கும் வகையில் இந்த ஊருக்கு மிக அருகில் ‘பொன்னூர்’ எனும் சிற்றூரும் உள்ளது. எனவே, திருமணம் கைகூடவும், ‘திருமாங்கல்ய தோஷம் எது இருப்பினும் அகலவும் இங்கு வந்து தரிசிக்கலாம்.

மேலும், ஈஸ்வர தம்பதியர் காட்சி கிடைத்தாலுமே, அந்த கணத்தை எந்நேரமும் நினைந்து, நினைந்து, அதிலேயே லயித்து அந்த ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டேயிருக்க நமது மனம் பக்குவப்பட வேண்டும். நாளாக நாளாக வெவ்வேறு விஷயங்களில் மனம் செல்வதால் பயமும், கவலையும், நோயும் நம்மை ஆட்கொள்கின்றன. இப்படி வாழ்வை கழிப்பதைவிட, இந்த ஈசனையே சரணடைந்து நற்பேறு பெறுவதே சாலச் சிறந்தது என்கிற காரணத்திற்காகவே ‘ஸப்தபதி’ கணத்தில் இத்தலத்திற்கு வந்திருந்த வசிஷ்டர்  அருந்ததி முதலானோர் ‘மிருத்யுஞ்ஜெய ஹோமம்’ செய்ய தலைப்பட்டனர். அதனை அவர்கள் செவ்வனே நடத்தி பூர்த்தி செய்யும் ‘ஆஹூதி’ வேளையில், அந்த வேள்வித் தீயிலிருந்து, யாகத்தின் பயனே இது என காட்டும் வண்ணம், நம் பூலோக நாயகன், முன்னர் மார்க்கண்டேயனை காக்க எமனை உதைத்த காலாந்தகன் ‘கால சம்ஹாரமூர்த்தி’ கையில் ஏந்திப் பிடித்த சூலாயுதம் பிரயோகத்திற்கு ஏந்திய நிலையில்

‘மார்க்கண்டேயன்எமன்’ சகிதம் காட்சி தந்தருளினார்.

வசிஷ்டர்  அருந்ததி முதலானோரும் இதர மக்களும், அனைவரும், இக்காட்சியில் மெய்விதிர்த்து மயிர்க் கூச்செறிந்து, ‘மகேஸ்வரா  ஸம்போ  சிவ சிவா’ என்று மண்ணில் வீழ்ந்து வணங்கினர். ஆகவே, சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நிகழ்வுகளை சிலா மூர்த்தமாக, பிரயோக கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் சந்நதியில் வேள்விகளோடு இங்கு நடத்தப்படுகின்றது. சிவராத்திரி அன்று, முதல் ஜாம பூஜையை இந்த திருமங்கல பூலோகநாதர் சந்நதியிலும், இரண்டாம் ஜாம பூஜையை அருகிலுள்ள தலமான மாங்குடியில் சிவலோக நாதர் தலத்தை தரிசிப்பதிலும், மூன்றாம் ஜாம பூஜையை அதற்கும் அருகிலுள்ள திருமிகு பொய்கைகுடி நாகநாதர் ஆலயத்தில் தரிசித்தும், பின்னர் நான்காம் ஜாம பூஜையை மீண்டும் தொடங்கிய இடமான இதே திருமங்கல பூலோக நாயகி சமேத பூலோக நாதர் சந்நதியில் தரிசித்தும் நிறைவு செய்தால் மூவுலகிலுள்ள சிவலிங்கங்ளையும் தரிசித்த பலன் கிட்டும்.

மற்றொரு விசேஷம் என்னவென்றால், இந்த ஆலயம், தன்னை ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்கிறது என்பதுதான். முதலில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அருகிலுள்ள விக்கிரம சோழனாற்று வெள்ளத்தால், இடிந்து, நிலை குலைந்து போய், பின்னர், விக்கிரம குலோத்துங்கனால் புதுப்பிக்கப்பட்டு தற்போது ஆயிரம் ஆண்டுகளாகிறது. இவ்வாறு புதுப்பிக்கப்பட்டமைக்கான கல்வெட்டு ஆதாரங்கள் காணக் கிடைக்கின்றன. தற்போது, ஆயிரம் ஆண்டுகள் கழிந்த நிலையில், மிகச் சமீபகாலம் வரை மரங்கள் முளைத்தும், புதர் மண்டியும், இடிந்தும், சிதிலமடைந்தும், அர்ச்சகர் தீபமேற்றி, ஒரு காலம் மட்டும் பூஜித்து வந்த நிலையில், மீண்டும் தன்னை புதுப்பித்துக் கொண்டுள்ளது. விக்கிரம குலோத்துங்கன் புதுப்பித்து ஆயிரம் ஆண்டுகள் ஆனபின் தன் நிலை அழிந்து, சிதிலமடைந்த நிலையிலிருந்த இந்த ஆலயத்தைக் காண ஒரு தம்பதியினர் வருகிறார்கள்.

இங்கு வந்து பார்த்தபோது இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள காலசம்ஹார மூர்த்தி விக்கிரகத்தைக் கண்டவுடன், தமது ‘சஷ்டியப்தபூர்த்தியை’ ஏன் இங்கே நடத்தக் கூடாது என நினைக்கிறார்கள். உருக்குலைந்திருக்கும் தரையை தற்கால முறைப்படி செப்பனிட்டு, அருள்மிகு காலசம்ஹார மூர்த்தியை ஒரு சுதையாலான பீடத்தில் பிரதிஷ்டை செய்வித்து, ஒரு நல்ல நாளில் சஷ்டியப்த பூர்த்திக்கான சடங்குகள், வேள்விகள் முதலியவற்றை நிகழ்த்துகிறார்கள்.  இந்த நிகழ்ச்சிக்குப்பின் காட்சி மாறுகிறது. இதுவரை இப்படியொரு ஆலயம் இருப்பது தெரிய வராது இருந்த நிலை மாறி ‘உழவாரப்பணி’ செய்யும் தொண்டர்கள் வருகை தருகிறார்கள். தங்கள் பணியை செய்கிறார்கள். ஆச்சரியமாக அதைத் தொடர்ந்து அரசு, ஒரு தொல்பொருள் ஆய்வக ஓய்வு பெற்ற அதிகாரியை அனுப்பி, மதிப்பீடு செய்து, அதன் அடிப்படையில், அவரது மேற்பார்வையில், மொத்த ஆலயத்தையும் எண்களிட்டு கற்களை பிரித்தும், அடுக்கியும், சேர்த்தும் தளமிட்டும், புதர்களை அகற்றியும் மிக விஸ்தாரமான ஆலயமாக மாற்றியது.

இத்தலத்து முருகன் கையில் ஜபமாலையுடன், மயில்மேல் அமர்ந்த ‘பிரம்ம சாஸ்தா’ நிலையில் காட்சி தருவதும், இத்தலத்து நந்தியம் பெருமான் தனது வலது முன் காலை தூக்கி வைத்து, புறப்பாட்டுக்கு தயார் நிலையில் எம்பெருமான் முன் அமர்ந்த நிலையில் உள்ளதும் மிகவும் விசேஷமானது. தற்போது இந்த ஆலயம் வழிபாட்டிற்குரிய முறையில் பணி நிறைவு செய்யப்பட்டு திருகுட முழுக்கிற்கு தயார் நிலையில் உள்ளது. திருமிகு பூலோக நாயகி சமேத பூலோக நாத ஸ்வாமி மீண்டும், பூலோக வாசிகளுக்கு அருட்பாலிக்கவும், ‘காலசம்ஹார மூர்த்தியாய்’ அருளவும் திருவுளம் கொண்டுள்ளார். இந்தப் பெரும் கைங்கரியத்தில் பங்கு உதவ விரும்புவோர் அர்ச்சகர் மோகன் அவர்களை 9486181657 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

கல்யாணராமன்

Related Stories: